நடப்பு ஐ.பி.எல் தொடரின் ஒரே வெளிநாட்டு கேப்டன் - சன் ரைசர்ஸ் அணிக்கு புதிய கேப்டன் அறிவிப்பு! | Kane Williamson appointed SRH captain for IPL 2018

வெளியிடப்பட்ட நேரம்: 15:13 (29/03/2018)

கடைசி தொடர்பு:15:13 (29/03/2018)

நடப்பு ஐ.பி.எல் தொடரின் ஒரே வெளிநாட்டு கேப்டன் - சன் ரைசர்ஸ் அணிக்கு புதிய கேப்டன் அறிவிப்பு!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டனாக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலிய வீரர் பந்தை சேதப்படுத்திய விவகாரம் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தால், ஆஸ்திரேலிய
கேப்டன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்மித், வார்னர் மற்று பந்தை சேதப்படுத்திய வீரர் பான்கிராஃப்ட் ஆகிய மூவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனப் பலதரப்பினரும் தெரிவித்து வந்தனர். இதனை அடுத்து ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய இருவரும் ஓராண்டு எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் கலந்துகொள்ளக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டிருந்தார். பந்தை சேதப்படுத்திய விவகாரத்துக்குப் பிறகு, வார்னர் சன்ரைசர்ஸ் கேப்டன் பதவியிலிருந்து விலக்குவதாக அறிவித்தார். அணியின்  புதிய கேப்டன் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என நேற்று அந்த அணியின் நிர்வாகிகள் அறிவித்திருந்தனர். இதையடுத்து இன்று கேன் வில்லியம்சன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நியூசிலாந்து அணியின் கேப்டனாக உள்ளார். இந்தாண்டு ஐபிஎல் தொடரில் இருக்கும் எட்டு அணிகளில் இவர் ஒருவரே வெளிநாட்டு அணியைச் சேர்ந்த கேப்டன், மற்ற அணிகளில் இந்திய வீரர்களே கேப்டன்களாக உள்ளனர்.

இது குறித்து ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள கேன் வில்லியம்சன், ``இந்த கேப்டன் பதவி எனக்குக் கிடைத்திருப்பதை வரவேற்கிறேன். திறமையான வீரர்களுடன் செயல்படுவதற்கு இது ஓர் அற்புதமான வாய்ப்பு. இனிவரும் சவால்களைச் சந்திக்க நான் தயாராக உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.