வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (24/03/2018)

கடைசி தொடர்பு:17:30 (24/03/2018)

டேரன் சமிதான் சூப்பர்ஸ்டார்... பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் என்னதான் நடக்கிறது?

டேரன் சமி

சத்தமே இல்லாமல் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது பாகிஸ்தான் சூப்பர் லீக். இந்தியாவின் ஐ.பி.எல் வெற்றியைப் பார்த்து பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் ஆரம்பித்ததுதான் பாகிஸ்தான் சூப்பர் லீக். மூன்றாவது சீசனான இந்த ஆண்டுக்கான போட்டிகள் துபாயிலும், ஷார்ஜாவிலும் நடக்க குவாலிஃபையர் மற்றும் இறுதிப்போட்டி பாகிஸ்தானில் நடக்கிறது. நாளை (மார்ச் 25) கராச்சியில் நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் டேரன் சமி தலைமையிலான பெஷாவர் ஸால்மி அணியும், டூமினி தலைமையிலான இஸ்லாமாபாத் யுனைடெட் அணியும் மோதுகின்றன.

இதுவரை நடந்து முடிந்த சீசன்களில் 2016-ல்  இஸ்லாமாபாத் யுனைடெட் அணியும், 2017-ல் பெஷாவர் ஸால்மியும் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கின்றன. அதனால் இப்போது இரண்டு சாம்பியன்களுக்கு இடையேயான மோதல், அதுவும் பாகிஸ்தான் மண்ணில் என்பதால் இறுதிப் போட்டிக்கான பரபரப்பு ஏகத்துக்கும் கூடியிருக்கிறது.

இறுதிப் போட்டிக்குள் வந்தது எப்படி?

மொத்தம் ஆறு அணிகள் மோதிய பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் முதல் குவாலிஃபையரில் இஸ்லாமாபத் அணி  கராச்சி அணியைத் தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருக்கிறது. இயான் மோர்கன், இங்கிராம், ஷாகித் அஃப்ரிடி உள்ளிட்ட பல ஸ்டார் வீரர்களைக்கொண்ட கராச்சி அணியை இஸ்லாமாபாத் வெல்லக் காரணம் நியூஸிலாந்தின் ரோன்ச்சி. நாட் அவுட் பேட்ஸ்மேனாக 94 ரன்கள் அடித்து இஸ்லாமாபாத் அணியை நேரடியாக இறுதிப்போட்டிக்குள் அழைத்துவந்தார் ரோன்ச்சி.

எதிர்பக்கம் டேரன் சமியின் பெஷாவர் ஸால்மி அணி. முதல் எலிமினேட்டர் போட்டியில் க்வெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியிடம் இருந்து தப்பிப் பிழைத்தது பெஷாவர். ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் வென்ற பெஷாவர் இரண்டாவது எலிமினேட்டரில் கராச்சி அணியை சந்தித்தது. ஓப்பனிங் இறங்கிய பெஷாவரின் கம்ரான் அக்மல், ஃப்ளெட்சர் என இருவரும் கராச்சி பெளலிங்கை சிதைக்க, கடைசியில் வந்த டேரன் சமி 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரி உள்பட  12 பந்துகளில் 23 ரன்கள் அடித்து கேப்டன் கெத்து காட்டினார்.

மழைக்காரணமாக 16 ஓவர்கள் மட்டுமே கொண்ட இந்தப் போட்டியில் கராச்சியின் சேஸிங்தான் யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட். இரண்டாவது ஓவரிலேயே முதல் விக்கெட் வீழ்ந்துவிட  இங்கிலாந்து வீரர் டென்லியும், பாகிஸ்தானின் பாபர் ஆஸமும் ஜோடி சேர்ந்தனர். சிறப்பாக,  விக்கெட் இழக்காமல் ஆடிய இதுவரும் வெற்றிக்காக ஆடவில்லை என்பதுதான் பிரச்னையே.  11 - ஆவது ஓவரில் 100 ரன்கள் அடித்தவர்கள் இன்னும் 6 ஓவரில் 70 ரன்கள் அடிக்கவேண்டும் என்ற எந்த பரபரப்பும் இல்லாமல் ஆடியதோடு விக்கெட்டை இழக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர். இதனால் அடித்து ஆட அடுத்து பேட்ஸ்மேன்கள் பலர் இருந்தும் டென்லி, பாபர் ஆஸமின் மொக்கை ஆட்டத்தால் தோல்வியடைந்தது கராச்சி.

இறுதிப் போட்டியில் வெற்றி யாருக்கு?

காலில் காயம் ஏற்பட்டபோதும் சிக்ஸர்களைப் பறக்கவிட்டு அணிக்குப் பல வெற்றிகளைப் பெற்றுத்தந்த டேரன் சமியைத்தான் சூப்பர் ஸ்டாராக கொண்டாடுகிறது பெஷாவர். பேட்டிங்கில் கம்ரான் அக்மலும், மொஹமத் ஹஃபீஸும் பெஷாவரின் பெரிய பலங்கள். அதே போல் பாகிஸ்தானின் ஸ்டார் பெளலர் வஹாப் ரியாஸும் பெஷாவர் அணியில்தான் இருக்கிறார்.

டேரன் சமி

நியூஸிலாந்தின் ரோன்ச்சி, தென் ஆப்ரிக்காவின் டூமினி என இந்த ஃபாரின் காம்போவைத்தான்  நம்பியிருக்கிறது இஸ்லாமாபாத் அணி. 43 வயதான கேப்டன் மிஸ்பா உல் ஹக் காயம் காரணமாக விலகியிருப்பதால்  குவாலிஃபையரில் இருந்து டூமினிதான் கேப்டன். பெளலிங்கில் முகமது சமியையும், ஃபஹிம் அஷ்ரஃபையும் அதிகம் நம்பியிருக்கிறார் டூமினி.

ரோன்ச்சி, கம்ரான் அக்மல் என இரண்டு ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள்தான் இரண்டு அணிகளின் தலையெழுத்தையுமே தீர்மானிக்க இருக்கிறார்கள். டூமினியைவிட சமி கேப்டன்ஷிப்பில் அனுபவம் வாய்ந்தவர் என்பதால் பெஷாவர் ஸால்மி அணிக்கு சாமியின் பலம் அதிகம் என்கிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள்.

நாளைவரை பொறுத்திரு மனமே!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்