சி.எஸ்.கே எப்போதும் செய்யும் அந்த ஒரு தவறு! - `மஞ்சள் மதம்’ தோன்றிய கதை! #CSK #IPL | A story about CSK comeback

வெளியிடப்பட்ட நேரம்: 11:17 (07/04/2018)

கடைசி தொடர்பு:11:21 (07/04/2018)

சி.எஸ்.கே எப்போதும் செய்யும் அந்த ஒரு தவறு! - `மஞ்சள் மதம்’ தோன்றிய கதை! #CSK #IPL

அணிகளுக்கான ஏலம் தொடங்கிய உடனேயே முதல் பிளேயராக மகேந்திர சிங் தோனியை சென்னை எடுத்ததும்,  ஐ.பி.எல், சி.எஸ்.கே இரண்டும் தமிழக மக்களுக்குப் பெரும் ஆர்வத்தைத் தூண்டக்கூடியதாக மாறிவிட்டது. 

சி.எஸ்.கே எப்போதும் செய்யும் அந்த ஒரு தவறு! - `மஞ்சள் மதம்’ தோன்றிய கதை! #CSK #IPL

2007-ம் ஆண்டு செப்டம்பரில், `ஐபிஎல் என்னும் 20-20 ஓவர் மேட்சுகள் விளையாடும் லீக் ஆரம்பிக்கப்போகிறது, அதில் சென்னை உள்பட எட்டு அணிகள் உண்டு. அதில், வெளிநாட்டு விளையாட்டு வீரர்களும் கலந்துகொள்வார்கள்’ என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தபோது, அந்த அறிவிப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு பெரிய உற்சாகத்தைக் கொடுக்கவில்லை. 2007 மார்ச்சில் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்ற உலக்கோப்பையில், முதல் சுற்றைத் தாண்டமுடியாமல் தோல்வியடைந்து திரும்பிய இந்திய அணியின்மீது, மக்களுக்கு கசப்பு இருந்தது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) மீதும். இவ்வளவு மக்கள் தொகை கொண்ட ஒரு நாடு, கிரிக்கெட்டை மதமாகக் கருதும் மக்கள், வசதிபடைத்த வாரியம் இருந்தும் இப்படி ஆகிவிட்டதே என... 

சென்னை

மக்களால் பெரிதும் மதிக்கப்படும் கிரிக்கெட்டர்களில் ஒருவரான கபில்தேவ், ஜீ குழுமத்துடன் இணைந்து, இண்டியன் கிரிக்கெட் லீக்கை (ஐசிஎல்) 2007 உலகக்கோப்பை தோல்விக்குப் பின்னர்தான் ஆரம்பித்திருந்தார். பிசிசிஐ கபில்தேவ் மீது காட்டிய தொடர் வெறுப்பும், ஜீ குழுமத்துக்கு கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமை கிடைப்பதில் இருந்த தடங்கல்கள் காரணமாக அவர்கள் கபில்தேவுக்குக் கொடுத்த ஆதரவும், ஐசிஎல்  தொடங்கக் காரணம் என்றாலும், அதற்கான தேவை இருந்ததை மறுக்கமுடியாது. 

ஏனென்றால், கிரிக்கெட் இந்தியாவில் ஆரம்பித்த காலத்தில் இருந்து பெருநகரங்களைச் சேர்ந்தவர்களே அதிகம் இந்தியாவிற்காக விளையாடி வந்திருக்கிறார்கள். சிறு நகரங்கள், கிராமங்களில் இருந்து வந்து இந்திய அணியில் சாதித்தவர்கள் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு. 2000-க்குப் பின்னர்தான் ஓரிருவர் அதுபோல உள்ளே வந்தார்கள். 

இந்த சூழ்நிலையில் ஐ.பி.எல் குறித்தான அறிவிப்பு பொதுவாக இந்திய மக்களிடம் மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தவில்லை. கபில்தேவ் செய்ததை காப்பி அடிக்கிறார்கள் என்ற பேச்சும் இருந்தது. எட்டு அணிகளில் சென்னையை மையமாகக் கொண்டு ஒரு அணி என அறிவிக்கப்பட்டது. அணிகளுக்கான ஏலம் தொடங்கிய உடனேயே முதல் பிளேயராக மகேந்திர சிங் தோனியை சென்னை எடுத்ததும்,  ஐ.பி.எல், சி.எஸ்.கே இரண்டும் தமிழக மக்களுக்குப் பெரும் ஆர்வத்தைத் தூண்டக்கூடியதாக மாறிவிட்டது. 

