இரண்டே பௌலர்கள்... 58 ரன்களுக்கு ஆல் அவுட்... இங்கிலாந்தைப் பந்தாடிய பிளாக் கேப்ஸ்! #NZvENG | New Zealand bundled England just for 58 in the first test

வெளியிடப்பட்ட நேரம்: 09:25 (23/03/2018)

கடைசி தொடர்பு:09:25 (23/03/2018)

இரண்டே பௌலர்கள்... 58 ரன்களுக்கு ஆல் அவுட்... இங்கிலாந்தைப் பந்தாடிய பிளாக் கேப்ஸ்! #NZvENG

'கர்மா இஸ் எ பூமராங்' என்பதை 63 ஆண்டுகள் கழித்து இங்கிலாந்துக்கு திருப்பி உணர்த்தியுள்ளது 'பிளேக் கேப்ஸ்'. 1955-ம் ஆண்டு இதே மார்ச் மாதம், இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் ஆக்லாந்தில் டெஸ்ட் போட்டியில் மோதின. அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 26 ரன்களுக்குச் சுருண்டது நியூசிலாந்து. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இன்றுவரை இதுதான் குறைந்த ஸ்கோர். இன்று, அதே மைதானத்தில், அதே எதிராளிகளைப் பந்தாடிவிட்டது நியூசிலாந்து. அவர்களைவிடக் குறைந்த ரன்னில் ஆல் அவுட் செய்ய முடியவில்லை. ஆனால், பேட்ஸ்மேன்களே பிராதமான இன்றைய காலகட்டத்தில், ஒரு ஆகச் சிறந்த பௌலிங் பெர்ஃபாமன்ஸைக் காட்டி மெர்சல் செய்துள்ளது நியூசிலாந்து. அதுவும் இரண்டே பௌலர்களைக் கொண்டு, 20.4 ஓவர்களில், 58 ரன்களுக்குச் சுருட்டி அசத்தியிருக்கிறது நியூசி! #NZvENG

trent bolt #NZvENG

டாஸ் வென்ற நியூசிலாந்து பௌலிங்கைத் தேர்வு செய்திருந்தது. "நான் டாஸ் ஜெயித்திருந்தால் பேட்டிங்தான் தேர்வு செய்திருப்பேன்" என்று ஜோ ரூட் கூறியதால், இங்கிலாந்து பயங்கரமான பிளானிங்கோடு இருப்பதாகவே தோன்றியது. அதற்கு மற்றுமொரு காரணம், ஜோ ரூட் மூன்றாவது வீரராக பேட்டிங் செய்ய முடிவெடுத்திருந்ததுதான். ஆஷஸ் போன்ற தொடர்களில் தொடர்ந்து சொதப்பியதால், இந்த முடிவை எடுத்திருந்தார் ரூட். இது இங்கிலாந்து அணிக்கு சாதகமாக இருக்குமென்றே தோன்றியது. மேலும், ஆஷஸ் தொடரில் சேர்க்கப்படாத நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆஷஸ் தோல்வி, முத்தரப்பு தொடர் தோல்விக்கெல்லாம், இங்கிலாந்து பதில் சொல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 'ட்ரென்ட் போல்ட் had other Ideas!' 

பிங்க் பால், சீம் பௌலிங்குக்கு உகந்த ஆடுகளம், பகல் - இரவு டெஸ்ட்... இதுபோன்ற சூழ்நிலையில், ஒரு பேட்ஸ்மேன் மிகவும் பொறுமையாக விளையாடவேண்டும். இங்கிலாந்து வீரர்களிடம் அது சுத்தமாக இல்லை. முதல் ஸ்பெல் (சொல்லப்போனால் அதுதான் அந்த இன்னிங்ஸின் ஒரே ஸ்பெல்!) வீசிய போல்ட் (6 விக்கெட்), டிம் சௌத்தி (4 விக்கெட்) இருவருமே பந்தை பெரும்பாலும் ஃபுல் லெந்தில்தான் பிட்ச் செய்தனர். நல்ல ஷைனிங்காக இருந்த புதிய பந்தாக இருந்ததால், 'லேட் மூவ்மென்ட்' அதிகமாக இருந்தது. அதற்குத் தகுந்ததுபோல் விளையாட இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சிரமப்பட்டனர். பௌலர்களின் பெர்ஃபெக்ஷன், பேட்ஸ்மேன்களின் மோசமான கேம் என இரண்டும் சேர்த்து, இந்த டெஸ்ட் இன்னிங்ஸை டி-20 இன்னிங்ச்ஸ் போல் மாற்றிவிட்டன.

