வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (25/03/2018)

கடைசி தொடர்பு:21:30 (25/03/2018)

வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி சாம்பியனான ஆஃப்கானிஸ்தான்!

வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி சாம்பியனான ஆஃப்கானிஸ்தான்!

உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றின் இறுதிப் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய ஆஃப்கானிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 

அகமது ஷெசாத்

Photo Credit: Twitter/cricketworldcup

உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஜிம்பாப்வேயில் நடைபெற்றனர். ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடந்த தொடரின் இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆஃப்கானிஸ்தானின் சிறப்பான பந்துவீச்சால் 46.5 ஓவர்களில் 204 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ரோமன் பவெல் 44 ரன்களும், ஹெட்மெயர் 38 ரன்களும் எடுத்தனர். ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் முஜீப் உர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளும், குல்பாடின் நயீப் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷாய் ஹோப் விக்கெட்டைக் கைப்பற்றிய ஆஃப்கானிஸ்தான் இளம் சுழற்பந்துவீச்சாளர் ரஷீத் கான், 44 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்தார். 

இதையடுத்து 205 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு தொடக்க வீரர்கள் ஷெசாத் - நயீப் ஜோடி நல்ல தொடக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்த நிலையில் 14 ரன்களுடன் நயீப் ஆட்டமிழந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு ஷெசாத்துடன் கைகோத்த ரஹ்மத் ஷா, ஆஃப்கானிஸ்தான் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தது. ஷெசாத் 84 ரன்களும், நயீப் 51 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 40.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய ஆஃப்கானிஸ்தான் அணி, முதன்முறையாக உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றில் சாம்பியன் பட்டம் வென்றது.