வெளியிடப்பட்ட நேரம்: 18:52 (23/03/2018)

கடைசி தொடர்பு:18:52 (23/03/2018)

கொச்சி ஆடுகளப் பிரச்னை... சச்சினுக்கு ஆதரவளிக்கும் கங்குலி!

சதங்களின் சாம்ராஜ்யம் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் தசாப்தங்களில் ஆதிக்கம் செலுத்தியவர்களில் முதல்வனாக இருப்பவர்.
தன் கால் நூற்றாண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் சாதனைகளில் கோலோச்சிய இவர்  எப்போதும் பில்லியன் ரசிகர் படையோடு கொண்டாட கூடியவர். சச்சின் ரசிகர்களை பொறுத்தவரையில் அவர் ஆடும் காலத்திலேயே அடுத்த என்ன செய்வார் என எதிர்பார்த்து கொண்டே இருப்பார்கள். சச்சின் டெண்டுல்கரின் ஓய்வுக்கு பிறகும் இந்த எதிர்பார்ப்பு இருந்துகொண்டே தான் இருக்கிறது.

சச்சின்

அந்த வகையில் கிரிக்கெட் களத்தில் நிதானமாக பட்டையை கிளப்பியது மட்டுமல்லாமல் சமூக களப்பணியிலும் செவ்வெனே செயல்பட்டு கொண்டிருக்கிறார். அவ்வப்போது டிவிட்டரிலும் பல ஆலோசனைகளை கூறி வரும் சச்சின் தெண்டுல்கர் கிரிக்கெட்டை விடுத்து கபடி கால்பந்து போன்ற விளையாட்டுகளையும் கையில் எடுத்து ஊக்குவித்து வருகிறார்.

இந்நிலையில் கொச்சினில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் வரும் நவம்பர் மாதம் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் இடையேயான ஒருநாள் போட்டியை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. முதலில் பி.சி.சி.ஐ இந்தப் போட்டியை திருவனந்தபுரத்தில் நடத்தத்தான் திட்டமிட்டது. ஆனால், கேரளா கிரிக்கெட் சங்கம் வேண்டிக்கொண்டதால், பிறகு இப்போட்டி கொச்சிக்கு மாற்றப்பட்டது. 

கால்பந்து ஆடுகளத்தில் கிரிக்கெட் நடத்தினால் ஆடுகளத்தின் புல்தரை முற்றிலும் சேதம் அடைய வாய்ப்புள்ளதாக கேரளா கால்பந்து ரசிகர்களும் பத்திரிகையாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஜூனியர் உலகக் கோப்பைக்குப் பிறகு ஐஎஸ்எல் போட்டிகளும் இந்த மைதானத்தில் நடைபெற்றுள்ளன. எனவே இது கால்பந்து மைதானமாகவே நீடிக்கவேண்டும் என்பது அவர்களுடைய விருப்பமாக உள்ளது. அதுமட்டுமின்றி 17 வயதுக்குடபட்டோருக்கான உலகக் கோப்பைப் போட்டி இங்கு நடந்தது. அப்போது சிறந்த தரத்தில் இருப்பதாக ஃபிஃபா-வின் அங்கீகாரத்தை இந்த மைதானம் பெற்றிருந்தது. 

வினீத்

கேரள ஐஎஸ்எல் அணியின் வீரரான சிகே வினீத்தும் 'கிரிக்கெட்டுக்காக கால்பந்து ஆடுகளத்தை சேதப்படுத்தக் கூடாது' என தன் கருத்தை வெளியிட்டார். இதையடுத்து இந்திய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரியும் கொச்சி கால்பந்து மைதானத்தையும் அதன் ஆடுகளத்தையும் காப்பாற்றவேண்டும் என்று ட்விட்டரில் கோரிக்கை விடுத்தார். இவர்கள் மட்டுமல்லாத கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்காக விளையாடிய கால்பந்து வீரர் இயான் ஹியூம், முன்னாள் அமைச்சர் சசி தரூர் ஆகியோரும் இந்த ஆடுகளப் பிரச்னை குறித்து டிவிட்டரில் தங்களின் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். 

இதனை ஆதரிக்கும் வகையில்  டிவிட்டரில் பதிவிட்டுள்ள கேரள ஐஎஸ்எல் அணியின் இணை உரிமையாளருமான சச்சின் டெண்டுல்கர்  'சர்வதேச கால்பந்து சங்கம் ஃபிஃபா அங்கீகரித்த கால்பந்து மைதானம் குறித்து வலைப்படுகிறேன். கேரள கிரிக்கெட் சங்கம் சரியான முடிவை எடுக்க வேண்டும். திருவனந்தபுரத்தில் கிரிக்கெட்டும் கொச்சியில் கால்பந்தும் தனித்தனியே நடந்த வேண்டும்' என பிசிசிஐயின் வினோத் ராய் மற்றும் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரியை கேட்டுக்கொண்டுள்ளார்.

சச்சின்

திருவனந்தபுரம்  கிரீன் பார்க் ஸ்டேடியம் புதுப்பொலிவுடன் 29 ஆண்டுகளுக்கு பிறகு  கடந்த ஆண்டு தான் சர்வதேச போட்டி நடைபெற்றதால் கேரளா கிரிக்கெட் சங்கமும் விரைந்து நடவடிக்கை எடுக்குமெனத் தெரிகிறது. இந்நிலையில் சவ்ரவ் கங்குலி உட்பட பல பிரபலங்களும், கால்பந்து வீரர்களும், ரசிகர்களும் சச்சினின் கருத்தை ரீ ட்வீட் செய்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


டிரெண்டிங் @ விகடன்