”பதக்கம் வெல்லத் தகுதியற்றவள் என்றார்கள்!”,காமன்வெல்த் தங்கம் வென்ற சான்ஜிதா சானு #SanjitaChanu | Commonwealth Games: Sanjita Chanu wins gold in 53kg weightlifting

வெளியிடப்பட்ட நேரம்: 19:25 (06/04/2018)

கடைசி தொடர்பு:19:25 (06/04/2018)

”பதக்கம் வெல்லத் தகுதியற்றவள் என்றார்கள்!”,காமன்வெல்த் தங்கம் வென்ற சான்ஜிதா சானு #SanjitaChanu

இந்தியாவுக்காக காமன்வெல்த் போட்டியில், இரண்டு தங்க பதக்கங்களை வென்றிருக்கின்றனர் மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானுவும் சான்ஜிதா சானுவும்.

”பதக்கம் வெல்லத் தகுதியற்றவள் என்றார்கள்!”,காமன்வெல்த் தங்கம் வென்ற சான்ஜிதா சானு #SanjitaChanu

சான்ஜிதா சானு

”நான் இதற்குமுன் நடந்த காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் இதைவிட நன்றாக விளையாடி இருக்கிறேன், ஆனால்,  இன்று நான் சாதித்தது ஓரளவுக்குதான் எனக்குத் திருப்தியை தந்திருக்கிறது. பலரும் நான் பதக்கம் வெல்லத் தகுதியற்றவள் என்று நினைத்தனர்.  கடந்த வருடம் நடத்த  உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றபோது, முதுகில் காயம் ஏற்பட்டது. அதிலிருந்து நான் இன்னும் முழுமையாக மீண்டு வரவில்லை. இந்தப்  போட்டிக்காக நான் வெறும் 15 நாள்களே பயிற்சி செய்தேன். இந்தப் போட்டியில், என்னுடைய பிசியோதெரபிஸ்டுகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பதக்கம் வாங்கும்போது, இவற்றையெல்லாம் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆம், கடந்த சில மாதங்களாகவே நான் சந்தித்த அழுத்தங்களிலிருந்து விடுதலைப் பெற்ற உணர்வை இந்தப் பதக்கம் எனக்குத் தந்திருக்கிறது” -  சான்ஜிதா சானு, ஆஸ்திரேலியாவில் நடந்துகொண்டிருக்கும் காமன்வெல்த்  பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற பின் பேசிய வார்த்தைகள் இவை.

நாம் ஐ.பி.எல்  போட்டிகளுக்காக விதவிதமான வீடியோக்களையும் புரமோஷன்களையும்  பார்த்து ரசித்துக்கொண்டிருக்கும் இதே சமயத்தில், எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இந்தியாவுக்காக காமன்வெல்த் போட்டியில்,  இரண்டு தங்க பதக்கங்களை வென்றிருக்கின்றனர் மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானுவும் சான்ஜிதா சானுவும்.  இந்த இரண்டு பெயர்களையும் நாம் கேள்விப்பட்டிருக்கக்கூட மாட்டோம். ஆனால்,  இந்தப் போட்டி தொடங்கிய இரண்டு நாள்களில் இரண்டு தங்க பதக்கங்களை வென்று  இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கின்றனர். 

குமுக்சம் சான்ஜிதா சானு (Khumukcham Sanjita Chanu), கடந்த 2014ம் ஆண்டு,  ஸ்காட்லாந்தில்  நடந்த காமன்வெல்த் போட்டியில்,  48 கிலோ எடை பிரிவில் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த  காமன்வெல்த் விளையாட்டு போட்டியில்,  பளுதூக்கும் போட்டியில், 53 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.  சான்ஜிதா சானுவுக்கு  கடும் போட்டியாக இருந்தது பப்புவா நியூ கினி நாட்டைச் சேர்ந்த  லோஹ் டிகா (Loa Dika). சானு மொத்தம் 192 கிலோ எடை தூக்கி இந்த சாதனையைப் படைத்தார். இதில் ஒரே சமயத்தில், 84 கிலோ எடையைத் தூக்கி, ஒரே சமயத்தில் அதிகப் பட்ச எடை  தூக்கியவர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார். 

சான்ஜிதா சானு

 2014 ஆம் ஆண்டு, இவர் காமன்வெல்த்  போட்டியில் தங்கம் வென்றது முதலே, விளையாட்டுத் துறையில் உயரிய விருதாகக் கருதப்படும்  அர்ஜூனா  விருது வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒவ்வொரு வருடமும் இவரின் எதிர்பார்ப்பு கனவாகவே இருந்தது.  கடந்த 2017ம் ஆம் ஆண்டு, அர்ஜூனா விருது பெறும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இவரின் பெயர் இடம்பெறாததையொட்டி, அந்த விருது வழங்கும் முறையின் முழுவிவரத்தையும்  தருமாறு,  சான் ஜிதா சானு சார்பாக, இந்திய பளுதூக்கும்  கூட்டமைப்பு,  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ்  விளக்கம் கேட்டது பெரும் சர்ச்சையை  ஏற்படுத்தியது. மேலும், இதற்கு  விளக்கம் கூறிய  விருது கமிட்டியும், “நாங்கள் சரியாகத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறோம்”, என்ற  ரீதியில் விளக்கம் அளித்தது. இது தொடர்பாக,  சான்ஜிதா டெல்லி  உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். 

பல வலிகளையும்  அவமதிப்புகளையும் தாண்டி, தனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை, மிகச் சரியாக பயன்படுத்திக்கொண்டு, இந்தியாவுக்குப் பெருமை சேர்ந்த சான்ஜிதாவை  கௌரவிப்பது இந்திய அரசின் கடமை!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்