CSK

காரணம், தமிழர்களுக்கு கிரிக்கெட் மீதான ஆர்வம் என்பது பெரிது. ஆனால், தமிழ்நாட்டில் இருந்து கொண்டாடப்படக்கூடிய கிரிக்கெட் வீரர்கள் வந்தது மிகக்குறைவு. சுதந்திரத்திற்கு முன் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ரங்காச்சாரி. இவர் பந்துவீச்சில் ஏகப்பட்ட ஸ்டம்புகளை உடைத்தெறிந்தவர் என்று சொல்வார்கள். இந்திய அணி என்றான பின் அதில் சாதித்தவர் என்றால் சுழற்பந்து வீச்சாளர் வெங்கட் ராகவன். இவர் ஓரிரு டெஸ்ட்கள் இந்திய கேப்டனாகவும் பணியாற்றி பின் சர்வதேச அம்பயராக மாறியவர். இவர் காலத்தில் பிரசன்னா, பேடி, சந்திரசேகர் போன்றோருடன் இணைந்து சுழற்பந்துவீச்சின் நான்கு கில்லாடிகளில் ஒருவராக இருந்தார். ஆனாலும், அவர்மீது கிரேஸ் வரும் அளவுக்கு பெரிய சம்பவங்களை நிகழ்த்தவில்லை. 

அடுத்த சில ஆண்டுகள் பெரிய அளவில் பேசப்பட்டவர், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த். இன்றுவரை தமிழ்நாட்டிலிருந்து வந்த கிரிக்கெட்டர்களிலேயே ஒருவரது ஆட்டத்தை, நாமே ஆடுவதுபோல தொடர்புபடுத்தி ரசிக்க முடியுமெனில் அது, ஸ்ரீகாந்தின் ஆட்டம்தான். விக்கெட் விழாமல் ஆடுவதே லட்சியம் என்று இருந்த 80-களின் இந்திய பேட்ஸ்மேன்கள் மத்தியில், விரைவாகச் சேர்க்கும் ரன் முக்கியம் என ஆடியவர், இவர் ஒருவர்தான். ஆனாலும், இவரும் சில காலமே லைம்லைட்டில் இருந்தார்.

அவரது சமகாலத்திய லெக்ஸ்பின்னர் சிவராம கிருஷ்ணன். ஆலன் பார்டரை ஆஸ்திரேலியாவில் வைத்து தன் சுழலால் மிரட்டியவர். ஆனாலும், ஓரிரு ஆண்டுகளிலேயே தன் ஃபார்மை இழந்தார். அடுத்து, டபிள்யூ.வி.ராமன், வி.பி.சந்திரசேகர் என உள்ளே வந்தாலும் அவர்களின் காலம்,  ஒன்றிரண்டு மேட்சுகள்தான். அடுத்து, நீண்டகாலம் விளையாடிய ஒருவர் என்றால் ராபின் சிங். அவர், ஒரு ஆல்ரவுண்டர் என்றாலும் உலகத்தர ஆட்டக்காரர் இல்லை. தன் ஃபீல்டிங் திறமையாலும், ஒருநாள் போட்டிகளுக்குத் தோதான பேட்டிங் திறமையாலும் அவ்வப்போது கைகொடுக்கும் பந்துவீச்சாலும், ஒருநாள் அணியில் தாக்குப்பிடித்தார். அதன்பின்னர் தினேஷ் கார்த்திக்.

தமிழக ஆட்டக்காரர்கள் என்று இல்லை, பொதுவாக தமிழக ரஞ்சி அணியே சராசரியாகத்தான் விளையாடுவார்கள். இரண்டு முறை மட்டுமே ரஞ்சிக் கோப்பையைப் பெற்ற அணி அது. மும்பை அணியெல்லாம் முப்பதுக்கு மேல் கோப்பைகளை வாங்கி அடுக்கிவைக்க இடமில்லாமல் திணறிய அணி. 

