வெளியிடப்பட்ட நேரம்: 20:52 (18/03/2018)

கடைசி தொடர்பு:20:59 (18/03/2018)

நிதாஹஸ் கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்திய அணி! - 167 ரன்களை இலக்காக நிர்ணயித்த வங்கதேசம்

நிதாஹஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கெதிராக முதலில் பேட் செய்த வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. 

Photo Credit: ICC/Twitter

இலங்கையின் 70-ம் ஆண்டு சுதந்திரதினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கை, இந்தியா, வங்கதேசம் ஆகிய அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி ஏற்கெனெவே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை நடந்த கடைசி லீக் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி வங்கதேசம் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. 

இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஃபீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்குப் பதிலாக, ஜெயதேவ் உனத்கட் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். வங்கதேச  அணி, இலங்கை அணிக்கு எதிரானக் கடைசி லீக் போட்டியில் விளையாடிய அதே அணியுடன் களமிறங்குகிறது. இந்த தொடரில் ஏற்கெனெவே நடந்த 2 லீக் போட்டிகளிலும் வங்கதேச அணியை இந்தியா வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். லிடன் தாஸை, தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் வெளியேற்றினார். அடுத்த ஓவரில் மற்றொரு தொடக்க வீரர் தமீம் இக்பால் மற்றும் சௌமியா சர்க்கார் ஆகியோரை சஹல் வெளியேற்றினார். நடப்பு தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முஷிஃபிகூர் ரஹ்மானையும் சஹல் வெளியேற்றினார். அடுத்த வந்த மகமதுல்லா 21 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்தவந்த கேப்டன் ஷகிப் அல் ஹசனும் ரன் அவுட் முறையிலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். ஒரு முனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிவந்த ஷபீர் ரஹ்மான், அரைசதம் அடித்தார். அவர் 50 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் சஹல் 3 விக்கெட்டுகளும், உனத்கட் 2  விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.