வெளியிடப்பட்ட நேரம்: 12:59 (01/04/2018)

கடைசி தொடர்பு:13:01 (01/04/2018)

"இதயங்கள் போதும் விராட்.... கோப்பை வேண்டும் ப்ளீஸ்..!" - ஒரு ஆர்.சி.பி ரசிகனின் அன்பு வேண்டுகோள்

நிறைய வலிகளைத் தாண்டியிருக்கிறோம் விராட். தோனி கம்பேக் தரட்டும், ரஹானே, தினேஷ் கார்த்திக், அஸ்வின் தங்களை நிரூபிக்கட்டும். ஆனால் கோப்பை கோலியின் கைகளில் இருக்கட்டும் என்பதே ஆர்சிபி ரசிகனின் விருப்பம். 

விராட் கோலி

'' விராட்! ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி அணிக்கு நீங்கள் தான் முழுமையான கேப்டன். இந்திய அணியில் இருப்பது போல தோனியெல்லாம் ஃபீல்டிங் செட் செய்து தரமாட்டார்''

'' கோப்பை என்பது ஆர்சிபியால் ஜென்மத்திலும் வாங்க முடியாத விஷயம்''

இதெல்லாம் சமூக வலைதளங்களில் ஆர்சிபி பற்றிய மீம்களில் உள்ள வசனங்கள். ஒரு ஆர்சிபி ரசிகனாய் இது எங்களைக் கடுமையாக பாதித்திருக்கிறது. ஆனால் இதற்காகச் சோர்ந்துவிடும் கூட்டம் அல்ல நாங்கள். "விராட் கோலிக்கு ட்ராவுக்காக ஆடுவது பிடிக்காது. களத்தில் கர்ஜிக்கும் சிங்கம், இவரது பேட் பந்துவீச்சாளர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும்’ என சமூக வலைத்தளங்களில் மற்ற வீரர்களின் ரசிகர்களை ஓடவிட்ட காலம் எங்களிடமும் இருக்கிறது.

அனுஷ்கா மீதான விமர்சனத்தையெல்லாம் ஒரு வார்த்தையில் வீழ்த்தியவர் விராட். ஆனால், எங்களை விடையில்லா ஒரு கேள்வி மட்டும் துரத்திக் கொண்டே இருக்கிறது. 10 சீசன்களாக நிறைய இதயங்களை வென்றுள்ளோம். ஆனால் கோப்பை? எல்லாரும் மாதிரியும் ஊர் பாசம் கண்ண மறைச்சு ஆரம்பத்துல இரண்டு சீஸன் சிஎஸ்கே ஃபேனாதான் இருந்தோம். தோனி எப்பவும் கபாலி தான். அந்த மாஸ் மனுஷன் இருக்குற அதே களத்துல நீங்க எங்களுக்கு பாகுபலியா தெரிஞ்சது தான் நாங்க ஆர்சிபி ரசிகனாகக் காரணம். 

''என்னதான் சொன்னாலும் ஆர்சிபிக்கு உங்க ஆளு ஒரு கப்பு ஜெயிக்கலயேப்பா'' - இந்த வார்த்தை ஆறிலிருந்து 60 வரை எல்லாரிடத்திலுமிருந்து வருகிறது விராட். 2 வருடம் தடை செய்யப்பட்டாலும் சென்னையும், ராஜஸ்தானும் சாம்பியன்கள், உங்களுக்குப் போட்டியாக முன்னிறுத்தப்படும் ரோஹித் ஷர்மா கையில் 3 ஐபிஎல் கோப்பைகள். நீங்கள் களத்தில் முறைத்துப் பார்த்த கம்பீரும், வார்னரும் கோப்பையோடு போஸ் கொடுக்கிறார்கள். ஆனால் விராட் கோலியின் ஆர்சிபி மட்டும் சர்வதேச கிரிக்கெட்டின் தென்னாப்பிரிக்க அணியைப் போலவே இருப்பது வேதனை தருகிறது விராட்.

டிராவிட் காலத்தில் டெஸ்ட் அணியாக இருந்தது ஆர்சிபி. கும்ப்ளே, வெட்டோரி என ஸ்பின்னர்கள் ஆண்ட காலத்திலும் ஆர்சிபிக்கு டெஸ்ட் யூனிஃபார்ம் தான் கொடுத்து வைத்திருந்தார்கள். எல்லாம் விராட் வந்ததும் மாறியது. அதிரடிக்கு கெயில்... அடித்து நொறுக்க ஏபிடி... வம்புக்கு பீட்டர்சன்... வைச்சு செய்ய வாட்சன்... இதையெல்லாம் மொத்தமாக செய்வார் விராட் என உற்சாகத்தின் உச்சத்துக்கே சென்றது ஆர்சிபி...

கோலி

ஐபிஎல் போட்டிகளில் அதிகபட்ச ரன், தனிநபர் அதிகபட்சமான 175 (கெயில்) எல்லாம் ஆர்சிபி வசம் வந்தது. ஒரே சீஸனில் 4 சதம், 963 ரன்கள் என விராட் கெத்து காட்டினார். ஆனால், கடைசியில் கோப்பை நமக்கில்லை. ஒவ்வொரு முறையும் கோப்பை கை நழுவும் போதெல்லாம் கனத்த இதயங்களுடன்.. "விராட் இதுவும் ஒரு ஆட்டம் தான். போனால் போகட்டும் எங்கள் இதயங்களை வென்றிருக்கிறீர்கள் அது போதும்" என ஸ்டேட்டஸ் தட்டி இருக்கிறோம். இந்தமுறை அதற்கு வேலை வைக்காதீர்கள். நாங்கள் சாம்பியன் என்று உரக்கக் கத்த வேண்டும். விசில் சத்தங்களை வெல்ல வேண்டும். 2019-ம் ஆண்டு உலகக் கோப்பையை கையில் ஏந்தப்போகும் இந்திய கேப்டன் என உங்கள் மீது அதிக எதிர்பார்ப்பு வைத்திருக்கும் இந்திய ரசிகர்களுக்கு நீங்கள் காட்டும் உதாரணமாக இந்த ஐபிஎல் கோப்பை இருக்க வேண்டும். 

நிறைய வலிகளைத் தாண்டியிருக்கிறோம் விராட். எங்களுக்கு எந்த அணியைக் கண்டும் பயமில்லை, தோனி கம்பேக் தரட்டும், ரஹானே, தினேஷ் கார்த்திக், அஸ்வின் தங்களை நிரூபிக்கட்டும். ஆனால், கோப்பை கோலியின் கைகளில் இருக்கட்டும் என்பதே ஆர்சிபி ரசிகனின் விருப்பம். 

இதயங்கள் போதும் விராட். கோப்பைகள் வேண்டும்... ப்ளீஸ்...

கனத்த இதயத்துடன், 
ஆர்சிபி ரசிகன். 


டிரெண்டிங் @ விகடன்