Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

``சேப்பாக்கத்தில் மொபைல் போனுக்கு தடா... கறுப்புச்சட்டை அணிந்துவந்தால்..?" - என்ன சொல்கிறது கிரிக்கெட் வாரியம்?

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னை சேப்பாக்கம் மைதானம், முதல் ஐ.பி.எல் போட்டிக்குத் தயாராகிறது. நாளை (10.4.2018), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகிறது. `காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை சென்னையில் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறக் கூடாது என்றும், அப்படி நடைபெற்றால் பார்வையாளர்களாக உள்ளே நுழைந்து போரோடுவோம்' என்றும் பல அரசியல் அமைப்புகள் போராட்டம் அறிவித்துள்ளன. இந்நிலையில், சென்னையில் ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகமும் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியமும் அறிவித்துள்ளன.

ஐபிஎல்

பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே நாளை நடைபெறும் கிரிக்கெட் போட்டியைக் காண வரும் ரசிகர்கள் என்னென்ன கொண்டுவர வேண்டும், கொண்டுவரக் கூடாது என்ற பட்டியலை தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. `இதில் மொபைல்போன் உள்பட எந்த எலெக்ட்ரானிக் உபகரணமும் கொண்டுவரக் கூடாது' என அறிவிக்கப்பட்டுள்ளது. 

`செல்போன், கேமரா, வீடியோ கேமரா, பைனாகுலர், கண்ணாடி பாட்டில்கள், குளிர்பானம் மற்றும் மதுபானம் அடங்கிய பாட்டில்கள், கத்தி, வெடிபொருள்கள், பை, பெட்டிகள், தீப்பற்றக்கூடிய பொருள்கள், சிகரெட் லைட்டர் மற்றும் தீப்பெட்டிகள், காற்று ஒலிப்பான், புகைகுண்டு மற்றும் கொடிக்கம்புகள், மதுபானங்கள் மற்றும் போதைப் பொருள்கள் (பதிவுசெய்யப்பட்ட மருத்துவ அதிகாரி பரிந்துரைக்கப்பட்ட பொருள்கள் தவிர்த்து), அரங்கத்தின் வெளியே தயாரித்த உணவுப்பொருள்கள், செல்லபிராணிகள், பேனர்கள், விளம்பரத் தட்டிகள், துண்டுப்பிரசுரங்கள், சின்னங்கள் அல்லது இதர பொருள்கள், அரசியல், மதம் மற்றும் சாதி தொடர்பான கடுமையான வார்த்தைகள் பயன்படுத்தி எழுதப்பட்ட விளம்பரங்கள் அல்லது உருவ பொம்மைகள் போன்ற பொருள்களை  மைதானத்துக்குள் கொண்டுவரக் கூடாது' என்கிறது கிரிக்கெட் வாரியம்.

ஆனால், `சோஷியல் மீடியா யுகத்தில் செல்போனுக்குத் தடையா?' என ரசிகர்களிடையே கேள்விகள் எழுகின்றன. ``இந்த அறிக்கை என்பது வழக்கமான அறிக்கைதான்!'' என்கிறார்கள் சென்னை ரசிகர்கள். மேலும், ``செல்போன் கொண்டுவரக் கூடாது என்று சொல்வார்கள். ஆனால் செல்போன் கொண்டுவருபவர்களை இதுவரை தடுத்ததேயில்லை'' என்கிறார்கள்.

நாளைய சென்னை போட்டிக்கு, பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஐந்து கூடுதல் கமிஷனர்கள் தலைமையில், பாதுகாப்புப் பணிகள் கண்காணிக்கப்பட உள்ளன.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின்போது கறுப்புச் சட்டை அணிந்துவந்தவர்களை மைதானத்துக்குள் நுழையவிடாமல் தடுத்தது சென்னை போலீஸ். இந்தமுறை பல அமைப்புகளும் கறுப்புச் சட்டை அணிந்துவருவோம் என்று வெளிப்படையாகவே சொல்லும் நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய நிர்வாகியிடம் பேசினோம்... ``கறுப்புச் சட்டை அணிந்து வருபவர்களை தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் இதுவரை தடுத்ததேயில்லை. நாளைய போட்டிக்கும் நாங்கள் கறுப்புச் சட்டை அணிந்து வந்தால் அனுமதியில்லை எனச் சொல்லவில்லை. ஆனால், போலீஸ் என்ன முடிவெடுக்கும் என்பது எங்களுக்குத் தெரியாது'' என்றார்.

மைதானத்துக்குள் சந்தேகத்துக்குரிய வகையில் யாராவது தெரிந்தால், சிலரது செயல்கள் தகாதவகையில் இருந்தால், பார்வையாளர்கள் உடனடியாக போலீஸிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் கிரிக்கெட் வாரிய அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் செல்போன் அல்லது பார்வையாளர்கள் கொண்டுவரும் எந்தப் பொருள்களையும் போலீஸிடமோ அல்லது வேறு யாரிடமோ கொடுத்துவிட்டு உள்ளே போக வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement