‘அன்பால் என்னை ஆட்கொண்ட தமிழ்நாடே..!’ - ட்விட்டரில் நெகிழ்ந்த ஹர்பஜன்

நடக்க உள்ள ஐபிஎல் போட்டிக்காக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட உள்ளார், ஹர்பஜன் சிங். இதற்காக சென்னை வந்துள்ள இவர், தமிழ் மக்கள்குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஹர்பஜன் சிங்

இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீண்டும் களமிறங்க உள்ளன. மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில், ஐபிஎல் 11-வது சீசன் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதனால், இந்த சீசன் விறுவிறுப்புக்குச் சற்றும் பஞ்சம் வைக்காத வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், போட்டி தொடங்குவதற்கு சில தினங்கள் மட்டுமே இருக்கிறது என்பதால், சி.எஸ்.கே வீரர்கள் சென்னை வந்துள்ளனர். அவர்கள், சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டுவருகின்றனர். சென்னை வந்துள்ள கிரிகெட் வீரர்கள், நேற்று முன்தினம் திறந்த பேருந்தில் சென்னையைச் சுற்றியுள்ளனர். அவர்களுக்கு, கிரிகெட் ரசிகர்கள் மற்றும் சென்னைவாசிகள் எனப் பலரும் வரவேற்பு அளித்துள்ளனர்.

முதன்முதலாக, சென்னை அணியில் ஹர்பஜன் சிங்  விளையாட உள்ளார். சென்னையில் பயணம்செய்ததுகுறித்தும், தமிழ் மக்கள்குறித்தும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். “தமிழ் நாட்டுக்கு வருகைதந்த நாளிலிருந்து, தமிழ் மக்கள் என் மேல் காட்டும் அளவுகடந்த பாசமும் நேசமும் என்னை வியக்கவைக்கிறது. உங்கள் வீட்டுப் பிள்ளையாக என்னை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி. அன்பால் என்னை ஆட்கொண்ட தமிழ்நாடே, இந்த பந்தம் தொட்டுத் தொடரும் ஒரு பட்டுப் பாரம்பரியமாகத் தொடரட்டும்” என தமிழில் பதிவிட்டுள்ளார்.  சென்னை அணியில் தேர்வுசெய்ததிலிருந்து, ஹர்பஜன்சிங் தமிழ் கற்றுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ’தொட்டுத் தொடரும் ஒரு பட்டுப் பாரம்பரியம்’ என்னும் வரிகள் தனியார் நிறுவன விளம்பரத்தில் வரும் வரிகள் என்று ஹர்பஜனை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!