'நேர்மைக்கு உதாரணம் ராகுல் டிராவிட்..' புகழாரம் சூட்டும் மைக் ஹஸி! | Michael Hussey says an example of honesty is rahul dravid

வெளியிடப்பட்ட நேரம்: 22:20 (28/03/2018)

கடைசி தொடர்பு:22:20 (28/03/2018)

'நேர்மைக்கு உதாரணம் ராகுல் டிராவிட்..' புகழாரம் சூட்டும் மைக் ஹஸி!

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தினால், ஆஸ்திரேலிய அணி இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவது கடினம் என்று மைக் ஹஸி தெரிவித்துள்ளார். அதேபோல் கிரிக்கெட் விளையாட்டில் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக என்றும் என் நினைவில் வருபவர் ராகுல்தான் எனப் புகழ்ந்துள்ளார். 

மைக் ஹஸ்ஸி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வீரர், பான்கிராப்ட் தனது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த மஞ்சள் நிறப் பொருளை வைத்து பந்தை சேதப்படுத்திய விவகாரம், கிரிக்கெட் உலகில் விஸ்வரூபம் எடுத்தது. இதனையடுத்து, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோருக்கு 12 மாதங்கள் தடை விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ள மைக் ஹஸி, ஆஸ்திரேலிய அணி இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவது கடினம் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், 'பந்தைச் சேதப்படுத்திய காரணத்தினால் மட்டும் ஆஸ்திரேலிய அணி தலைப்புச் செய்தியாவது முதல்முறை அல்ல. இனி வரும் நாள்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு மிகக் கடினமானதாகவே இருக்கும். எனினும், இந்த சர்ச்சை சம்பவத்தினால் அணி தன்னை மறு ஆய்வு செய்துகொள்வதற்கான வாய்ப்பு அமைந்துள்ளது.

ராகுல் டிராவிட்

கிரிக்கெட் களத்தில் நாம் கடினமாக ஆடுகிறோம், தன்னம்பிக்கையுடன் ஆக்ரோஷமாக ஆடுகிறோம். ஆனால், நியாயமாக ஆடுவதை மீண்டும் உறுதி செய்வது அவசியமாகிறது. ராகுல் டிராவிட் என்று கூறினாலே, முதலில் மனதிற்குள் வருவது அவர் அடித்த 28 சதங்கள். இது எனக்கு என்றும் ஆச்சர்யத்தையே அளிக்கும். அதேபோல், டிராவிட் என்றால் அவர் ஒரு சுவர், பேட்டிங் உத்திகளைச் சிறப்பாகக் கையாளுபவர் என்பதெல்லாம் என நினைவில் வராது. கிரிக்கெட்டை அவர் மிக நேர்மையாக ஆடினார் என்பதுதான் என் நினைவில் நிற்கும். எனவே, நாம் ஆடும் காலத்தில் நம்மை நாம் எவ்வாறு நடத்திக்கொள்கிறோம் என்பதுதான் நினைவில் நிற்கும்" என டிராவிட்டின் ஆட்ட நேர்மையைப் புகழ்ந்துள்ளார் மைக் ஹஸி.