வெளியிடப்பட்ட நேரம்: 20:47 (27/03/2018)

கடைசி தொடர்பு:20:55 (27/03/2018)

`குழந்தைகளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க 15 மணி நேரம் பயணித்தேன்!’ - வைரலாகும் ஷிகர் தவானின் வீடியோ

ஆஸ்திரேலியாவில் படித்துவரும் தனது குழந்தைகளுக்கு ஷிகர் தவான் கொடுத்த சர்ப்ரைஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

குடும்பத்தினருடன் ஷிகர் தவான்.

மூன்றுவித பார்மெட்டிலும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக முத்திரை பதித்து வருபவர் ஷிகர் தவான். தென்னாப்பிரிக்க தொடர், இலங்கையில் நடந்த முத்தரப்பு டி20 தொடர் என சமீபத்தில் நடைபெற்ற தொடர்களில் அவர் அசத்தினார். இதன் காரணமாக, பி.சி.சி.ஐ-யின் சம்பள உயர்வில் வருடத்திற்கு ரூ.7 கோடி பெறும் ஏ+ பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இதற்கிடையே, தொடர்ச்சியான போட்டிகளில் பங்கேற்று வருவதால் தனது குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க முடியாமல் தவித்து வந்தார் தவான். ஆனால் தற்போது முத்தரப்பு தொடர் முடிவடைந்துடன், ஐ.பி.எல் தொடர் அடுத்த மாதமே தொடங்கவுள்ளதால் ஒரு வார காலம் ஓய்வு அவருக்குக் கிடைத்துள்ளது. 

இதனையடுத்து, தனது குழந்தைகளைக் காண ஆஸ்திரேலியா பறந்துள்ள அவர், அங்கு தனது குழந்தைகளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அவர்களுக்கு தெரியாமலே, அவர்களை பார்க்க சென்றார். திடீரென தந்தையை பார்த்த மகிழ்ச்சியில் அவர்களும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்தக் காட்சிகளை ஷிகர் தவான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "என் அழகான குழந்தைகளை ஆச்சரியப்படுத்த கிட்டத்தட்ட 15 மணி நேரம் பறந்துவிட்டேன். அவர்களுடைய வியப்புக்கு இது முற்றிலும் ஏற்புடையது. என்னால் இனிமேலும் காத்திருக்க முடியாது. வரவிருக்கும் வாரம் அவர்களுடனே செலவிடப்போகிறேன்" என பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாக பரவி வருகிறது.