வெளியிடப்பட்ட நேரம்: 10:33 (11/04/2018)

கடைசி தொடர்பு:10:33 (11/04/2018)

ரஸலின் அத்தனை சிக்ஸ்... ஜடேஜாவின் ஒற்றை சிக்ஸ்... சொந்த குகையில் கர்ஜித்த சென்னை! #CSKvsKKR #IPL

இந்தப் போட்டியில் சென்னை செய்த 3 தவறுகளை சொல்ல வேண்டும். ஹர்பஜனுக்கு இரண்டே ஓவர்கள் தரப்பட்டன. வேகப்பந்தை வேகவைத்து சாப்பிட்ட ரஸலை அடக்க பஜ்ஜியை ஒருமுறை முயன்று பார்த்திருக்கலாம்.

ரஸலின் அத்தனை சிக்ஸ்... ஜடேஜாவின் ஒற்றை சிக்ஸ்... சொந்த குகையில் கர்ஜித்த சென்னை! #CSKvsKKR #IPL

2 ஆண்டுகள் கழித்து சென்னையில் முதல் மேட்ச். முதல் போட்டியில் மும்பையை வென்ற சந்தோஷம். நேற்றைய போட்டியும் ரொம்பவே ஸ்பெஷல்.  வழக்கம் போல, கொல்கத்தாவையும் 20வது ஓவரில் விரட்டி விரட்டி வென்றது சென்னை. அந்த வீரதீர கதையை பார்த்துவிடலாம்.

வழக்கம் போல நரேன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அடிக்க ஆரம்பித்ததுதான் கொல்கத்தாவின் நல்ல நேரம். சந்தித்த முதல் 3 பந்துகளில் 2 சிக்ஸர்கள். எதுவும் கேட்ச்சோ என்றெல்லாம் யோசிக்க வைக்கவில்லை. வல்லரசை தைரியமாக வசூலரசு என கேப்டன் டேக்லைன் போட்டு ஹிட் அடித்தது போல க்ளியர் சிக்ஸ். ஆனால், நரேனின் நல்ல நேரத்துக்கு எண்ட் கார்டு போட்டார் தமிழ்ப்புலவர் ஹர்பஜன் சிங். 

அதன் பின் உத்தப்பா உக்கிர தாண்டவமாடினார். 3 சிக்ஸர்களுடன்29 ரன் எடுத்திருந்த நிலையில் ரெய்னாவின் ஒரு அபாரமான டைரக்ட் ஹிட்டில் ரன் அவுட் ஆனார். லின்னும் தன் பங்குக்கு ரன் சேர்த்தார். பர்த்டே பேபி அவர். 

சென்னை சூப்பர் கிங்ஸ்

10 ஓவரில் 89 ரன்கள் எடுத்திருந்தாலும் 5 விக்கெட்டுகளை கொல்கத்தா இழந்திருந்தது. ஆனால், அதன்பின்னர்தான் ஆட்டமே ஆரம்பம் ஆனது. ரஸலும் தினேஷ் கார்த்திக்கும் ஜோடி சேர்ந்தார்கள். எந்த சூழலிலும் கொல்கத்தாவின் ரன்ரேட் பெரிதாக குறையவில்லை. ஒரு ஹை ஸ்கோரிங் மேட்ச்சுக்கு சென்னை ரசிகர்கள் அப்போதே தயாராகிவிட்டார்கள். 

பிராவோ போட்ட 17வது ஓவர் கொல்கத்தாவுக்கு தீபாவளி போனஸ். “நானும் வெஸ்ட் இண்டீஸ்காரந்தாண்டா” என ரஸல் அடித்த சிக்ஸ் மைதானத்தை விட்டு வெளியே போய் விழுந்தது. கிரவுண்டில் மேட்ச் பார்த்துக்கொண்டிருந்த ஷாரூக் அது எங்கே போகிறது என கழுத்தைத் திருப்பி பார்த்தும் பயனில்லை. அது போய்க்கொண்டேயிருந்தது. அடுத்த பந்தில் ரஸல் சிங்கிள் தட்ட, “நானும் சென்னைக்காரந்தாண்டா” என தினேஷ் கார்த்திக் இன்னொரு சிக்ஸ் அடிக்க, கொஞ்சம் அடங்கிப்போனது யெல்லோ ஆர்மி. கொஞ்சம் கீழே விழுந்த ரன் கிராஃபை மீண்டும் நிமிர்த்தி வைத்தார் பிராவோ, இந்த முறை எதிரணிக்காக. 

