அடுத்தடுத்த நெருக்கடி! - சன் ரைசர்ஸ் கேப்டன் பதவியில் இருந்து டேவிட் வார்னர் விலகல் | Ball tampering, David Warner steps down as captain of Sunrisers Hyderabad

வெளியிடப்பட்ட நேரம்: 13:36 (28/03/2018)

கடைசி தொடர்பு:15:16 (28/03/2018)

அடுத்தடுத்த நெருக்கடி! - சன் ரைசர்ஸ் கேப்டன் பதவியில் இருந்து டேவிட் வார்னர் விலகல்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், ஆஸ்திரேலியாவின் துணை கேப்படனாக இருந்த டேவிட் வார்னருக்கு, தொடர்ந்து சிக்கல் அதிகரித்துவருகிறது.

டேவிட் வார்னர்

ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான 4 போட்டிகளைக்கொண்ட டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலிய வீரர் பந்தை சேதப்படுத்திய விவகாரம்,  கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்தச் சம்பவத்தால், ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர் ஆகியோர், தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இந்த விவகாரத்தில், ஆஸ்திரேலிய அணியின் ஸ்மித், வார்னர் மற்றும் பந்தை சேதப்படுத்திய வீரர் பான்கிராஃப்ட் ஆகிய மூவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனப் பல தரப்பினரும் தெரிவித்துவந்தனர்.

இதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய கிரிகெட் அணியின் துணை கேப்டனாக இருந்த டேவிட் வார்னர் தான், இந்தச் செயலுக்கு மூளையாக இருந்தாகக் கூறப்பட்டது. இதனால் ஆஸ்திரேலிய எல்.ஜி நிறுவனம் அவருக்கு வழங்கிவந்த ஸ்பான்சர்ஷிப்பை ரத்துசெய்துள்ளது. இது குறித்துப் பேசிய எல்.ஜி நிறுவனம், “டேவிட் வார்னருடனான எல்.ஜி-யின் ஸ்பான்சர்ஷிப் முடியும் தருவாயில் உள்ளது, இவர் மீதான சமீபத்திய சம்பவங்களால், இவருடனான ஒப்பந்தத்தை நீடிக்க விரும்பவில்லை. எல்.ஜி ஆஸ்திரேலியா எப்போதும் சிறந்த தூதர்களுடனே பணியாற்ற விரும்புகிறது. இதில் நாங்கள் கவனமாக உள்ளோம். தற்போது வார்னர்மீது ரசிகர்களிடையே அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இதனால், இவருடனான ஸ்பான்சரை இத்துடன் முடித்துக்கொள்ள நினைக்கிறோம் எனத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தற்போது இந்தியாவில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டிருந்தார். பந்தை சேதப்படுத்திய விவகாரத்துக்குப் பிறகு, சன் ரைசஸ் கேப்டன் பதவியில் இருந்து வார்னர் விலகியுள்ளதாக ஹைதராபாத் அணியின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அணியின்  புதிய கேப்டன் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.