boult #NZvENG

போல்ட்  1 - அலெய்ஸ்டர் குக் : ஐந்தாவது ஓவரின் முதல் பந்தை ஃபுல் லெந்தில் மிடில் ஸ்டம்ப் லைனில் வீசினார் போல்ட். அதை ஒருவழியாக தடுத்தாடினார் குக். அடுத்த பந்து... அதே லெந்த். ஆனால், இம்முறை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆனது. பிட்ச் ஆன வேகத்தில், லேட் மூவ்மென்ட்... பந்தை விட முடியாது, விளையாடியே தீரவேண்டும். ஸ்ட்ரோக் செய்ய நினைத்தார். அவுட் சைட் எட்ஜ். இரண்டாவது ஸ்லிப்பில் நின்றிருந்த டாம் லேதம் ஷார்ப்பாக அதைப் பிடிக்க, 1 ரன்னில் வெளியேறினார் குக். சொல்லப்போனால், அவரால் எதுவும் செய்திருக்க முடியாது. அந்த லேட் மூவ்மென்ட் எப்படிப்பட்ட பேட்ஸ்மேனுக்கும் சிக்கல் தரக்கூடியதுதான். 

போல்ட் 2 - ஜோ ரூட் : " It is a dream delivery for a left arm bowler" என்று வர்ணனையாளர் சொன்னது மிகச் சரி. அப்படியொரு பந்துதான் ரூட் விக்கெட்டைக் காவு வாங்கியது. இது போல்ட் வீசிய அடுத்த ஓவர். லெஃப்ட் ஆர்ம் ஓவரில் இருந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே, ஃபுல் லெந்தில் பிட்சான பால். டிரைவ் செய்வதற்கு உகந்த பால். அதற்குத்தான் ரூட் முயன்றார். ஆனால், போல்ட் அதை இன்ஸ்விங்காக அல்லவா வீசினார்! மின்னலென ஸ்விங் ஆகி ஸ்டம்புகளைப் பதம் பார்ததது அந்த பிங்க் நிற குக்கபரா பந்து. ரூட் டக் அவுட்!

போல்ட் 3 - டேவிட் மாலன் : போல்ட் வீசிய அடுத்த ஓவர். குக் எதிர்கொண்டதைப் போன்ற பந்து... சொல்லப்போனால் அதே மாதிரி பந்துதான். பௌன்ஸ் மட்டும் கொஞ்சம் கூட. மாலன் குக் ஆடியதைப் போலத்தான் அடினார். அதே விளைவு. என்ன இந்த முறை விக்கெட் கீப்பர் வாட்லிங் கேட்சைப் பிடித்தார். ஃபுல் லெந்த்...லேட் மூவ்மென்ட்... ஒவ்வொரு பந்திலும் அதைத் துல்லியமாக செயல்படுத்திக்கொண்டே இருந்தார் போல்ட்.

Boult #NZvENG

சௌத்தி 1 - மார்க் ஸ்டோன்மேன் : போல்ட் அடுத்தடுத்து விக்கெட்டுகளை அள்ளுவதற்கு மறுபுறம் சௌத்தி உதவி செய்துகொண்டிருந்தார். அவரும் அதே ஃபுல் லெந்த் ஃபார்முலாவை பக்காவாக ஃபாலோ செய்துகொண்டிருந்தார். அதுவரை ஏதோ கொஞ்சம் சமாளித்து ஆடிய ஸ்டோன்மேன், சௌத்தி வீசிய அந்த அற்புத பாலில் வீழ்ந்தார். அதே ஃபார்முலாதான். ஆனால், போல்ட் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு அவுட் சைட் மூவ்மென்ட் கொடுத்தார். செளத்தி கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டும் என்று இன்சைட் மூவ்மென்ட் கொடுக்க, ஸ்டோன்மேன் கொஞ்சம் ஆடிப்போனார். மீண்டும் அவுட் சைட் எட்ஜ், வாட்லிங் கேட்ச், மீண்டும் விக்கெட். இங்கிலாந்து 18/ 4!