ரஸல்

வாட்ஸன் வீசிய 18வது ஓவரின் முதல் பந்தையும் 6 அடித்து 50 ரன்களைக் கடந்தார் ரஸல்.  ஆனால், அந்த ஓவரில் தினேஷ் கார்த்திக் எல்.பி.டபிள்யூ ஆக, கொஞ்சம் அதிர்ந்தது சேப்பாக்கம். ஆனால் அப்போதே ஸ்கோர் 165 என்பதால் சென்னை வீரர்கள் அந்த விக்கெட்டை அதிகம் கொண்டாடவில்லை. ரஸலுக்கு என்ன வலைவிரிக்கலாம் என்பதிலே கவனமாக இருந்தார்கள். 

இன்னொருமுறை பிராவோவை நம்பினார் தோனி. ஆனால், பயனில்லை. முதல் மூன்று பந்துகளும் சிக்ஸர். அதில் ஒன்று ஜஸ்ட் மிஸ் ஆகி திரும்ப மைதானத்துக்கே வந்தது. இல்லையேல், இன்னொரு பந்து பிசிசிஐக்கு நஷ்டம் ஆகியிருக்கும். இந்த முறை திரும்பி பார்க்காமலே சிக்ஸர் என்பதை உறுதி செய்துகொண்டார் ஷாரூக்.

கடைசி ஒவர் தாகூர். இந்த ஓவரின் முதல் பந்தும் சிக்ஸ். “எவனாயிருந்தாலும் வெட்டுவேன்” மோடிலே இருந்தார் ரஸல். மூன்றாவது பந்தை எகிறி குதித்து தோனி தடுக்க, “நாங்களாம் ஸ்டேடியம்லதான் இருக்கோம்” என சத்தம் போட்டது சென்னை. அடுத்த பந்து டாட் பால். அடுத்த பந்தும் தோனி வசம் போனது. “அவுட் ஆனாலும் தப்பில்லைடா” என ஓடி வந்த ரஸுலுக்கு லக் அடித்தது. கடைசிப் பந்தை சிக்ஸருக்கு பார்சல் அனுப்பினார். அந்த சிக்ஸரின் உதவியால் 200 ரன்னை கடந்தது கொல்கத்தா.

 

200லாம் அடிக்க முடியாது என்ற சென்னை ஹேட்டர்ஸ் ட்வீட்ஸ்களுக்கு இடையில் களம் இறங்கியது ராயுடு - வாட்ஸன் ஜோடி. சினங்கொண்ட சிங்கம் என்ன செய்யும் தெரியுமா? சிக்ஸரா அடிக்கும் என்பது போல இருந்தது சூப்பர் கிங்ஸ் ஓப்பனிங் ஜோடியின் ஆட்டம். ஐந்து ஓவரில் 62 ரன்களை விளாசினர். சென்னையின் வேகமான 50 ரன்கள் இந்தப் போட்டியில்தான் அடிக்கப்பட்டிருக்கிறது. 6வது ஓவரில் இன்னொரு சிக்ஸ் அடிக்க நினைத்த வாட்ஸன் எல்லையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஆனால், அப்போதே போதுமான டேமேஜை கொல்கத்தாவுக்கு ஏற்படுத்தியிருந்தார் அந்த ஆறடி ஆஸ்திரேலியன். 

வாட்சன்

எக்ஸ்பிரஸ் வேகத்தில் சென்ற ரன் ரேட்டை செயின் இழுத்து நிப்பாட்டினார் சுனில் நரேன். அவர் வீசிய எட்டாவது ஓவரில் நான்கே ரன்கள். மொத்தம் 83. ஸ்பின் எடுக்கிறது என அடுத்து குல்தீப் யாதவிடம் பந்தைக் கொடுத்தார் தினேஷ் கார்த்திக். பரிசு, ராயுடுவின் விக்கெட். எந்த எஃபர்ட்டும் இல்லாமல் அடிக்கப்பட்ட ஷாட் அழகாக கேட்ச் ஆனது. அதில் பவுலருக்கு எந்த கிரெடிட்டும் இல்லை. எல்லாம் ராயுடுவின் ராங் கால்குலேஷன். 

