உலகக்கோப்பை ஜெயிச்சு 7 வருஷமாச்சு... தோனியின் அந்த சிக்ஸர் இன்னமும் கண்ணுக்குள்ளே..! #OnThisDay #2011CWC | Seven years of 2011 Cricket World cup

வெளியிடப்பட்ட நேரம்: 10:07 (02/04/2018)

கடைசி தொடர்பு:12:29 (02/04/2018)

உலகக்கோப்பை ஜெயிச்சு 7 வருஷமாச்சு... தோனியின் அந்த சிக்ஸர் இன்னமும் கண்ணுக்குள்ளே..! #OnThisDay #2011CWC

உலகக்கோப்பை ஜெயிச்சு 7 வருஷமாச்சு... தோனியின் அந்த சிக்ஸர் இன்னமும் கண்ணுக்குள்ளே..! #OnThisDay #2011CWC

28 ஆண்டு கால உலகக்கோப்பை கனவுக்கும், 121 கோடி மக்களின் ஏக்கத்துக்கும் தீனிபோட்ட நாள், ஏப்ரல் 2, 2011. சச்சின் ஒருமுறையாவது உலகக்கோப்பையைத் தன் கையால் தொடுவாரா? சொந்தமண்ணில் இதுவரை எந்த நாடும் கோப்பையை வென்றதில்லை. இந்திய அணி அந்தச் சாதனையைப் படைக்குமா போன்ற பல கேள்விகளுக்குப் பதில் கிடைத்த நாள் அது. ஆம், இந்திய கிரிக்கெட் அணி, உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்து, இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைந்தது. 

2011 உலகக்கோப்பை

இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகள்  இணைந்து நடத்திய 10-வது உலகக்கோப்பைத் தொடர், 2011-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. குரூப் - பி பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி, தன் முதல் போட்டியிலேயே  வங்கதேச அணியைச் சந்தித்தது. 2007-ம் ஆண்டு அடைந்த தோல்விக்கு மருந்து போடும் விதமாக விளையாடி, அந்த அணியைத்  துவம்சம்  செய்து, 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 14 சிக்ஸர்கள் உட்பட, 175 ரன்கள் குவித்து அதகளப்படுத்தினர். தொடக்க ஆட்டக்காரர், வீரேந்திர சேவாக்.  

இங்கிலாந்து அணியுடனான அடுத்த போட்டியில், ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தன் 47-வது  ஒருநாள் சதத்தை அடித்தார். முதலில் ஆடிய இந்திய அணி 338 ரன்கள் குவித்தது. அடுத்துக் களமிறங்கிய இங்கிலாந்து அணி, ஆண்ட்ரே ஸ்டராஸின் அதிரடி ஆட்டத்தால் வெற்றியை நோக்கிப் பயணித்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவை. முனாப் படேல் வீசிய அந்த ஒவரின் மூன்றாவது பந்தில் ஒரு சிக்ஸர் பறக்க, இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற பதற்றமான சூழல். அந்தப் பந்தை எதிர்கொண்ட கிரேம் ஸ்வான், ஒரு ரன்னை எடுத்தார். இதனால் போட்டி ட்ராவில் முடிந்தது. உலகக்கோப்பை வரலாற்றில் `டை’யில் முடிந்த நான்காவது போட்டி அது.

2011 world cup

அயர்லாந்துக்கு எதிரான போட்டியில், நட்சத்திர வீரர் யுவராஜ் சிங்கின் ஆல்ரவுண்ட் ஆட்டத்தால் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. யுவராஜ் 50 ரன்கள் எடுத்ததுடன், 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். நெதர்லாந்து அணியுடனான போட்டியிலும் அரை சதம் அடித்து,  இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெறக் காரணமாக இருந்தார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், முதலில் ஆடிய இந்திய அணி 267/1 என்ற நிலையில் இருந்து 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இப்போட்டியில் 2 பந்துகள் மீதம் உள்ள நிலையில், தென்னாப்பிரிக்கா வெற்றிபெற்றது .

உலகக்கோப்பை

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக, சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் சதமடித்து, இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார் யுவராஜ் சிங். புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்தும், உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் விளையாடிய அவர், விளையாடிக்கொண்டிருக்கும்போதே ரத்தவாந்தி எடுத்தார். இருந்தும், பெவிலியன் திரும்பாமல் கடைசிவரை களத்தில் இருந்து இந்திய அணியை வெற்றிப்பாதைக்குக் கொண்டுசென்றார். இதன்மூலம், இந்தியா காலிறுதியில் ஆஸ்திரேலியாவைச் சந்திக்க நேர்ந்தது.