போல்ட் 4 - பென் ஸ்டோக்ஸ் : செளத்தி ஸ்டோன்மேனை ஏமாற்றியதுபோல்தான், போல்ட் ஸ்டோக்ஸை ஏமாற்றினார். லேட் இன்சைட் மூவ்மென்ட். அதை சரியாகக் கணித்து ஆட முயற்சித்தார் ஸ்டோக்ஸ். ஆனால், அது போன வேகம்...! 135.5 கிலோமீட்டர் என்றுதான் ஸ்க்ரீனில் காட்டினார்கள். ஆனால், அது நம்பும்படி இல்லை. பந்து பிட்சான மறுநொடி பெயில்கள் பறப்பது மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தது. போல்ட் தன் கிரிக்கெட் வாழ்க்கையில் வீசிய மிகச்சிறந்த பந்துகளில் நிச்சயம் அதுவும் ஒன்று. கம்பேக் இன்னிங்ஸில் ஸ்டோக்ஸ் டக் அவுட்.

England batsmen #NZvENG

சௌத்தி 2 - ஜானி பேர்ஸ்டோ : அதுவரை அவுட்டான 5 பேட்ஸ்மேன்களுமே பௌலர்களின் மிரட்டல் பந்துவீச்சால் அவுட் ஆனார்கள். ஆனால், பேர்ஸ்டோ மிகமோசமான ஷாட் ஆடி வெளியேறினார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற சாதாரண பந்துதான். அதை வேண்டுமென்றே அட்டெம்ட் செய்து பௌலருக்கு திருப்பி அனுப்பினார். வந்த வேகத்தில், அட்டகாசமாக செளத்தி அதைப் பிடித்தார். கொஞ்சம் கடினமான கேட்ச். ஆனால், அதை அவ்வளவு எளிதாகப் பிடித்தார் சௌத்தி. 

போல்ட் 5 - கிறிஸ் வோக்ஸ் : சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. ரூட் அவுட்டான பந்தின் கார்பன் காபி. ஆனானப்பட்ட ரூட்டே சமாளிக்க முடியாமல் தடுமாற, வோக்ஸ் எம்மாத்திரம்?! ஸ்டம்ப்புகள் சிதறின. இங்கிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 23. நியூசிலாந்தின் குறைவான ஸ்கோர் சாதனையை இங்கிலாந்து தகர்த்துவிடுமோ என்றுகூடத் தோன்றியது. அந்த அளவுக்கு போல்ட், சௌத்தி இருவரும் வெறித்தனமாகப் பந்துவீசினர். 

சௌத்தி 3 - மொயீன் அலி : இந்தப் போட்டியிலேயே மிகமோசமாக அவுட்டானது இவர்தான். சௌத்தி ஸ்லோ ஃபுல் டாஸ்தான் வீசினார். மிடில் ஸ்டம்புக்கு நேரே வந்த அந்தப் பந்தை, ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே மிகவும் மெதுவாக அடிக்க முற்பட்டார் மொயீன் அலி. மிஸ்... போல்டு... 23-க்கு 8. இன்னும் 3 ரன்கள் எடுக்க முடியுமா..? இங்கிலாந்து வீரர்களின் பீதி அதிகரித்தது. 

tim Southee #NZvENG

இந்த பீதியை, பல கட்ட ஆலோசனைகளைக்குப் பிறகு கடைசி கட்டத்தில் அணியில் சேர்க்கப்பட்ட க்ரெய்க் ஓவர்டன் தீர்த்துவைத்தார். இதுபோன்ற சூழ்நிலையில் ஸ்ட்ரோக் செய்வதெல்லாம் சரிபட்ட வராது என்று அடித்து ஆடினார். அதனால், அந்த குறைவான ஸ்கோரைத் தாண்டியது இங்கிலாந்து. அந்த அணி 50 ரன்களைக் கடந்ததும் இவரால்தான். ஏதோ கடைசிவரை அவுட் ஆகாமல் 33 ரன்கள் எடுத்து, அணியின் கௌரவத்தைக் காத்துவிட்டார் இந்த இளம் வீரர்.