அவுட் ஆனது நல்லதுக்கு என நினைத்தது சென்னை. காரணம், களம் இறங்கியது தோனி. வந்ததும் ஏறி வந்து லாங் ஆனில் ஒரு ஷாட். ஆனால், ஒரு ரந்தான். 10வது ஓவரின் முடிவில் சென்னை 90 ரன் மட்டுமே அடித்திருந்தது. முதல் 5 ஒவரில் 62 ரன். அடுத்த ஐந்தில் 28 ரன். அதற்குள் சுரேஷ் ரெய்னாவுக்கு ஹேம்ஸ்டிரிங் பிரச்னை. அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்தவர் 12வது ஒவரில் இன்னொன்றை அடிக்க முயன்று அவுட். 12 ஓவரில் சென்னை 103க்கு 3. தோனியும் சாம் பில்லிங்க்ஸும் களத்தில்.

தோனி

பல ஓவர் சோதனைக்கு பிறகு 14வது ஓவரில் ஆக்டிவ் மோடுக்கு மாறினார் தோனி. குல்தீப் யாதவின் ஓவரில் ஒரு ஸ்டிரெயிட் பவுண்டரி, அடுத்தபால் மெகா சிக்ஸ். 200 ரன்னை சேஸ் செய்யும் உணர்வே அப்போதுதான் வந்தது. அந்த ஓவரில் 16 ரன்கள். 

அடுத்த ஓவருக்கு ஸ்பின்னர் வேண்டாம் என நினைத்தது கொல்கத்தா.குர்ரான் வீசிய ஓவரில் பில்லிங்க்ஸின் இரண்டு சிக்ஸர் உள்பட அடித்து 17 ரன் அடித்தது சென்னை. 30 பந்துகளில் 58 ரன் என்ற அடிக்கக்கூடிய சமன்பாட்டுக்கு அப்போதுதான் மேட்ச் வந்தது. அடுத்த ஓவர் மறுபடியும் நரேன். ஏழே ரன்கள். கடைசி 24 பந்துகளில் 51 ரன் தேவை. இதுவரை ஐபிஎல்லில் சுனில் நரேனின் 51 பந்துகளை எதிர்கொண்டிருக்கிறார் தோனி. அடித்தது 25 ரன்கள். அதில் ஃபோரோ, சிக்ஸோ கிடையாது.

அடுத்து, சாவ்லா ஓவர். ஹெல்மெட் இல்லாத தோனி. சென்னை ரசிகர்களின் நகங்கள் தேய்பிறை ஆகின. ஒரு ரன், வைடு என சுருதி இறங்க, பிரஷரில் தோனி அடித்த பந்து பேட்டின் விளிம்பில் பட்டு கார்த்திக்கின் கிளவுஸூக்குள் ஒளிந்துகொண்டது. தோனி அவுட். சென்னை சைலண்ட். வந்தவர் ஜடேஜா. வந்த முதல் பாலே எல்பி அப்பீல். அதே பந்தில் ஒரு ரன் அவுட் மிஸ் என ஜடேஜாவுக்கு ஏழரை சனி. 

18வது ஓவரில் இரண்டு சிங்கிளுக்கு பின் விக்கெட் கீப்பரின் தலைக்கு மேல் ஸ்கூப் சிக்ஸ் ஒன்று, பவுலரின் தலைக்கு மேல் சிக்ஸ் ஒன்று என இரண்டு சிக்ஸர்களை அடித்தார் பில்லிங்க்ஸ். ஆனால், இன்னொரு பக்கம் டாட் பாலாக தந்து வாங்கிக் கட்டிக்கொண்டார் ஜடேஜா. 13 பந்துகள். 27 ரன். அப்போதா டாட் பால் வைப்பது?

ஷாரூக்

19வது ஓவரின் முதல் பந்தில் 1 ரன் எடுத்து 50ஐ(21 பந்துகள்) தொட்டார் பில்லிங்க்ஸ். 

11 - 26 : ஜடேஜா ‘டொக்’ வைத்து 1ரன்.

10 - 25: சிக்ஸர்

 9 - 19 : பில்லிங்க்ஸ் அவுட்.

 8 - 19 : ஜடேஜா  சிங்கிள்

 7 - 18 : பிராவோ சிங்கிள்

இத்தனை சிங்கிள்ஸ் அடிக்கிற ஓவரா இது என ரசிகர்கள் புலம்பித் தள்ள, டென்ஷன் எகிறியது. கடைசி ஓவரில் 17 ரன். ஒரே ஆறுதல், ஸ்டிரைக்கர் பிராவோ. இன்னொரு ஆறுதல் பவுலிங் செய்யப் போவது வினய் குமார்

ஆபத்பாந்தவன் பிராவோ முதல் பாலே சிக்ஸ். எங்கு பட்டது, எப்படி  போனதெல்லாம் தேவையில்லை. சிக்ஸ். சேப்பாக்கம் சிதறியது. ஷாருக்கே சிரித்துவிட்டார். அது நோ பால் வேறு. ஃப்ரீ ஹிட்டை ஓங்கி அடித்தாலும் போகவில்லை. கேட்ச். ஆனால், 2 ரன்கள் ஓடிவிட்டார்கள். அடுத்த பந்தில் 2 ரன் முயல, ஜடேஜா “நான் பாத்துக்கிறேன்” என்பது போல பிராவோவைத் தடுக்க, டென்ஷன் ஆனார் பிராவோ. அங்கு வேறு யாராவது இருந்தால் ஜடேஜா மண்டையைப் பிளந்திருப்பார்கள். 4 பந்தில் 7 ரன். சென்னை டீமுக்கு ஜடேஜா என்றால் கொல்கத்தாவுக்கு வினய் குமார். வைடு போட்டார். 4 பந்தில் 6 ரன்கள் தேவை. ஜடேஜா தனக்கு தெரிந்த சிங்கிளைத் தட்ட, மீண்டும் பிராவோ. 3 பந்தில் 5. பால் மாட்டவில்லை. இன்னொரு சிங்கிள்.

தான் செய்த பாவங்களுக்கு பரிகாரம் செய்ய ஜடேஜாவுக்கு கிடைத்தது வாய்ப்பு. அதைச் சரியாக பயன்படுத்தினார். லாங் ஆனில் சிக்ஸ். சென்னை வென்றது. சேப்பாக்கம் சிரித்தது. 

ஜடேஜா

இந்தப் போட்டியில் சென்னை செய்த 3 தவறுகளை சொல்ல வேண்டும். ஹர்பஜனுக்கு இரண்டே ஓவர்கள் தான் தரப்பட்டன. வேகப்பந்தை வேகவைத்து சாப்பிட்ட ரஸலை அடக்க பஜ்ஜியை ஒருமுறை முயன்று பார்த்திருக்கலாம். இரண்டாவது, தோனி செகண்ட் டவுன் வந்தது. அதுகூட பரிசோதனை முயற்சி என சொல்லலாம். ஆனால், 17வது ஓவரில் பிராவோவை இறக்காமல் ஜடேஜாவை இறக்கியது மாபெரும் தவறு. “ஓ இதுதான் பந்தா” என்ற ரீதியிலே ஆடினார் ஜடேஜா. வின்னிங் ஷாட் அடித்தார் என்பதற்காக அதை மன்னிக்க முடியாது.

தினேஷ் கார்த்திக்கும் ஏகப்பட்ட சொதப்பல்கள். சென்ற போட்டியிலே கடைசி ஓவரில் சொதப்பிய வினய்குமாரிடம் கடைசி ஓவரைத் தந்தார். ரிவ்யூக்கள் கேட்பதில் தொடங்கி எல்லாவற்றிலும் பதற்றமாகவே இருந்தார். 200க்கு மேல் ரன், நல்ல ஸ்பின்னர்கள் கிடைத்தும் வாய்ப்பை நழுவவிட்டார் என்றே சொல்லலாம்.

போட்டியின் முடிவில் தோனியின் மனைவியிடம் சிரித்தப்படி ஏதோ சொன்னார் ஷாரூக். அது “உங்க ஏரியா… நாங்க என்ன செய்றது” என்பதாகத்தான் இருக்கும்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்