`7 ஓவரில் 154 ரன்கள்’’ - 20 பந்துகளில் சதமடித்து மிரட்டிய சாஹா!

மேற்குவங்க உள்ளூர் டி20 தொடரில் மோஹுன் பாகன் அணிக்காக விளையாடிய ரித்திமான் சாஹா, 20 பந்துகளில் சதமடித்து அசத்தினார். 

விர்திமான் சாஹா

Photo Credit: Twitter/Mohun_Bagan


ஜே.சி. முகர்ஜி கோப்பைக்கான உள்ளூர் டி20 தொடர் மேற்குவங்க மாநிலத்தில் நடந்து வருகிறது. அந்தத் தொடரின் லீக் போட்டி ஒன்றில் மோஹூன் பாகன் அணியும், பெங்கால் நாக்பூர் ரயில்வேஸ் அணியும் மோதின. அந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த பெங்கால் நாக்பூர் ரயில்வேஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. 152 ரன்கள் இலக்கை நோக்கிக் களமிறங்கிய மோஹூன் பாகன் அணி, 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 154 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 

அந்த அணியின் தொடக்க வீரரான ரித்திமான் சாஹா, 20 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில், 14 சிக்ஸர்களும், 4 பவுண்டரிகளும் அடங்கும். அதிலும் குறிப்பாக அமன் பிரசோத் வீசிய 7-வது ஓவரில் தொடர்ச்சியாக 6 சிக்ஸர்களை சாஹா விளாசினார். அந்த ஓவரில் ஒரு வைட் வீசப்பட்டு, 37 ரன்கள் எடுக்கப்பட்டது. மற்றொரு தொடக்க வீரரான சுபோமோய் தாஸ் 22 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். உலக அளவில் நடைபெறும் அங்கீகரிக்கப்பட்ட டி20 தொடர்களைப் பொறுத்தவரை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர் கிறிஸ் கெயில் 30 பந்துகளில் சதமடித்ததே சாதனையாக இருந்து வருகிறது. ஐபிஎல் தொடரின் 11-வது சீசனில் சாஹாவை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.5 கோடிக்கு ஏலம் எடுத்தது. 

போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சாஹா, ``என்னால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்பதை முதல் பந்திலேயே நான் உணர்ந்துகொண்டேன். இது சாதனையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், ஐபிஎல் தொடரைக் கருத்தில் கொண்டு வித்தியாசமான ஷாட்களை விளையாடத் தீர்மானித்தேன்’’  என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!