Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரோஹித் வெடிக்கலாம், பும்ரா மிரட்டலாம்... ஆனால்! எப்படி இருக்கிறது மும்பை அணி? #IPL2018

நடப்பு சாம்பியன் அந்தஸ்தோடு மூன்றாவது முறையாக ஐபிஎல் தொடரில் களமிறங்கப்போகிறது மும்பை இந்தியன்ஸ். ரோஹித், ஜெயவர்தனே என அதே கேப்டன் - பயிற்சியாளர் கூட்டணி இந்த முறையும் தொடர்கிறது. சென்னைக்கு அடுத்தபடியாக, கோப்பையைத் தக்கவைத்துக்கொண்ட இரண்டாவது அணி என்ற பெருமையை மும்பை அடையுமா? அதற்குத் தேவையான பலம் அந்த அணியில் இருக்கிறதா? ஒரு பார்வை...

ரோஹித் - மும்பை

தங்கள் அணியின் பழைய 'core' பிளேயர்களைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது மும்பை இந்தியன்ஸ். ரோஹித் ஷர்மா, ஹர்டிக் பாண்டியா, குருனால் பாண்டியா, ஜஸ்ப்ரித் பும்ரா, கரன் பொல்லார்ட் என இவர்களைச் சுற்றித்தான் அணியைக் கட்டமைத்துள்ளனர். இவர்கள் தவிர்த்து பழைய முகங்களான ஆதித்யே தாரே, ஜே.பி.டுமினி, மிட்சல் மெக்லனகன் ஆகியோரும் மும்பை அணிக்குத் திரும்பியுள்ளனர். 

பேட்டிங்கைப் பொறுத்தவரை, 'அடுத்த கெய்ல்' எனக் கருதப்படும் ஈவின் லூயிஸ், அணியின் ஓப்பனராக இருப்பது பலம். சர்வதேச டி-20 போட்டிகளில் 154.96 என்ற மிரட்டல் ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். 14 போட்டிகளில் இரண்டு சதங்கள் அடித்து அசத்தியுள்ளார். கடைசியாக விளையாடிய 5 ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை அரைசதம் கடந்து அற்புதமான ஃபார்மில் இருக்கிறார். இவரோடு ஓப்பனராக இறங்க ரோஹித், இஷான் கிஷான் என இரண்டு நல்ல ஆப்ஷன்கள் இருக்கின்றன. 

19 வயது இஷான் மீது அதிக பொறுப்புகள் இருக்கின்றன. அணியின் நம்பர் 1 விக்கெட் கீப்பர் அவர்தான். அவருக்குச் சரியான மாற்று இல்லை. இருக்கும் ஒரே மாற்று வீரர் தாரே பெரிய அளவில் சோபிப்பது சந்தேகம். அதனால், எப்படியும் அனைத்துப் போட்டிகளிலும் இஷான்தான் விளையாடவேண்டியிருக்கும். ரோஹித் இவரையே தொடக்க வீரராக இறக்குவார். உள்ளூர் போட்டிகளில் நல்ல ஃபார்மில் இருப்பதால் அதிக எதிர்பார்ப்பு இருக்கும். 

குருனால் பாண்டியா - மும்பை

அணியின் முக்கியத் தூண்களான ஹர்டிக், குருனால் இருவரும்தான் இந்த சீசனும் மும்பை அணியின் துருப்புச்சீட்டுகள். 8.8 கோடிக்கு விலை போன பிறகும் கொஞ்சம்கூட யோசிக்காமல் குருனால் பாண்டியாவை RTM கார்டு பயன்படுத்தி மும்பை வாங்கியது. அதிலிருந்தே அவரை அந்த அணி எவ்வளவு முக்கியமாகக் கருதுகிறது என்பது புரிகிறது. ஹர்டிக் பாண்டியா இன்னும் கன்சிஸ்டன்டான பேட்ஸ்மேனாக மாறவேண்டும். மும்பை அணி அவரை பேட்டிங் ஆர்டரில் புரமோட் செய்யும் எனத் தெரிகிறது. அடிக்கடி பேட்டிங் ஆர்டரை மாற்றாமல், அணியில் அவருடைய ரோல் என்னவென்பதை தெளிவுபடுத்துவது அவசியம். 

மிடில் ஆர்டரில் பாண்டியா சகோதரர்களுடன் பொல்லார்ட்தான் கைகோப்பார். ஒன்பது ஆண்டுகளாக அந்த அணியில் அங்கம்வகிக்கும் அவர் இல்லாமல் களமிறங்க மாட்டார்கள். ஆனால், அவரது ஃபார்ம் மும்பை அணிக்கு பலவீனம்தான். பாகிஸ்தான் சூப்பர் லீகில் 10 போட்டிகளில் 165 ரன்தான் எடுத்தார். மேலும், பந்துவீச்சிலும் மிகவும் சுமாராகவே (எகானமி : 9.50) செயல்பட்டார். மும்பை அணி, அவரை பெரும்பாலும் பேட்ஸ்மேனாகவே பயன்படுத்தும். ஆனாலும், டுமினி, பென் கட்டிங் என இரண்டு நல்ல வீரர்களை வெளியில் அமரவைத்துவிட்டு இவரை களமிறக்குவது தவறான முடிவாகவே அமையும். ரோஹித் இந்த இடத்தில் நன்கு யோசித்து முடிவெடுக்க வேண்டும். 

