இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்குத் தயாராக விராட் கோலி எடுத்த புதிய முடிவு! | Virat Kohli to play England county cricket

வெளியிடப்பட்ட நேரம்: 16:23 (24/03/2018)

கடைசி தொடர்பு:16:39 (24/03/2018)

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்குத் தயாராக விராட் கோலி எடுத்த புதிய முடிவு!

இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்குத் தயாராகும் வகையில், அந்நாட்டு உள்ளூர் தொடரான கவுன்டி கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தயாராகி வருகிறார். 

விராட் கோலி

வரும் ஜூன் மாதத்தில் இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதைக் கருத்தில் கொண்டு இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட்டில் விளையாட விராட் கோலி முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து பேசிய பெயர் குறிப்பிட விரும்பாத பிசிசிஐ நிர்வாகி ஒருவர், ``இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட்டில் விராட் கோலி விளையாடுவது உறுதி. இதுதொடர்பாக சர்ரே மற்றும் எஸெக்ஸ் ஆகிய அணி நிர்வாகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் இதற்குமேல் என்னால் ஒன்றும் கூற முடியாது’’ என்று தெரிவித்துள்ளார். விராட் கோலி அநேகமாக சர்ரே அணிக்காகவே விளையாடுவார் என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை மனதில் வைத்தே, அதற்குத் தயாராகும் வகையில் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாட விராட் கோலி ஆர்வம் காட்டி வருகிறார். வரும் ஏப்ரல் மாதம் தொடங்கும் ஐ.பி.எல். தொடரில் ராயல் பெங்களூரு சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடும் கோலி, அந்தத் தொடருக்குப் பின்னர் இங்கிலாந்து செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிராக வரும் ஜூன் 14-ம் தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது. 

கடந்த 2014-ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த விராட் கோலி, அந்தத் தொடரில் ஓர் அரைசதம் கூட அடிக்கவில்லை. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய கோலி, 134 ரன்கள் மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது.