ஜி.பி.எஸ். கோளாறால் பீச் வாலிபால் வீராங்கனைகளுக்கு நேர்ந்த சோகம்!

ஜி.பி.எஸ். கோளாறால் பீச் வாலிபால் வீராங்கனைகளுக்கு நேர்ந்த சோகம்!

ஜி.பி.எஸ்ஸில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கரீபியன் தீவுகளில் உள்ள கிரேனாடா நாட்டைச் சேர்ந்த பீச் வாலிபால் வீராங்கனைகளைப் பேருந்து ஓட்டுநர் ஒருவர் காமன்வெல்த் போட்டி நடைபெறும் இடத்தை விடுத்து மற்றொரு நகரத்துக்கு அழைத்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது. 

காமன்வெல்த் போட்டிகள்

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கரீபியன் தீவுகளில் உள்ள கிரேனாடா நாட்டைச் சேர்ந்த தோர்னியா வில்லியம்ஸ் மற்றும் ரனீஷா ஸ்டாஃபோர்ட் ஆகியோர் பீச் வாலிபால் போட்டியில் கலந்துகொள்ள வந்தனர். கோல்ட் கோஸ்ட் அருகில் உள்ள கூலங்கட்டா பகுதியில் உள்ள விளையாட்டு அரங்குக்குச் செல்வதற்காக போட்டி ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்திருந்த பேருந்தில் ஏறினர். ஆனால், அந்தப் பேருந்தில் இருந்த ஜி.பி.எஸ். இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பேருந்து ஓட்டுநர் கோல்ட் கோஸ்ட் நகருக்குச் செல்வதற்குப் பதிலாக, அங்கிருந்து 100 கி.மீ. தூரத்தில் உள்ள பிரிஸ்பேன் நகருக்கு அழைத்துச் சென்றுவிட்டார். பின்னர், அங்கிருந்த போலீஸாரின் உதவியுடன் கூலங்கட்டா பகுதியிலுள்ள விளையாட்டு அரங்குக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். பயணத்தால் சிறிது தாமதம் ஏற்பட்டாலும், போட்டி தொடங்குவதற்கு முன்பாக விளையாட்டு அரங்கை ஆஸ்திரேலிய போலீஸார் உதவியுடன் அந்த வீராங்கனைகள் அடைந்தனர். 

சரியான சமயத்தில் விளையாட்டு அரங்க அடைந்தாலும், ஸ்காட்லாந்தைச் சேர்ந்த லியான் பீட்டி மற்றும் மெலீஸா கௌட்ஸ் ஜோடியிடம் 2-0 என்ற கணக்கில் கிரேநாடா வீராங்கனைகள் தோல்வியடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து பேசிய காமன்வெல்த் போட்டிகளின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைமை நிர்வாகி மார்க் பீட்டர்ஸ், `இந்த விவகாரம் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. இதுபோன்ற தவறுகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க, பேருந்துகளில் ஒட்டுநருடன் உதவியாளர் ஒருவரும் பணியமர்த்த நாங்கள் முடிவு செய்துள்ளோம்’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!