பாண்டிங் வழிநடத்த... கம்பீர் தலைமைதாங்க... கோப்பையை குறிவைக்கும் டெல்லி! -டேர்டெவில்ஸ் ரிவ்யூ! | A review on delhi daredevils ipl team

வெளியிடப்பட்ட நேரம்: 20:06 (06/04/2018)

கடைசி தொடர்பு:20:06 (06/04/2018)

பாண்டிங் வழிநடத்த... கம்பீர் தலைமைதாங்க... கோப்பையை குறிவைக்கும் டெல்லி! -டேர்டெவில்ஸ் ரிவ்யூ!

ஐ.பி.எல் அணிகளில் யாராலும் பெரிதாக கண்டுக்கொள்ளாத அணிகளில் ஒன்றாக டெல்லி டேர்டெவில்ஸ் அணி கடந்த பத்தாண்டுகளாக இருந்து வருகிறது.

பாண்டிங் வழிநடத்த... கம்பீர் தலைமைதாங்க... கோப்பையை குறிவைக்கும் டெல்லி! -டேர்டெவில்ஸ் ரிவ்யூ!

ஐ.பி.எல் போட்டிகளில் யாரும் பெரிதாக கண்டுகொள்ளாத அணிகளில் ஒன்றாக டெல்லி டேர்டெவில்ஸ் அணி கடந்த பத்தாண்டுகளாக இருந்து வருகிறது. சேவாக், கம்பீர் என உள்ளூர் வீரர்களும் ஏபி டி வில்லியர்ஸ், கிளன் மெக்ராத் என பன்முகத்தன்மைக்கொண்ட வெளிநாட்டு வீரர்களைக் கொண்டு முதல் மூன்று ஆண்டுகளில் இரண்டு முறை அரை இறுதிக்கு தகுதிப் பெற்றது. பின்பு நான்காவது சீசனில் கவுதம் கம்பீர் கொல்கத்தா அணிக்கு வெளியேற, டி வில்லியர்ஸ் பெங்களூரு பக்கம் போக, சேவாக்கின் ஃபார்ம் மோசமடைய 2010 & 2011ஆம் ஆண்டுகளில் ஐந்தாம் மற்றும் எட்டாம் இடங்களைப் பிடிக்கவே, டெல்லி ரசிகர்களே அணியின் மீதிருந்த நம்பிக்கையை இழக்கத் துவங்கினர்.

டெல்லி டேர்டெவில்ஸ்

கம்பீர் கொல்கத்தா சென்று தன்னை நிரூபித்துக்கொண்டு இரண்டு முறை கோப்பையை கைப்பற்றினார். சேவாக் பஞ்சாப் அணிக்காக அடித்து நொறுக்கி அணியை இறுதி போட்டிக்கு அழைத்துச் சென்றார். தவான் ஹைதராபாத் அணியில் நிரந்தர இடம்பிடிக்க டெல்லி அதனுடைய தனித்தன்மையை இழந்தது. ராகுல் திராவிட் இளைஞர்களைக் கொண்டு ராஜஸ்தானைப் போல கட்டமைக்க எண்ணினாலும் பெரிதாக சோபிக்கவில்லை. பத்து வருடங்களுக்குப் பிறகு ஒட்டுமொத்தமாக அனைத்து வீரர்களும் ஏலத்தில் வந்தாக வேண்டுமென்கிற நிலையில் இம்முறை டெல்லி அட்டகாசமாக விழித்துக்கொண்டது என்றேதான் சொல்ல வேண்டும்.

கவுதம் கம்பீர் மீண்டும் டெல்லிக்காக விளையாட வேண்டுமென்று முடிவெடுத்ததே இதற்கு அச்சாணி. அவரைக் கேப்டனாகக் கொண்டு ஏலத்தில் அனாயசமாக வீரர்களை வாங்கி குவித்தனர். உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்கள்,ஆல் ரவுண்டர்கள், பேட்ஸ்மேன்கள் என அனைவரையும் முதல் நாளே டெல்லி பக்கம் இழுத்தார் ரிக்கி பான்டிங். மும்பை அணியின் பயிற்சியாளராக கோப்பையை வென்றவர் இப்போது டெல்லி அணியை தன்னுடைய ட்ரேட்மார்க் ஆக்ரோஷத்தின் மூலம் வழிநடத்துவார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். மேலும் கம்பீர் போன்ற ஒரு ஆளுமைக்கு பாண்டிங் நிச்சயம் ஒத்துப்போவார்.

தென்னாப்பிரிக்காவின் அதிவேக பந்துவீச்சாளரும் டெஸ்ட் தரவரிசையில் முதன்மை இடத்திலிருக்கும் ககிஸோ ரபாடா, க்றிஸ் மாரிஸ், நியூசிலாந்தின் அதிரடி ஆட்டக்காரர் காலின் மன்றோ, இடது கை யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் ட்ரென்ட் போல்ட், ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல், டேன் கிறிஸ்டியன், இங்கிலாந்தின் ஜேசன் ராய் என அயல்நாட்டில் சிறந்து விளங்கும் டாப் வீரர்களை கட்டம் கட்டி அசால்ட்டாக தூக்கினர். இதனைத் தாண்டி, இந்தியாவின் முகமது ஷமி, சென்ற ஐபிஎல்லில் தெறிக்கவிட்ட ரிஷப் பன்ட், 19 வயதுக்குட்பட்டோர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் ப்ரித்வி ஷா, மும்பையின் இளம் சரவெடி ஸ்ரேயாஷ் ஐயர் என கம்பீர் சீட்டு குலுக்கிப்போட்டு11 வீரர்களை இவர்களில் தேர்ந்தெடுத்தால் கூட மற்ற அணிகளுக்கு பெரிதும் சவால் விடக்கூடிய அணியாக இருக்கும்.

கம்பீர் சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்டு விளையாடுவதை பெரிதும் விரும்புவார். கொல்கத்தாவை வழிநடத்தியபோது, சுனில் நரேன், பியூஷ் சாவ்லா, குலதீப் யாதவ் போன்றவர்களைக்கொண்டு மிடில் ஓவர்களை கட்டுக்குள் வைத்திருப்பார். அமித் மிஸ்ரா, ஷபாஷ் நதீம், ராகுல் தெவேதியா என அழகாக டெல்லியின் ஆடுகளங்களுக்கு ஏற்றவாறு இரண்டு லெக் ஸ்பின்னர் மற்றும் ஒரு இடது கை பந்துவீச்சாளர் என சூழலின் கோட்டாவையும் டிக் அடித்து விட்டனர்.

கம்பீர், ப்ரித்வி ஷா, ரிஷப் பன்ட், ஷ்ரேயாஸ் ஐயர், மேக்ஸ்வெல், மோரிஸ், அமித் மிஸ்ரா, ரபாடா, குர்க்ரீத் மான், போல்ட், நதீம் - இதுதான் அனேகமாக பிளேயிங் லெவனாக இருக்கும்! 

36 வயதில் சொந்த மண்ணிற்கு மீண்டும் திரும்பியுள்ள கம்பீருக்கு இருக்கக்கூடிய ஒரே ஆசை என்னவெனில், தான் ஆடிய பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் மீண்டும் டெல்லி அணியை எழுச்சியடைய செய்து முதன்முறையாக டெல்லிக்கு கோப்பையை வெல்லவேண்டுமென்பதே. மும்பையை வெற்றிக்கு இட்டுச்சென்ற ரிக்கி பான்டிங் உடனிருக்க, தலைநகர் டெல்லியை ஐபிஎல்லில் தலைநிமிர வைப்பாரா கம்பீர்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close