Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராணுவ வீரர் வீட்டில் கிடைத்த பதக்கப்புதையல் - சாம்பியன் சதீஷ் சிவலிங்கம்! #CWG2018

கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம் தங்கம் வென்று அசத்தியுள்ளார். பளுத்தூக்குதலில் 77 கிலோ எடைப் பிரிவில் 144 கிலோ (Snatch), க்ளீன் அண்டு ஜெர்க் பிரிவில் 173 கிலோ என மொத்தம் 317 கிலோ எடை தூக்கி தங்கத்தைத் தட்டிச் சென்றார். காமன்வெல்த் போட்டியில் சதீஷ்குமார் வெல்லும் இரண்டாவது தங்கம் இது. 25 வயதே நிரம்பிய, சதீஷ்குமார் சிவலிங்கத்தின் பின்னணி மிக மிகச் சாதாரணமானது.

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியைச்  சேர்ந்த சதீஷ்குமாரின் தந்தை சிவலிங்கம், ராணுவத்தில் பணியாற்றியவர்.  சிவலிங்கமும் வெயிட் லிஃப்டர்தான். தேசிய அளவிலான பதக்கங்களை வென்றுள்ளார். ராணுவத்திலிருந்து விலகிய சிவலிங்கம், தற்போது வி.ஐ.டி பல்கலையில் காவலாளியாகப் பணிபுரிகிறார்.  

தங்கம் வென்ற காவலாளி மகன்

தந்தை வெயிட் லிஃப்டர் என்பதால், சதீஷின் ரத்தத்திலேயே வெயிட் லிஃப்டிங் ஊறியிருந்தது.  பதின்மூன்று வயதிலிருந்தே பளுத்தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டார். தினமும் காலை மாலை என இரு வேளைகளிலும் சுமார் 5 மணி நேரம் பயிற்சி மேற்கொள்வார். சதீஷ்குமாரை கொஞ்சம் கொஞ்சமாகப் பட்டைதீட்டினார் தந்தை சிவலிங்கம். கிரீஸ் நாட்டைச் சேர்ந்த உலகச் சாம்பியன் வெயிட் லிஃப்டர் பைராஸ் திமாஸ், இந்திய ரெஸ்லர் யோகேஸ்வர் தத் ஆகியோர்தான் சதீஷ்குமாரின் கனவு நாயகர்கள்!

சத்துவாச்சாரியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்த சதீஷ்குமார், வீட்டருகே உள்ள அட்லஸ் வெயிட் லிஃப்டிங் அகாடமியில் பயிற்சிக்காகச் சேர்ந்தார். கடும் பயிற்சி, உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு இருந்ததால் சதீஷ்குமார் எளிதாகவே மெருகேறினார். பளுத்தூக்குதலில் உள்ள நுணுக்கங்களைக் கற்றுத்தேர்ந்த அவர், முதலில் தேசிய அளவில் வெற்றிகளைக் குவித்தார். கல்லூரிப் படிப்பைப் பாதியில் கைவிட்டாலும், ரயில்வேயில் சதீஷ்குமாருக்கு வேலை கிடைத்தது. தென்னக ரயில்வேயில் சாதாரண க்ளார்க் பணி. வீட்டின் வறுமை ஓரளவுக்கு விலக ஆரம்பித்தது. ஆனால், சாம்பியனாக வேண்டும் என்ற கனவு மட்டும் உள்ளுக்குள் கனன்றுகொண்டே இருந்தது. 

2014-ம் ஆண்டு, கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் சாம்பியன் கனவை எட்டினார். இந்தப் போட்டியில் 77 கிலோ எடைப் பிரிவில் சதீஷ்குமார் தங்கம் வென்றபோதுதான் தமிழகத்துக்கே இவரை அடையாளம் தெரிந்தது. விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சதீஷ்குமாரின்  சாதனையைப் பாராட்டி  50 லட்சம் ரூபாய் பரிசளித்தார்.

எந்த ஒரு விளையாட்டு வீரனுக்கும் ஒலிம்பிக் பதக்கம்தான் இறுதி இலக்காக இருக்கும். சதீஷ்குமார் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?

2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் சதீஷ்குமார் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. 77 கிலோ எடைப் பிரிவில் சதீஷ்குமாரிடம்தான் தேசிய சாதனையும் உள்ளது. அதிகபட்சமாக 336  (149 + 187) கிலோ அவர் தூக்கியுள்ளார். 

ரியோ ஒலிம்பிக்கில் சதீஷ்குமார் பதக்கம் வென்றிருந்தால், பளுத்தூக்குதலில் `போடியம்' ஏறிய இரண்டாவது `இந்தியர்' என்கிற பெருமை கிடைத்திருக்கும். ஒலிம்பிக் பளுத்தூக்குதலில்  ஒரே இந்தியர்தான் பதக்கம் வென்றுள்ளார். 2000-ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் 69 கிலோ எடைப் பிரிவில் கர்ணம் மல்லேஸ்வரி வெண்கலம் வென்றார். அதற்குப் பிறகு சதீஷ்குமார் மீதுதான் கடும் எதிர்பார்ப்பு நிலவியது. துரதிர்ஷ்டவசமாக ரியோ ஒலிம்பிக்கில் `பி' பிரிவில் போட்டியிட்ட அவரால் 11-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. ஒலிம்பிக் தோல்வியால் சதீஷ்குமார் துவண்டுவிடவில்லை. தொடர்ந்து தீவிரமாகப் பயிற்சி பெற்றுவந்த சதீஷ்குமார், கோல்டு கோஸ்டில் `கோல்டு' அறுவடை செய்துள்ளார்.

சதீஷ்குமாரின் தந்தை சிவலிங்கத்துக்கு, சர்வதேசப் பதக்கம் வெல்வது கனவாகவே இருந்தது. கடைசி வரை சிவலிங்கத்தால் சர்வதேசப் போட்டியில் ஒரு பதக்கம்கூட வெல்ல முடியவில்லை. தந்தையின் ஆசையை, ஒன்றுக்கு இரண்டு தங்கமாக வென்று பூர்த்திசெய்துள்ளார் சதீஷ்குமார்... வெல்டன் தமிழா!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்
Advertisement

MUST READ

Advertisement