அதற்கு முந்தைய மூன்று உலகக்கோப்பைகளையும் வென்று ஹாட்ரிக் அடித்த ஆஸ்திரேலிய அணி, இம்முறை இந்திய அணியிடம்  காலிறுதியிலேயே தோல்வியுற்று வெளியேறியது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய யுவராஜ் சிங், இந்திய அணியை அரையிறுதிக்குக் கூட்டிச்சென்றார்.

யுவ்ராஜ் சிங்

 இந்தியா-பாகிஸ்தான்  மோதல் என்றாலே, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலோடு எதிர்பார்க்கும். அதுவும், உலகக்கோப்பை செமி ஃபைனலில் `ஆர்ச் ரைவல்ரி’ அணிகள் மோதுகிறது என்றால் சும்மாவா..? மொகாலியில்  நடைபெற்ற அந்தப் போட்டியில், முதலில் ஆடிய இந்திய அணி  260 ரன்களை அடித்தது. சச்சின் தன் 100-வது சதத்தை அடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் ரசிகர்கள் பலர் மைதானத்தில் கண்கலங்கினர். இந்திய பெளலர்களின் நேர்த்தியான பந்துவீச்சால், இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 8 ஆண்டுகளுக்குப்  பின் மீண்டும் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்த வெற்றியின்மூலம் உலகக்கோப்பைப் போட்டிகளில் பாகிஸ்தான் அணியுடன் மோதிய 5 போட்டிகளிலும் வெற்றிபெற்று சாதனை படைத்தது. 

மற்றொரு அரையிறுதியில், நியூஸிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இலங்கை. இதன்மூலம், இரு ஆசிய அணிகள் மோதும் முதல் உலகக்கோப்பை இறுதிப்போட்டியாக அது அமைந்தது.15 ஆண்டுகளுக்குப்பின் இலங்கை அணி கோப்பையை வெல்லுமா அல்லது, 28 ஆண்டுகளுக்குப்பின் இந்தியா மீண்டும் சாம்பியனாகுமா என்ற கேள்விக்குப் பதில் சொல்லும் இறுதிப்போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் ஏப்ரல் 2-ம் தேதி நடந்தது. இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரனுக்கும் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கும் இதுவே கடைசி உலகக்கோப்பைப் போட்டி என்பதால், ரசிகர்கள் உணர்ச்சிபூர்வமாக இருந்தனர். 

டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர்கள், இறுதிப்போட்டியில் ஜாகீர் கானின் பந்துவீச்சில் திணறினர்  ஜெயவர்தனே மற்றும் சங்ககரா கூட்டணி, இலங்கை அணியை வீழ்ச்சியிலிருந்து மீட்டது. அபாரமாக ஆடிய ஜெயவர்தனே, தன் 14-வது சதத்தை வெறும் 84 பந்துகளில் பூர்த்திசெய்தார். கடைசியாக ஆடிய குலசேகரா 32 ரன்களும், அதிரடியாக ஆடிய திசாரா பெரேரா ஒன்பது பந்துகளில் 22 ரன்களும் எடுக்க, இந்திய அணிக்கு 275 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை.

gambhir

275 ரன்கள் இலக்கு. மைதானம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம். கடைசியாக, உலகக்கோப்பைப் போட்டியில் களம் காணும் சச்சின் டெண்டுல்கருக்கு,  `சச்சின்... சச்சின் ...’ என்ற ஆரவார வரவேற்பை அளித்தனர் ரசிகர்கள். முதல் ஓவரை மலிங்கா வீசினார். இன்னிங்ஸின் இரண்டாவது பந்திலேயே சேவாக் எல்.பி.டபிள்யு முறையில் அவுட்டாகி, இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். சிறிது நேரத்திலேயே, 18 ரன்களில் மலிங்காவிடம் சச்சினும் வீழ்ந்தார். சச்சின் விக்கெட்டை வீழ்த்தியதும், ஃபைனலில் வெற்றி பெற்றதுபோல கொண்டாடத் தொடங்கினர் இலங்கை அணியினர். இந்திய ரசிகர்களின் மனதில் 2003-ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டி நினைவுகள் வந்துபோனது.

