வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (25/03/2018)

கடைசி தொடர்பு:20:30 (25/03/2018)

சாலை விபத்தில் சிக்கி காயமடைந்த முகமது ஷமி!

சாலை விபத்தில் சிக்கி காயமடைந்த முகமது ஷமி!

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து டெல்லிக்கு காரில் பயணித்த இந்தியக் கிரிக்கெட் வீரர் முகமது ஷமி சாலை விபத்தில் சிக்கி காயமடைந்தார்.

முகமது ஷமி

முகமது ஷமி மீது மேட்ச் பிக்ஸிங் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை அவரின் மனைவி ஹாசின் ஜஹான் முன்வைத்தார். பாகிஸ்தானைச் சேர்ந்த அலிஷ்பா என்ற பெண்மணி மூலமாக முகமது பாய் என்பவரிடமிருந்து ஷமி பணம் பெற்றதாகவும் ஜஹான் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், தன்னைக் கொலை செய்ய முயன்றார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை ஷமி மீது அவரது மனைவி கூறியிருந்தார். இதுதொடர்பாகக் கொல்கத்தா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மனைவியின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து வீரர்களுக்கான வருடாந்தர ஒப்பந்தப் பட்டியலில் ஷமியின் பெயரை பி.சி.சி.ஐ சேர்க்கவில்லை. இதுதொடர்பாக ஊழல் தடுப்புப் பிரிவின் தலைவர் நீரஜ் குமார் தலைமையில் நடந்த விசாரணையில் ஷமி குற்றமற்றவர் என தெரியவரவே, அவர் `பி’ கிராடு ஒப்பந்தத்தின் கீழ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதேபோல் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் ஷமி பங்கேற்கலாம் எனவும் பிசிசிஐ பச்சைக்கொடி காட்டியுள்ளது. 

இந்திய ஏ அணி வீரர் அபிமன்யூவின் தந்தை ஈஸ்வரன் டேராடூனில் நடத்திவரும் கிரிக்கெட் அகாடமியில் ஷமி கடந்த 2 நாள்களாகப் பயிற்சி மேற்கொண்டார். பயிற்சிக்குப் பின்னர் கார் மூலம் அவர் டெல்லி கிளம்பினார். அப்போது அவர் பயணித்த கார் விபத்தில் சிக்கியது. இதில், ஷமிக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து பேசிய ஈஸ்வரன், ``ஷமி பயணித்த கார் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கியது. இதில், அவருக்கு தலையில் சிறிய அளவிலான காயம் ஏற்பட்டது. விபத்தைத் தொடர்ந்து உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தலையில் தையல் போடப்பட்டுள்ளது. ஒருநாள் ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அவரை அறிவுறுத்தி உள்ளனர். மற்றபடி அவருக்கு பெரிய காயங்கள் ஏதுமில்லை’’ என்றார்.