வெளியிடப்பட்ட நேரம்: 13:42 (31/03/2018)

கடைசி தொடர்பு:13:55 (31/03/2018)

“இந்தச் சம்பவத்துக்கு முழுப் பொறுப்பும் நானே!'' - கண்ணீர்விட்ட டேவிட் வார்னர்

வார்னர்

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால், 12 மாதங்கள் போட்டியில் விளையாடத் தடை விதிப்பபட்ட நிலையில், தனது தரப்பிலான தவறுக்காக உலக கிரிக்கெட் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட டேவிட் வார்னர் தற்போது, 'இனி நான் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட முடியுமா எனத் தெரியவில்லை’ என கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.   

டேவிட் வார்னர்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகக் கேப்டவுனில் நடந்த 3 வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வீரர், பான்கிராப்ட் தனது பேன்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த மஞ்சள் நிறப் சொரசொரப்பு காகிதத்தை வைத்து பந்தை சேதப்படுத்திய விவகாரம், கிரிக்கெட் உலகில் விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோருக்கு 12 மாதங்கள் தடை விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்திருந்தது. 

இதையடுத்து, பந்தைச் சேதப்படுத்திய செயலுக்காக, கடந்த 29-ம் தேதி அன்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கண்ணீர் மல்க மன்னிப்புக் கோரியுள்ளார். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,  ``ஆஸ்திரேலிய அணி கேப்டன் என்ற முறையில் பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்துக்கு நானே பொறுப்பேற்கிறேன். மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன் என்பதை தற்போது உணர்ந்துவிட்டேன்'' என்று கூறியிருந்தார். 

இந்நிலையில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் முக்கிய காரணகர்த்தாவான டேவிட் வார்னர் சிட்னியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவரின் மனைவி கேன்டீசும் உடன் இருந்தார். அவரும் கண்ணீருடன்தான் காணப்பட்டார். முன்னதாகத் தயாரித்து வைத்திருந்த செய்திக் குறிப்பை வார்னர் வாசித்தார். ''அனைத்து ஆஸ்திரேலிய மக்களுக்கும்... கிரிக்கெட் ரசிகராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதை மட்டுமே நான் இலக்காகக் கொண்டிருந்தேன்.

துணை கேப்டனாக என் கடமையில் இருந்து தவறிவிட்டேன். மன்னிக்க முடியாத குற்றம் இழைத்துவிட்டேன். தென்னாப்ரிக்க கிரிக்கெட் வீரர்கள், அந்நாட்டு மக்களிடமும் உங்கள் மண்ணில் வைத்து இத்தகைய தவறு இழைத்ததற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இந்த விவகாரத்திலிருந்து விடுபடவும் என்னை மாற்றிக்கொள்ளவும் அனுபவமிக்கவர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெறுவேன். தடைக் காலம் முடிந்த பின்னர், ஆஸ்திரேலியாவுக்காக மீண்டும் விளையாடுவேன் என்கிற நம்பிக்கை இருந்தாலும் அது கடினம் என்றே கருதுகிறேன். இந்தச் சம்பவத்துக்கு முழுப் பொறுப்பும் நானே'' என்று கூறியுள்ளார்.

warner

'நீங்கள் எத்தகையக் குற்றம் புரிந்துள்ளீர்கள் என்று உணர்ந்துதான் செய்தீர்களா' என்ற கேள்விக்கு, ''விளைவுகளை உணர்ந்தே இருந்தோம். என்னைப் போலத்தான் ஸ்டீவும் ஃபேங்கிராஃப்டும் இருப்பார்கள் என்றே நம்புகிறேன். அடுத்த 12 மாதங்கள் எங்களுக்குக் கடினமானதாக இருக்கப்போகிறது. ஓய்வு பெறுவது குறித்து குடும்பத்தினருடன் கலந்தாலோசிக்க வேண்டியதுள்ளது. ஆஸ்திரேலிய மக்களிடம் மீண்டும் நன்மதிப்பைப் பெற வெகுகாலம் பிடிக்கும்'' என்றார். 

இதற்கு முன்னதாகப் பந்தைச் சேதப்படுத்த முயன்றதாகப் புகார் எழுந்துள்ளதே... என்று கேட்டபோது, ''கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் மூன்றாவது நாள் ஆட்டத்தில் நடந்த விஷயத்தை மட்டுமே பேச இங்கு வந்துள்ளேன் ''என டேவிட் வார்னர் பதில் அளித்தார். 

தற்போது 31 வயதான டேவிட் வார்னர் பந்தைச் சேதப்படுத்திய விவகாரம் காரணமாக ஸ்பான்ஷர்களை இழந்துள்ளார். ஐ.பி.எல் தொடரிலும் விளையாட முடியாது.