பின்னர் ஜோடி சேர்ந்த கம்பீர் - கோலி ஜோடி, பொறுமையாக இந்திய அணியைச் சரிவிலிருந்து மீட்டது. சற்று நேரம் நிலைத்த கோலி, 35 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர் முழுவதும் உச்சகட்ட ஃபார்மில் இருந்த யுவராஜ் சிங் அடுத்து வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணியின் கேப்டன் தோனி களம் புகுந்தார். ``அப்போது முரளிதரன் பந்துவீசத் தொடங்கியதால், இடதுகை வீரரைவிட வலதுகை வீரர் சென்றால் சரியாக இருக்கும் என யுவராஜுக்கு முன் நான் சென்றேன்’’ என்று பின்னர் தோனி ஒரு நிகழ்ச்சியில் கூறினார். 

 

ஒருபுறம் நிதானமாக ஆடிய கம்பீர், அரைசதம் அடித்து அசத்தினார். 97 ரன்களில்  இருந்தபோது பெரேரா பந்தில் ஏறிவந்து ஆட முயன்று போல்டாகி, இறுதிப்போட்டியில் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். கிரிக்கெட் வரலாற்றில் அதிகம் கொண்டாடப்படாத இன்னிங்ஸ்களில் கம்பீரின் இந்த இன்னிங்ஸும் அடங்கும்.

மறுபுறம் பொறுப்புடன் ஆடிய கேப்டன் தோனி, இந்தத் தொடரில் தன் முதல் அரை சதத்தை அடித்தார். பின்னர், யுவராஜ் சிங்குடன் இணைந்து, அதிரடியாக ஆடி இந்திய அணியை வெற்றிக்கு அருகில் கொண்டுசென்றார். 11 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே தேவை. குலசேகரா வீசிய குட் லெந்த் பந்தை லாங் ஆன் திசையில் சிக்ஸருக்குப் பறக்கவிட்டார் தோனி. அட்டகாசமான ஷாட். ``நான் இறப்பதற்கு முன் கடைசியாகப் பார்க்க விரும்பும் ஷாட்’’- என்று கவாஸ்கர் பின்னாளில் சொன்ன ஷாட். அந்த ஷாட்டை அடித்ததும், தன் இடது கையால் பேட்டை சுழற்றினார் தோனி. வான்காடே மைதானம் உற்சாகமானது. ``Dhoni finishes off in style. Magnificent strike in to the crowd. India lift the world cup after 28 years. Party starts in the dressing room’’ - வர்ணனையில் இருந்த ரவி சாஸ்திரி ஆர்ப்பரித்தார். தோனி குதித்துக் குதித்துச் சென்று ஸ்டம்பைப் பிடுங்குகிறார்; யுவராஜை கட்டிப் பிடிக்கிறார். டிரெஸ்ஸிங் ரூமில் இருந்த இந்திய வீரர்கள் ஒருவரையொருவர் கட்டி அணைத்துக்கொள்கின்றனர்.  மைதானத்துக்குள் ஓடிச்சென்று தோனியை கட்டிப் பிடிக்கின்றனர். யுவியைக் கட்டி அணைக்கின்றனர். சச்சின் வருகிறார். தோனியைக் கட்டிப்பிடித்து தோளில் தட்டிக்கொடுக்கிறார். யுவராஜிடம் வருகிறார். யுவியைக் கட்டிஅணைக்கிறார். யுவி அழுகிறார். சச்சின் அழுகிறார். டிவி-யில் பார்த்த ஒவ்வொரு ரசிகனும் அழுகிறான். ஆனந்தக் கண்ணீர். இப்போது யூ- டியூபில் அந்தக் காட்சியைப் பார்த்தாலும் கண்ணோரம் நீர் கசிகிறது. 

இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருதை கேப்டன் தோனி வெல்ல, தொடர் நாயகன் விருதைத் தட்டிச் சென்றார் யுவி. இந்த வெற்றியின்மூலம் இந்தியாவின் 28 ஆண்டுகால உலகக்கோப்பை கனவு நனவானது. சச்சின் ஜென்ம சாபல்யம் அடைந்தார். உலகக்கோப்பை வென்ற இரண்டாவது இந்தியக் கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார் தோனி.


டிரெண்டிங் @ விகடன்