ஈவின் லூயிஸ்

இவர்கள் தவிர்த்து அனுபவ வீரர்கள் சௌரப் திவாரி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அந்த அணியின் மிடில் ஆர்டருக்குப் பலம் சேர்க்கிறார்கள். இவர்கள் தவிர்த்து சித்தேஷ் லேட், சரத் லம்பா, மயாங்க் மார்கண்டே போன்ற வீரர்களும் தங்களை நிரூபிக்கும் வாய்ப்புக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அண்டர்-19 அணியின் ஆல்ரவுண்டர் அனுகுல் ராய் மும்பை அணிக்குக் கூடுதல் ஆப்ஷன்கள் கொடுக்கிறார். 

வேகப்பந்துவீச்சில் மும்பை அணி பலம்பொருந்தியதாகவே இருக்கிறது. பும்ரா, முஸ்டாஃபிசுர் ரஹ்மான், பேட் கம்மின்ஸ் மூவரும் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார்கள். டெத் ஓவர்களில் பும்ரா, முஸ்டாஃபிசுர் கூட்டணியைவிட மிரட்டலான பௌலிங் கூட்டணி எந்த அணிக்கும் அமையாது. கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடலாம் என எதிர் அணிகள் ப்ளான் வைத்திருந்தால், கொஞ்சம் கஷ்டம்தான். முஸ்டாஃபிசுர், மெக்லனகன், பிரதீப் சங்வான், மோஷின் கான் என இடதுகை ஃபாஸ்ட் பௌலர்கள் வரிசைகட்டி நிற்கிறார்கள். 

இதுவரை மும்பை அணி நன்றாகத்தான் இருக்கிறது. நல்ல பிளேயிங் லெவன் இருக்கிறது. அற்புதமான டாப் ஆர்டர், எக்கச்சக்க ஆல்ரவுண்டர்கள், மிரட்டலான ஃபாஸ்ட் பௌலர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஸ்பின்..? 10 ஆண்டுகளாக ஹர்பஜன் சிங் என்ற மிகப்பெரிய ஸ்பின்னரைக்கொண்டிருந்த அணியில் இப்போது அனுபவ ஸ்பின்னர் ஒருவர்கூட இல்லை. கரன் ஷர்மாவையும் பரம வைரி சூப்பர் கிங்ஸுக்கு தாரைவார்த்துவிட்டனர். இப்போது அணியில் இருக்கும் ஒரே இந்திய ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னர் ராகுல் சஹார் மட்டுமே!

ராகுல் சஹார்

18 வயது ராகுல் சஹார் தவிர்த்து, இலங்கை வீரர் அகிலா தனஞ்செயா மட்டுமே. அவர் பிளேயிங் லெவனில் ஆடும்பட்சத்தில், கம்மின்ஸ் அல்லது முஸ்டாஃபிசுர் ஆகியோரில் ஒருவர் வெளியே அமர வேண்டும். அந்த இடத்தில் விளையாடுவதற்குச் சரியான இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை. குருனால் பாண்டியா மட்டுமே நல்ல ஸ்பின் ஆப்ஷன். அதனால், நிச்சயம் அந்த ஐந்தாவது பௌலர் மும்பைக்கு மிகப்பெரிய மைனஸ்.

மகிளா ஜெயவர்தனே, சச்சின், ஷேன் பாண்ட், ராபின் சிங், மலிங்கா என பயிற்சியாளர் குழுவே ஒரு ஐபிஎல் அணிபோல் இருக்கிறது. பந்துவீச்சில் மலிங்காவை மிஸ்செய்தாலும், அவர் பயிற்சியாளர் குழுவில் இருப்பது வேகப்பந்து வீச்சுக்கு பலம் சேர்க்கும். இதுவரை மும்பை அணியின் பயிற்சியாளர்களாக ஜான் ரைட், ரிக்கி பான்டிங் இருவரும் மும்பை அணியின் பயிற்சியாளராக, தங்களின் முதல் வருடத்தில் கோப்பை வென்றனர். ஆனால், இரண்டாம் வருடத்தில் சொதப்ப, பதவியிலிருந்து வெளியேறினர். தற்போதைய பயிற்சியாளர் ஜெயவர்தனேவும் முதல் சீசனில் கோப்பை வென்றுவிட்டார். இப்போது...? 

மலிங்கா - பும்ரா

ஏற்கெனவே சொன்னதுதான், பேட்டிங்கில் ரோஹித் அடித்து வெளுக்கலாம், பௌலிங்கில் பும்ரா மிரட்டலாம். ஆனால், ஸ்பின் ஏரியாவில் சரியான தீர்வு காணாமல், பொல்லார்ட் இடத்தில் சரியான வீரரை களமிறக்காமல், மும்பை கோப்பையைத் தக்கவைத்துக்கொள்வது கடினமே.

மும்பை அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்? 

ஈவின் லூயிஸ், இஷான் கிஷான், ரோஹித் ஷர்மா, குருனால் பாண்டியா, கரன் பொல்லார்ட், ஹர்டிக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ராகுல் ஷார், பேட் கம்மின்ஸ், ஜஸ்ப்ரித் பும்ரா, முஸ்டாஃபிசுர் ரஹ்மான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்
Advertisement

MUST READ

Advertisement