`முகமது ஷமி மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபடவில்லை!’ - பி.சி.சி.ஐ விளக்கம்

இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபடவில்லை எனப் பி.சி.சி.ஐ-யின் ஊழல் தடுப்புப் பிரிவு விளக்கமளித்துள்ளது. 


முகமது ஷமிமீது மேட்ச் பிக்ஸிங் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை அவரின் மனைவி ஹாசின் ஜஹான் முன்வைத்தார். பாகிஸ்தானைச் சேர்ந்த அலிஷ்பா என்ற பெண்மணி மூலமாக முகமது பாய் என்பவரிடமிருந்து ஷமி பணம் பெற்றதாகவும் ஜஹான் குற்றம்சாட்டியிருந்தார். இதுதொடர்பாகக் கொல்கத்தா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மனைவியின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து வீரர்களுக்கான வருடாந்தர ஒப்பந்தப் பட்டியலில் ஷமியின் பெயரை பி.சி.சி.ஐ சேர்க்கவில்லை. இதுதொடர்பாக ஊழல் தடுப்புப் பிரிவின் தலைவர் நீரஜ் குமார் தலைமையில் விசாரணை நடத்தவும் பி.சி.சி.ஐ உத்தரவிட்டது. அதேபோல், ஊழல் தடுப்புப் பிரிவின் அறிக்கைக்குப் பின்னரே ஷமி, ஐ.பி.எல் தொடரில் பங்கேற்பது உறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 


இந்தநிலையில், முகமது ஷமி மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபடவில்லை எனப் பி.சி.சி.ஐ ஊழல் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது. மேலும், தோனி உள்ளிட்டோர் இருக்கும் `பி’ பிரிவு ஒப்பந்தத்தின்கீழ் அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், வரும் 7-ம் தேதி தொடங்கும் ஐ.பி.எல் தொடரில் முகமது ஷமி பங்கேற்பதில் எந்தச் சிக்கலும் இருக்காது. நடப்பு ஐ.பி.எல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி ஷமியை ஏலத்தில் எடுத்திருந்தது. ஷமி மற்றும் அவரின் குடும்பத்தினர் தன்னைக் கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் கொடுமை செய்ததாகவும் அவரின் மனைவி ஹாசின் ஜஹான் ஃபேஸ்புக் பதிவு மூலம் குற்றம்சாட்டியிருந்தார். ஆனால், அந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தனது பெயருக்குக் களங்கம் கற்பிக்கும் வகையில் ஜோடிக்கப்பட்டுள்ளதாக ஷமி தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வந்தார்.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!