CSK

கிரிக்கெட் என்றில்லை... வேறு எந்த விளையாட்டையும் எடுத்துக் கொள்ளுங்கள். இது தமிழ்நாட்டு அணி, புகுந்து விளையாடும் என சொல்லும்படி ஏதாவது அடையாளம் இருக்கிறதா? கூடைப்பந்து என்றால் பஞ்சாப், கால்பந்து என்றால் கேரளம், மேற்கு வங்காளம் போன்ற தனித்த அடையாளங்கள் தமிழக அணிக்கு இல்லை. ஹாக்கி விளையாட்டில் ஒரு பாஸ்கரன் இருந்தார். செஸ் என்றால் ஒரு விஸ்வநாதன் ஆனந்த். டென்னிஸ் என்றால் அந்தக் காலத்தில் ராமநாதன் கிருஷ்ணன், அப்புறம் விஜய் மற்றும் ஆனந்த் அமிர்தராஜ்,  ரமேஷ் கிருஷ்ணன் என அவ்வப்போது தோன்றும் மின்னல்கள் மட்டுமே. குழு விளையாட்டுகள் என்றால்தான் அதைப் பார்த்து ஆர்ப்பரித்து நாமே விளையாடுவதுபோல கொண்டாடி மகிழமுடியும்.

இதற்கான வாய்ப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் நிச்சயம் இருக்கும் என தமிழர்களுக்கு ஒரு உள்ளார்ந்த நம்பிக்கை அப்போது வந்தது. காரணம், தோல்வி முகத்தில் இருந்த இந்திய அணிக்கு, ட்வென்டி 20 உலகக் கோப்பை வெற்றிமூலம் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுத்தவர் தோனி. அவருடன் மேத்யூ ஹெய்டன், ஹஸி, முரளிதரன் என நட்சத்திர வீரர்களும் அணிக்கு வர தமிழக மக்கள் மகிழ்ந்தார்கள். முதல் சீசனில் இரண்டாம் இடம் பெற்றாலும், இரண்டு முறை கோப்பையைப் பெற்று, இந்த ஐபிஎல் களத்தில் ஒரு சக்தியாக விளங்குகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.  

சிஎஸ்கே, இந்திய அணியைப் போலவே தன்னை தகவமைத்துக்கொண்டாதாகக் கூட சில சமயங்களில் தோன்றும். அட்டகாசமான பேட்ஸ்மேன்கள், வெற்றி தரக்கூடிய ஸ்பின்னர்கள், ஆட்டத்தின் கடைசிவரை இழுபறியாகக் கொண்டுசென்று கடைசி நேரத்தில் வெல்வது என இந்திய அணிக்குள்ள, எல்லா கல்யாண குணங்களும் சிஎஸ்கே-வுக்கு உண்டு.

எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த் படங்கள் என்றால், படம் முடியும் தருவாயில் வில்லனை வென்றால்தான் மகிழ்ச்சி, சிவாஜி கணேசன் படமென்றால், கண்ணீர் சிந்தச்சிந்த படம் பார்த்தால்தான் திருப்தி என்பதுபோல இந்தியா விளையாடும் கிரிக்கெட் மேட்சுகளும் இறுதி வரை வெற்றியா, தோல்வியா என கணிக்கவே முடியாமல், கையில் இருக்கும் நகங்களை எல்லாம் கடித்ததுபோக, அருகில் இருப்பவர்களின் நகங்களையும் கடிக்கும் வரை டென்ஷனாகிப் பார்த்தால்தான், அந்த மேட்ச் பார்த்த திருப்தியே கிட்டும். பொதுவாக,  தமிழர்கள் அட்வெஞ்சர்ஸ் டூர் செல்வது மிகவும் குறைவு. கடைசி நேரத்தில் வேகமாக ஓடிவந்து பஸ்ஸைப் பிடிப்பதுதான் பெரும்பாலான தமிழர்கள் தங்கள் வாழ்நாளில் செய்யும் ஒரே அட்வெஞ்சர். எனவேதான், தாங்கள் ரசித்துப்பார்க்கும் கிரிக்கெட்டில் அட்வெஞ்சர்களை எதிர்பார்க்கிறார்கள்.

CSK

இந்தப் போட்டியில் வெற்றிபெறுமா இல்லையா என தவிக்கவிடுவது முதல், பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறுமா என்பது வரை தொடர்ந்து தவிப்பிலேயே வைத்து, ஒவ்வொரு முறையும் அதற்குத் தகுதிபெற்று, தமிழர்களுக்குத் தேவையான அட்வெஞ்சரைத் தருவதில் சிஎஸ்கே என்றும் தவறியதில்லை.

