`சர்வதேச ஒருநாள் போட்டிகள் அதிவேக 100 விக்கெட்டுகள்!’ - ஸ்டார்க் சாதனையை முறியடித்த ஆஃப்கன் இளம் வீரர்

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற சாதனையை ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் படைத்தார். அவர் 44-வது போட்டியில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

ரஷீத் கான்

Photo Credit: Twitter/ACBofficials

உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஜிம்பாப்வேயில் நடந்து வருகின்றன. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் முன்னாள் உலகச் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியும், ஆஃப்கானிஸ்தான் அணியும் மோதுகின்றன. இதில், முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 204 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷாய் ஹோப்பின் விக்கெட்டை வீழ்த்திய ரஷீத் கான், ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற மைல்கல்லை எட்டினார். சர்வதேச அளவில் 44-வது ஒருநாள் போட்டியில் விளையாடும் ரஷீத் கான், 52 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை முறியடித்தார். கடந்த 2016-ல் இந்த சாதனையை ஸ்டார்க் படைத்திருந்தார். 19 வயதான ரஷீத் கான்,  ஆப்கானிஸ்தான் அணியின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறார். சர்வதேச ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரஷீத், தனது 26-வது போட்டியில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றின் லீக் போட்டிகளில் ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து மற்றும் ஹாங்காங் அணிகளுக்கெதிரான போட்டிகளில் ஆஃப்கானிஸ்தான் அணி தோல்வியைத் தழுவியிருந்தது. ஆனால், சூப்பர் சிக்ஸ் சுற்றில் வெஸ்ட் இண்டீஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அயர்லாந்து அணிகளை வீழ்த்தி உலகக் கோப்பை தொடருக்குத் தகுதி பெற்றது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!