’வேகமான இந்தியர்’ நரேன் கார்த்திகேயன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்..?! | Whereabouts of the fastest man of India Narain Karthikeyan

வெளியிடப்பட்ட நேரம்: 14:08 (28/03/2018)

கடைசி தொடர்பு:15:51 (28/03/2018)

’வேகமான இந்தியர்’ நரேன் கார்த்திகேயன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்..?!

இந்தியாவின் வேகமான கார் ரேஸராகக் கொண்டாடப்பட்டவர், ஃபார்முலா-1 ரேஸின்  முன்னாள் வீரரான நரேன் கார்த்திகேயன். 2000-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் கார் ரேஸை இந்தியர்களிடையே குறிப்பாக, தமிழர்களிடையே பிரபலப்படுத்தியவர் இவர்தான். இந்தியாவின் மைக்கேல் ஷூமேக்கராக அடையாளம் காணப்பட்ட நரேன் கார்த்திகேயன், 2005-ம் ஆண்டு முதன்முதலாக ஃபார்முலா-1 ரேஸில் கலந்துகொண்டு இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார். இவருக்குப் பிறகு இந்தியர்கள் யாரும் `ஃபார்முலா-1' எனப்படும் கார் ரேஸில் உச்சத்தைத் தொடவில்லை.

நரேன்

1991-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஃபார்முலா மாருதி ரேஸில் 15 வயது சிறுவனாக வெற்றிபெற்று, சர்வதேச ரேஸ் பயணத்தைத் தொடங்கினார் நரேன் கார்த்திகேயன். 90-களில் பிரான்ஸில் கார் ரேஸ் பயிற்சி மேற்கொண்டவர், 14 வருட கடும் பயிற்சி, முயற்சிகளுக்குப் பிறகு 2005-ம் ஆண்டில் கார் ரேஸில் உச்சம் தொட்டார். 2005-ம் ஆண்டு ஜோர்டான் அணிக்காக முதன்முதலாக ஃபார்முலா-1 ரேஸில் கலந்துகொண்ட நரேன் கார்த்திகேயன், அதிகபட்சமாக அமெரிக்க ரேஸில் நான்காவது இடம் பிடித்தார். ஆனால், `அந்த ரேஸில் முக்கியமான அணிகள் டயர் பிரச்னையால் ரேஸைப் புறக்கணித்ததால்தான் கார்த்திகேயனால் நான்காவது இடத்தைப் பிடிக்க முடிந்தது' என விமர்சனங்கள் எழுந்தன. எல்லா அணிகளும் பங்குகொண்ட ரேஸில் அதிகபட்சமாக மலேசிய ரேஸ் போட்டியில் 11-வது இடம் பிடித்தார் நரேன் . நரேன்

தற்போது 41 வயதான நரேன், கார் ரேஸில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறார். இந்த ஆண்டும் ஜப்பான் ஃபார்மூலா சீசன் ரேஸ் போட்டிகளில் கலந்துகொள்ள ஒப்பந்தமாகியிருக்கிறார். இருப்பினும் முன்புபோல தீவிர ரேஸிங்கில் இல்லை என்பதால், நரேன்  தொழிலதிபராக மாறியிருக்கிறார். புதிதாக கார் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு வழிகாட்டும் இணையதள நிறுவனத்தைத் தொடங்கி நடத்திவருகிறார்.

``என்னுடைய அப்பா ரேஸராக இருந்து தொழிலதிபராக மாறியவர். ரேஸ் கரியருக்குப் பிறகு ஆட்டோமொபைல் தொடர்பான ஏதாவது ஒரு தொழிலில்தான் இறங்கவேண்டும் என முன்பே முடிவெடுத்திருந்தேன். அதேபோல இப்போது பிசினஸில் இறங்கிவிட்டேன்'' என்று சொல்லியிருக்கிறார் நரேன் . 

நரேன்ரேஸில் ஆர்வம் காட்டும் இளைஞர்களுக்கு, இவர் வழிகாட்டியாகவும் இருக்கிறார். சென்னை, கோயம்புத்தூர் ரேஸ் டிராக்குகளுக்கு அவ்வப்போது போய்வரும் நரேன், அங்கு பயிற்சியில் இருக்கும் இளம் ரேஸர்களுக்கு ரேஸ் டிப்ஸும் வழங்குகிறார். 

கோவையில் பிறந்த நரேன் கார்த்திகேயன், இப்போது சென்னையில்தான் வசித்துவருகிறார். சென்னைப் பெண் பாவர்ணாவை 2004-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2016-ம் ஆண்டில் குழந்தை பிறந்தது. மகனுக்கு `நீல்' எனப் பெயர் சூட்டினர். 

தற்போது போர்ஷே GT3 ஆர்.எஸ் ஸ்போர்ட்ஸ் காரைப் பயன்படுத்திவருகிறார். சென்னையில் இந்த கார் வைத்திருக்கும் ஒருசில மனிதர்களில் நரேன் கார்த்திகேயனும் ஒருவர். ஃபார்முலா-1 ரேஸில் அதிகபட்சமாக 360 கிலோமீட்டர் வேகம் வரை தொட்டிருக்கும் இவருக்கு, சாதாரண சாலைகளில் வேகமாக கார் ஓட்டுவது பிடிக்காது.

``ரேஸ் டிராக், வேகமாக கார் ஓட்டவேண்டும் என்பதற்காகவே வடிவமைக்கப்பட்டது. அதில் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களுடன் கார் ஓட்டுவதால் பெரிய விபத்து ஏற்பட்டாலும் சிறு காயங்களுடன் தப்பித்துவிடலாம். ஆனால், சாதாரண சாலைகளில் வேகமாக ஓட்டுவது, ஓட்டுநருக்கு மட்டுமல்ல, சாலையில் செல்லும் மற்றவருக்கும் ஆபத்து'' என்பார் நரேன் கார்த்திகேயன்.

நரேன் கார்த்திகேயனே சொல்லிட்டாரு மக்களே... ரேஸ் டிராக்கில் மட்டும்தான் வேகம். வெளியே உறுமல் இல்லாமப் போகணும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்