`31 ரன்களில் 7 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா!’ - 492 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற தென்னாப்பிரிக்கா | SA crushed Australia in 4th test by 492 runs

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (03/04/2018)

கடைசி தொடர்பு:19:00 (03/04/2018)

`31 ரன்களில் 7 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா!’ - 492 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற தென்னாப்பிரிக்கா

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் 492 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்க அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றது.

`31 ரன்களில் 7 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா!’ - 492 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற தென்னாப்பிரிக்கா

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 4 வது டெஸ்ட் போட்டியில் 492 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்க அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றது. 

வெற்றியைக் கொண்டாடும் தென்னாப்பிரிக்கா வீரர்கள்


தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4 வது டெஸ்ட் போட்டி ஜோஹன்னஸ்பெர்க் மைதானத்தில் நடைபெற்றது. மூன்று போட்டிகள் முடிவில் 2-1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா முன்னிலை வகிக்க, தொடரைச் சமன் செய்ய இந்தப் போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் டிம் பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி களம்கண்டது. 

போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 488 ரன்களும் ஆஸ்திரேலியா 221 ரன்களும் எடுத்தன. இதையடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு ஃபாலோ ஆன் கொடுக்காமல் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, 105 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டூப்ளெசிஸ் 120 ரன்களும் தொடக்க வீரர் டீன் எல்கர் 81 ரன்களும் எடுத்தனர். பவுமா 35 ரன்களுடனும் பிலாண்டர் 33 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளும் நாதன் லியோன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 612 ரன்களைத் தென்னாப்பிரிக்கா இலக்காக நிர்ணயித்தது. இமாலய இலக்கை நோக்கிக் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்திருந்தது.

கோப்பையுடன் தென்னாப்பிரிக்க வீரர்கள்

கடைசி நாளான இன்றைய ஆட்டத்தைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு முதல் ஓவரிலேயே இரட்டை அதிர்ச்சி கொடுத்ததால் தென்னாப்பிரிக்காவின் வெரோன் பிலாண்டர். ஆஸ்திரேலியாவின் ஷான் மார்ஷ் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகிய இருவரது விக்கெட்டுகளையும் பிலாண்டர் கடைசி நாளின் முதல் ஓவரிலேயே வீழ்த்தினார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற மைல்கல்லை அவர் எட்டினார். தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்களை மிரட்டிய பிலாண்டர், 21 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 3 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் என்ற ஸ்கோருடன் இன்றைய நாள் ஆட்டத்தைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 90 நிமிடங்களுக்குள்ளாக எஞ்சிய 7 விக்கெட்டுகளையும் 31 ரன்களுக்கு இழந்தது. 119 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஆஸ்திரேலிய அணி, 492 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன்மூலம், 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா வென்றது. சொந்த மண்ணில் 1970-ம் ஆண்டுக்குப் பின்னர், ஆஸ்திரேலிய அணியை முதன்முறையாகத் தென்னாப்பிரிக்கா வீழ்த்தி தொடரை வென்றுள்ளது. இந்தப் போட்டியுடன் சர்வதேசத் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த மோர்னோ மோர்கல் மைதானத்துக்குள் வரும்போது, தென்னாப்பிரிக்க அணியின் சகவீரர்கள் மரியாதை செலுத்தி வரவேற்றனர். ரன்களைப் பொறுத்தவரை தென்னாப்பிரிக்க அணியின் மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.