`பந்துவீச்சாளர்கள் காயம்!’- ஆஸ்திரேலிய அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த தென்னாப்பிரிக்கா | South Africa sets 612 runs target in 4th test against Australia

வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (02/04/2018)

கடைசி தொடர்பு:23:30 (02/04/2018)

`பந்துவீச்சாளர்கள் காயம்!’- ஆஸ்திரேலிய அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த தென்னாப்பிரிக்கா

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 4-வது டெஸ்டில் வெற்றி இலக்காக 612 ரன்கள் என்ற இமாலய இலக்கை தென்னாப்பிரிக்கா அணி நிர்ணயித்துள்ளது.

`பந்துவீச்சாளர்கள் காயம்!’- ஆஸ்திரேலிய அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த தென்னாப்பிரிக்கா

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 4-வது டெஸ்டில் வெற்றி இலக்காக 612 ரன்கள் என்ற இமாலய இலக்கை தென்னாப்பிரிக்கா அணி நிர்ணயித்துள்ளது. 

சதமடித்த தென்னாப்பிரிக்கா கேப்டன் டூப்ளெசிஸ்

தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ஜோஹன்னஸ்பெர்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 488 ரன்களும், ஆஸ்திரேலியா 221 ரன்களும் எடுத்தன. இதையடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு ஃபாலோ ஆன் கொடுக்காமல் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, 105 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டூப்ளெசிஸ் 120 ரன்களும், தொடக்க வீரர் டீன் எல்கர் 81 ரன்களும் எடுத்தனர். பவுமா 35 ரன்களுடனும், பிலாண்டர் 33 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளும், நாதன் லியோன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 612 ரன்களை தென்னாப்பிரிக்கா இலக்காக நிர்ணயித்தது.

தென்னாப்பிரிக்காவின் முக்கிய பந்துவீச்சாளர்கள் காயத்தால் அவதிப்படுவதாலேயே அந்த அணி இமாலய இலக்கை நிர்ணயிப்பதில் முனைப்பு காட்டியது. தென்னாப்பிரிக்க அணியின் செய்தித் தொடர்பாளர் கூற்றுப்படி, மோர்னே மோர்கல், ரபாடா மற்றும் பிலாண்டர் என 3 பந்துவீச்சாளர்களும் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த போட்டியை டிரா செய்ய ஆஸ்திரேலிய அணி 131 ஓவர்கள் தாக்குப்பிடிக்க வேண்டும். 

இமாலய இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்துள்ளது. தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா, கடைசி நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் எஞ்சிய 7 விக்கெட்டுகளை வீழ்த்தும்பட்சத்தில் தொடரை 3-1 என்ற கணக்கில் வெல்லும். தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும் தென்னாப்பிரிக்காவின் மோர்னே மோர்கல் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.