விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட், கேன் வில்லியம்சன்... இந்த யுகத்தின் சிறந்த வீரர் யார்? | Who is the best cricketer of this generation?

வெளியிடப்பட்ட நேரம்: 09:28 (24/03/2018)

கடைசி தொடர்பு:09:28 (24/03/2018)

விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட், கேன் வில்லியம்சன்... இந்த யுகத்தின் சிறந்த வீரர் யார்?

சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, மார்க் வாக், கேரி கேர்ஸ்டன், சயீத் அன்வர் என்று முன்பு பரபரத்துக்கிடந்த கிரிக்கெட் உலகம் இன்று விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட், கேன் வில்லியம்சன் என செம ஹைப்பர் ரேஸில் சீறிக்கொண்டிருக்கிறது. முன்னவர்கள் டெஸ்ட், ஒருநாள் என இரண்டு ஃபார்மேட்டுகளில் மட்டுமே விளையாட இளையவர்கள் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று ஃபார்மெட்டுகளிலும் அதிரவைக்கிறார்கள். இந்திய ரசிகர்கள் விராட் கோலிதான் இந்த மில்லினியத்தின் சிறந்த வீரர் என்றால், ஆஸ்திரேலியர்கள் ஸ்டீவ் ஸ்மித்துடன் வந்து நிற்கிறார்கள். கிரிக்கெட்டின் கண்டுபிடிப்பாளர்களான இங்கிலாந்தோ ''ஜோ ரூட் மாதிரி ஒரு பேட்ஸ்மேன் இல்லவே இல்லை'' என சத்தியம் செய்கிறது. சத்தம் இல்லாமல் இவர்களின் எல்லா சாதனைகளையும் விரட்டி வந்துகொண்டிருக்கிறார் கேன் வில்லியம்சன்.... நால்வரில் யார் சிறந்த வீரர்?

கோலி

கோலிதான் சீனியர்!

நால்வருமே கிரிக்கெட் கரியரின் பீக் சீசனில்  இருக்கிறார்கள். 30 வயதுக்குள்ளான இந்த நால்வரில் இளையவர் ஜோ ரூட்தான். 27 வயதான ஜோ ரூட்டைவிட கிட்டத்தட்ட 3 வயது மூத்தவர் கோலி. வயதை ஒரு அட்வான்டேஜாக எடுத்துக்கொண்டால் ஜோ ரூட் மூவரையும்விட அதிக காலம் விளையாட வாய்ப்புண்டு. அதனால் அவரால் இன்னும் அதிகப் போட்டிகளில் விளையாடமுடியும். ஆனால், உலகத்திலேயே இந்திய அணிதான் அதிக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது என்பதால் கோலியை ஜோ ரூட் முந்துவரா என்பது சந்தேகம்தான். 

கோலி - ஜோ ரூட்

டெஸ்ட்டின் சூப்பர் ஸ்டார்?

நான்கு பேருமே டெஸ்ட்டில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான போட்டிகளில்தான் விளையாடியிருக்கிறார்கள். 66 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி, 5554 ரன்கள் அடித்துள்ளார். இதில் 21 சதங்கள் அடங்கும். 65 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட் 5701 ரன்கள் அடித்துள்ளார். இதில் ஜோ ரூட்டின் சதங்கள் 13. 63 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டீவ் ஸ்மித் 6187 ரன்கள் அடித்துள்ளார். ரன்களின் எண்ணிக்கையிலும் சதங்களின் எண்ணிக்கையிலும் ஸ்டீவ் ஸ்மித்தான் அதிகம். 23 சதங்கள் அடித்துள்ளார் ஸ்மித். இதேபோல 63 டெஸ்ட் போட்டிகளில்தான் விளையாடியிருக்கிறார் கேன் வில்லியம்சன். 5214 ரன்கள் அடித்திருக்கிறார். நியூஸிலாந்திலின் சாதனையாக எல்லோரது சத சாதனைகளையும் முந்தி 18 சதங்களோடு முதலிடத்தில் இருக்கிறார். 

டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை ஸ்டீவ் ஸ்மித்தான் சூப்பர் ஸ்டார். மற்ற மூவரையும்விட அதிக ஆவரேஜ் வைத்திருப்பவர் இவர்தான். எல்லோரும் 50 ரன்கள் ஆவரேஜாக வைத்திருக்க, 62.49 என்னும் பேட்டிங் ஆவரேஜோடு முதலிடத்தில் இருக்கிறார் ஸ்டீவ் ஸ்மித்.

கோலி - ஸ்மித்

ஒருநாள் கிரிக்கெட்டின் மாஸ்டர் பிளாஸ்டர்!

ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை சளைக்காமல் விளையாடிக்கொண்டேயிருக்கிறார் விராட் கோலி. மற்ற மூவரும் நூற்றுசொச்சப் போட்டிகளில் விளையாடியிருக்க கோலி 200 ஒருநாள் போட்டிகளைத்தாண்டிவிட்டார். 208 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் கோலி 9588 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 35 சதங்கள். 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 49 சதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரை, சதங்களின் எண்ணிக்கையில் மிகவிரைவில் கோலி கடந்துவிடுவார் என்பதே கிரிக்கெட் நிபுணர்களின் கணிப்பு. கோலிக்கு அடுத்தபடியாக 127 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் கேன் வில்லியம்சன் 5156 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 11 சென்சுரிக்கள்.  108 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் ஸ்டீவ் ஸ்மித் 3431 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 8 சதங்கள். 107 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் ஜோ ரூட், 4451 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 11 சதங்கள் அடங்கும்.

ஒருநாள் போட்டிகளைப் பொருத்தவரை கோலிதான் மாஸ்டர் பிளாஸ்டர். 58 ரன்கள் ஆவரேஜில் லீடிங்கில் இருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் கோலிக்கு அடுத்த சிறந்த வீரர் ஜோ ரூட்தான். இருவரையும் விரட்டி வந்துகொண்டிருக்கிறார் கேன் வில்லியம்சன். டெஸ்ட் போட்டிகளில் நம்பர் ஒன்னில் இருக்கும் ஸ்டீவ் ஸ்மித்துக்கு இங்கு கடைசி இடம்தான். ஒருநாள் போட்டிகளில் கன்சிஸ்டென்சி இல்லை என்பதுதான் ஸ்மித்தின் பிரச்னை. 

கோலி - வில்லியம்சன்

டி20யின் அதிரடி மன்னன்!

20/20 போட்டிகளிலும் அதிகம் விளையாடியிருப்பவர் கோலிதான். 57 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கிறார் கோலி. அடுத்தபடியாக கேன் வில்லியம்சன் 51 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கிறார். போட்டிகளின் எண்ணிக்கையில் ஜோ ரூட்டும், ஸ்டீவ் ஸ்மித்தும் கோலி, கேன் வில்லியம்சனைவிட மிகவும் பின்னால் இருக்கிறார்கள். ஜோ ரூட் வெறும் 25 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்க, ஸ்டீவ் ஸ்மித் 30 ட்வென்ட்டி ட்வென்ட்டி போட்டிகளில் விளையாடியிருக்கிறார்.

ரன்களின் எண்ணிக்கையிலும் கோலிக்குத்தான் முதலிடம். 1983 ரன்களுடன் லீடிங்கில் இருக்கிறார் கோலி. ஒரு நாள் சதங்களின் எண்ணிக்கையில் சச்சினோடு போட்டிபோடும் கோலி இதுவரை சர்வதேச 20/20 போட்டிகளில் ஒரு சதம்கூட அடித்ததில்லை. 18 அரை சதங்கள் அடித்திருக்கும் கோலியின் அதிகபட்சம் 90 ரன்கள். இவரின் ரன் ஆவரேஜ் 50.84. கோலிக்கு அடுத்தபடியாக 1316 ரன்கள் அடித்திருக்கிறார் கேன் வில்லியம்சன். 8 அரை சதங்கள் அடித்திருக்கும் இவரின் அதிகபட்ச ஸ்கோர் 73. இவரின் ரன் ஆவரேஜ் மிகவும் சுமார். 31.33 ரன்களைத்தான் ஆவரேஜாக வைத்திருக்கிறார் வில்லியம்சன். 20/20 கிரிக்கெட்டில் ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித் இருவருமே கத்துக்குட்டிகள். இருவரின் ரன் எண்ணிக்கையுமே 1000 ரன்களுக்குள்தான். இதில் ஸ்மித்தைவிட பெட்டர் பேட்ஸ்மேன் ஜோ ரூட் என்பதே இங்கிலாந்து ரசிகர்களுக்கான ஆறுதல். 

கோலி

டெஸ்ட், ஒருநாள், 20/20 என மூன்று கிரிக்கெட் ஃபார்மெட்டுகளிலுமே செம கன்சிஸ்டென்ட்டாக இருக்கும் ஒரே வீரர் விராட் கோலி மட்டுமே. மூன்றுவகையான கிரிக்கெட்டிலுமே ஆவரேஜ் 50 ரன்களுக்கு மேல் வைத்திருக்கிறார் கோலி... சிக்ஸர்கள் பறக்க, பவுண்டரிகள் தெறிக்க ரன் மிஷினாக போட்டுப்பொளக்கும் கோலியின் ஆட்டமே வேற லெவலில் இருக்கிறது.  

இப்போது சொல்லுங்கள் இந்தத் தலைமுறையின் சிறந்த கிரிக்கெட் வீரர் யார்?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்