சௌத்தி 4 - ஸ்டுவார்ட் பிராட் : ஃபுல் லெந்த்தில் இல்லாமல், குட் லெந்தில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசினார் சௌத்தி. அதனால் அதை நன்றாக அடிக்க முற்பட்டார் பிராட். ஆனால், அவுட் சைட் எட்ஜாகி கல்லிக்கு இடதுபுறம் பறந்தது. அங்கு நின்றுகொண்டிருந்தவர் வில்லியம்சன். சட்டெனப் பாய்ந்து, இடது கையை நீட்டி அமர்க்களமாகப் பிடித்தார். அந்த ஒரு நொடி... வில்லியம்சனை எப்படிப் பாராட்டுவது என்று தெரியவில்லை.

இப்படிப்பட்ட ஒரு பிட்ச்சில் நான்காவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்வதைப் பற்றி பயம் கொள்ளாமல், இங்கிலாந்தை பேட் செய்ய அழைத்த கேப்டனைப் பாராட்டுவதா...? இல்லை, தனக்கு எதிரான இடது புறம் பாய்ந்து அசத்தலாகக் கேட்ச் பிடித்த ஃபீல்டர் வில்லியம்சனைப் பாராட்டுவதா...? கொஞ்சம் பொறுமை... பேட்ஸ்மேன் வில்லியம்சன் வெறித்தனமான இன்னிங்ஸை ஆடிக்கொண்டிருக்கிறார்.

#NZvENG

போல்ட் 6 - ஜேம்ஸ் ஆண்டர்சன் : நியூசிலாந்து பௌலராக இருந்துகொண்டு, ஷார்ட் பாலில் விக்கெட் வீழ்த்தாவிட்டால் அந்த இன்னிங்ஸ் எப்படி முழுமை அடையும்? ஆண்டர்சன் பேட்டிங் செய்தபோது, ஷார்ட் பால் வீசினார் போல்ட். அதை ஸ்லிப்களுக்கு மேல் ஆட ஆண்டர்சன் முற்பட, இதுவும் எட்ஜ். பாயின்ட் திசையில் நின்றிருந்த நிகோல்ஸ் எளிதாகப் பிடிக்க 58 ரன்களுக்கு இங்கிலாந்தின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. 

இருபதே ஓவர்களில் இங்கிலாந்தின் இன்னிங்ஸை முடிவுக்குக் கொண்டுவந்தார்கள் போல்ட், சௌத்தி இருவரும். ஒரே பிளான், அதை பெர்ஃபெக்டாக எக்ஸிக்யூட் செய்த விதம் மிரட்டல். ஆனால், இங்கு அந்த இருவரை மட்டும் பாராட்டுவது சரியல்ல. நியூசிலாந்தின் ஃபீல்டிங்கைப் பற்றியும் பேசவேண்டும். ஸ்லிப்பில் மிகவும் ஷார்ப்பாக நின்றிருந்த நியூசிலாந்தின் இந்த பெர்ஃபாமன்ஸ், இந்திய வீரர்களுக்கான பாடம். 

Williamson #NZvENG

ஃபீல்டிங்கின்போது மட்டுமல்ல, பேட்டிங்கிலும் தன் தரத்தை நிரூபித்துவிட்டார் வில்லி! பிராட், ஆண்டர்சன் இருவரையும் மிகவும் கவனமாக எதிர்கொண்டு, சரியான ஷாட்களை ஆடினார். பந்துகளை தேர்வு செய்து, மோசமான பால்களில் மட்டும் ரன் சேர்த்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய இன்னிங்ஸ் ஆடாத போதும், இவர் நிலைத்து நின்றுவிட்டார். 91 ரன்களுக்கு நாட் அவுட். முதல் நாள் ஆட்டநேர முடிவில் 117 ரன்கள் முன்னிலையில் பெற்றிருக்கிறது நியூசிலாந்து. இந்த நிதான ஆட்டம் தொடர்ந்தால், விரைவில் வில்லியம்சன் சதம் கடந்துவிடுவார். 4 நாள்கள் ஆட்டம் மீதமிருப்பதால், மிகப்பெரிய இன்னிங்ஸ் கட்டமைக்கும் வாய்ப்பும் இருக்கிறது!


டிரெண்டிங் @ விகடன்