வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (11/04/2018)

கடைசி தொடர்பு:07:45 (11/04/2018)

`இரண்டு இன்னிங்ஸையும் ரசிகர்கள் அணுவணுவாக ரசித்தனர்’ தோனி நெகிழ்ச்சி!

`இரண்டு இன்னிங்ஸையும் ரசிகர்கள் அணுவணுவாக ரசித்தனர்’ என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் தோனி கூறினார்.

`இரண்டு இன்னிங்ஸையும் ரசிகர்கள் அணுவணுவாக ரசித்தனர்’ என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கூறினார்.

11-வது ஐபிஎல் தொடரில், நேற்று இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 202 ரன்கள் குவித்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடிய அந்த அணியின் ரஸ்ஸல், 36 பந்துகளில் 88 ரன்களைக் குவித்தார்.

தோனி

photo credit: @BCCI

இதையடுத்து, 203 ரன்கள் வெற்றி இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. சிஎஸ்கே அணி வீரர்கள் நிதானமாக விளையாடினாலும், சாம் பில்லிங்க்ஸ் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சாம் பில்லிங்க்ஸ் 23 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச்சென்றார். கடைசியில் 2 பந்துகளுக்கு 4 ரன்கள் எடுக்கவேண்டிய நிலையில், ஜடேஜா சிக்ஸ் அடித்து அணியை வெற்றிபெறச்செய்தார். 19.5 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை எடுத்து வெற்றிபெற்றது.

போட்டி முடிந்த பிறகு பேசிய தோனி, ``சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டு ஆண்டுகள் கழித்து வந்து சென்னையில் வெற்றிபெற்றிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இது ஒரு நல்ல போட்டியாக இருந்தது. இரண்டு இன்னிங்ஸையும் ரசிகர்கள் அணுவணுவாக ரசித்தனர். பேட்டிங் செய்பவர்கள் மீதும், பௌலர்கள் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும். நேர்மறையான ஆற்றல் எங்கள் அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. போட்டியில் ஏமாற்றம் ஏற்படுமோ என்று உணரும்போது, அதை வெளிக்காட்டிக்கொள்ளக் கூடாது. நாங்கள் அனைவரும் ஒரு கட்டத்தில் அதுபோல உணர்ந்தோம். அதை நாங்கள் வெளிக்காட்டியிருந்தால், வர்ணனையாளர்களுக்கு நாங்கள் தீனி போட்டது போலாகியிருக்கும். அதனால், அதை மறைத்துக்கொண்டோம்.

அனைவரும் நன்றாக விளையாடினார்கள், குறிப்பாக சாம் பில்லிங்ஸின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சிறப்பாக விளையாடினார்கள். நாங்களும் ரன் கொடுத்தோம். இரு அணியின் பந்து வீச்சாளர்கள்தான் அதிகமாக கஷ்டப்பட்டார்கள். ஆனால், மொத்தத்தில் ரசிகர்களுக்கு இப்போட்டி நல்ல விருந்தாக அமைந்திருக்கும் என்று நம்புகிறேன்’’ என்று கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க