`மழையால் ஆட்டம் பாதிப்பு!’ - ஸ்காட்லாந்தை வீழ்த்தி உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் #WIvSCO

உலகக் கோப்பை தகுதிச் சுற்றின் சூப்பர் சிக்ஸ் சுற்றுப் போட்டியில் ஸ்காட்லாந்து அணியை, 5 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றது.

Photo Credit: Twitter/cricketworldcup

உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரின் சூப்பர் சிக்ஸ் சுற்றுப் போட்டி ஒன்றில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியும், ஸ்காட்லாந்து அணியும் மோதின. ஹராரே மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. போட்டியின் முதல் பந்திலேயே கிறிஸ் கெயில் ஆட்டமிழந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சியளித்தார். அடுத்த ஓவரில் ஷாய் ஹோப், ஆட்டமிழக்க 2 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து வெஸ்ட் இண்டீஸ் அணி தடுமாறியது. 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த எவின் லூயிஸ் மற்றும் மர்லன் சாமுவேல்ஸ் ஜோடி 121 ரன்கள் சேர்த்து அணியை சரிவிலிருந்து மீட்டது. லூயிஸ் 66 ரன்களிலும், சாமுவேல்ஸ் 51 ரன்களிலும் வெளியேறினர். அதன்பின்னர்  வெஸ்ட் இண்டீஸ் அணியின் சரிவு தொடங்கியது. பின்கள வீரர்களில் பிராத்வொயிட் மட்டும் 24 ரன்கள் எடுக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 48.4 ஓவர்களில் 198 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஸ்காட்லாந்து அணி தரப்பில் ஷரீஃப் மற்றும் பிராட் வீல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.    

199 ரன்கள் எடுத்தால் உலகக் கோப்பை தொடருக்குத் தகுதி பெற்றுவிடலாம் என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து அணி களமிறங்கியது. அந்த அணிக்கு வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுக்க 25 ரன்களைச் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து ஸ்காட்லாந்து அணி தடுமாறியது. 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மெக்லியாட் மற்றும் ரிச்சி பேரிங்டன் ஜோடி ஓரளவுக்குத் தாக்குப்பிடித்தது. அணியின் ஸ்கோர் 67ஆக இருந்த போது இந்த ஜோடியை அசத்தல் கேட்ச் மூலம் ஆஸ்லே நர்ஸ் பிரித்தார். மெக்லியாட் 21 ரன்களிலும், பேரிங்டன் 33 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஸ்காட்லாந்து அணி, 35.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வெஸ்ட் இண்டீஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சிறப்பாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்காட்லாந்து வீரர் ஷரீஃப் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!