வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (28/03/2018)

கடைசி தொடர்பு:08:53 (28/03/2018)

தென்னாப்பிரிக்கா தொடரிலிருந்து ஸ்மித், வார்னர் மற்றும் பான்கிராப்ட் அதிரடி நீக்கம்!

பந்து சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய வீரர்கள் தடை தொடர்பாக, அடுத்த 24 மணி நேரத்துக்குள் தெரிவிக்கப்படலாம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜேம்ஸ் சதர்லாண்ட் தெரிவித்துள்ளார். 

ஜேம்ஸ் சதர்லாண்ட்

Picture: TWITTER ICC

ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலிய வீரர் பந்தை சேதப்படுத்திய விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தால், ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். 

இந்த விவகாரத்தில், கேப்டன் ஸ்மித்துக்கு ஆயுள் கால தடை விதிக்க வேண்டும் எனப் பலர் கோரிக்கை விடுத்துவருகின்றனர். இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக இன்று ஜேகன்ஸ்பர்க் -ல் செய்தியாளர்களைச் சந்தித்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜேம்ஸ் சதர்லாண்ட், விளக்கம் அளித்தார். ”ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் வார்னர் மற்றும் பான்கிராப்ட் ஆகியோர், உடனடியாக தென்னாப்பிரிக்காவிலிருந்து நாடு திரும்ப உள்ளனர். பந்து சேதப்படுத்துவதுகுறித்து முன்னரே அவர்கள் தெரிந்திருந்தனர். மற்ற வீரர்கள் இதுகுறித்து தெரிந்திருக்கவில்லை.  

இந்த மூன்று வீரர்களுக்குப் பதிலாக மேத்திவ் ரென்ஷா, ஜோ பர்ன்ஸ் மற்றும் மேக்ஸ்வெல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். விக்கெட் கீப்பர் டிம் பெயின் கேப்டனாகச் செயல்படுவார். பயிற்சியாளர் லேமேன், தொடர்ந்து தனது பதவியில் செயல்படுவார். வீரர்கள் தடை தொடர்பாக, அடுத்த 24 மணி நேரத்துக்குள் தெரிவிக்கும் நிலையில் இருக்கிறோம்” என்றார்.