இந்தியா போலவே சிஎஸ்கே-யிடம் இருக்கும் இன்னொரு குணம், அதிவேகப் பந்துவீச்சாளர்களை எடுக்காதது. இந்திய அணிக்காவது உருவாக்க வேண்டும் என்று வைத்துக்கொள்ளலாம். சிஎஸ் கே-வுக்கு திறமைகளை எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு இருந்தும் ஏன் எடுப்பதில்லை எனத் தெரியவில்லை.

ஐபிஎல் ஆரம்பித்தபோது சொல்லிய முதல் காரணமே, உள்ளூர் திறமைகளை வளர்த்தெடுக்க இது உதவியாக இருக்கும் என்பதே. ராஜஸ்தான் ராயல்ஸ் சில ஆட்டக்காரர்களை உருவாக்கியது. சிஎஸ்கே-வும் அஷ்வின், முரளி விஜய் ஆகியோருக்கு நல்ல அடித்தளம் கொடுத்தது. ஆனால், சிஎஸ்கே-வுக்கு ஏன்... இந்தியாவுக்கே தேவைப்படும் அதிவேகப் பந்துவீச்சாளர்களை ஏன் அது வளர்த்தெடுப்பது இல்லை என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. இத்தனைக்கும், ஆறடிக்கு மேல் உயரமான, வலுவான, கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள, ஏராளமான தமிழ் இளைஞர்கள் இருக்கிறார்கள். சென்னையில் இதன் தேவையை உணர்ந்து, வெகுகாலத்துக்கு முன்னரே எம்.ஆர்.எஃப் பேஸ் பவுண்டேஷன் அமைக்கப்பட்டது. அதன் கோச்சாக ஆஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லி செயல்பட்டார். அதுபோன்ற பாரம்பர்யம்கொண்ட சென்னையில், ஏன் சிஎஸ்கே தரமான வேகப்பந்துவீச்சாளர்களை உருவாக்க முயற்சி எடுக்க மாட்டேன் என்கிறது எனப் புரியவில்லை.

CSK practice

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக செய்திகள் வந்தபோதுகூட, தமிழக மக்கள் கலங்கவில்லை. இதெல்லாம் கிரிக்கெட்டில் சகஜம்தானே, நமக்குத் தேவை என்டர்டெயின்மென்ட் என்ற எண்ணத்தில் இருந்தார்கள். ஆனால், அணிக்கு இரண்டாண்டு தடை என்றதும் கலங்கிப் போனார்கள். யாருக்கு ஆதரவு தெரிவிப்பது எனக் குழம்பி, அணித் தலைவர் தோனி இருந்த புனே அணிக்கு பலர் ஆதரவைத் தெரிவித்தார்கள். அதற்கு இணையாக,  அணியின் முக்கிய ஆட்டக்காரர் ரெய்னா தலைமையேற்றிருந்த குஜராத் லயன்ஸ் அணிக்கும் ஆதரவைத் தெரிவித்தார்கள். அந்த அளவுக்கு சிஎஸ்கே-யுடன் பெரும்பாலான தமிழர்கள் ஒன்றிப்போய்விட்டார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்மீது எத்தனை விமர்சனம் இருந்தாலும், ஏப்ரல் 7-ம் தேதி முதல், `டேய் அங்கேயே உட்காருடா... எந்திரிக்காத, நம்ம விக்கெட் போயிரும்’,  `என்னடா, இது மும்பை இந்த அடி அடிக்கிறான். இரு, நான் எந்திரிச்சுப் போய் தண்ணி குடிச்சிட்டு வர்றேன். விக்கெட் விழும்’ என்பது போன்ற குரல்கள் கேட்கத் தொடங்கும். அடுத்த நாள் பேருந்துகள், அலுவலகங்களில் விவரணைகள் அடிபடும். சீரியல் பார்ப்பதைத் தங்களின் அத்தியாவசியக் கடமையாக மனதில் வரித்துக்கொண்ட பெண்கள்கூட, தங்கள் கணவரின், மகனின் ஏக்கம் பார்த்து ரிமோட்டை தானமாகக் கொடுப்பார்கள். 

ஏனென்றால், தமிழர்கள் தங்கள் அடையாளம் ஒன்று இந்திய அளவில் வெற்றிபெறாதா எனப் பல்லாண்டுகள் காத்திருந்ததற்கு, வராது வந்த மாமணியாய் வந்தது இந்த சிஎஸ்கே!


டிரெண்டிங் @ விகடன்