வரலாற்றுச் சாதனை படைத்த கிடாம்பி ஸ்ரீகாந்த்

25 வயதான இந்திய பேட்மின்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் சர்வதேச தரவரிசை பட்டியலில் டென்மார்கை சேர்ந்த விக்டர் ஆசெல்சனை வீழ்த்தி முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார். 

ஸ்ரீகாந்த்

கடந்த 2017 ம் ஆண்டில் நடைபெற்ற பிரான்ஸ், இந்தோனேஸியா, ஆஸ்திரேலியா, டென்மார்க் ஓபன் தொடர்களில் ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இதன்மூலம் சர்வதேச தரவரிசைப் பட்டியலில் ஸ்ரீகாந்த் இரண்டாம் இடம் பிடித்தார். அதேநேரம் முதலிடத்தில் இருந்த விக்டர், மலேசிய ஓபன் தொடரில் கடந்த ஆண்டு வென்ற சாம்பியன் பட்டத்தைத் தக்கவைக்கத் தவறினார். கடந்தாண்டு ஏப்ரல் 4 ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெற்ற மலேசிய ஓபன் தொடர், காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருவதால் நடப்பாண்டில் ஜூன் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், கணுக்கால் காயத்தால் அவதிப்பட்டு வந்த விக்டர், இந்தோனேசியா மாஸ்டர்ஸ் தொடரிலிருந்து பாதியில் விலகினார். 

இதனால், இந்திய ஓபன் மற்றும் ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் ஆகிய தொடர்களில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. இதனால், 1,660 தரவரிசைப் புள்ளிகளை அவர் இழக்க நேர்ந்தது. இந்தச் சூழலில் கடந்தாண்டு 4 சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்ற ஸ்ரீகாந்த், 76,895 புள்ளிகளுடன் தரவரிசை பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். அதேநேரம், 75,470 புள்ளிகள் பெற்றுள்ள விக்டர், இரண்டாவது இடத்துக்குப் பின்தங்கினார். 

இதற்கு முன்னதாக கடந்த 2015 ம் ஆண்டு சர்வதேச வரிசையில் இந்தியாவின் சாய்னா நேவால் முதல் இடம் பிடித்திருந்தார். இந்த வரிசையில் தற்போது ஸ்ரீகாந்தும் இணைந்துள்ளார். இவர்களுக்கு முன்னதாக, கணினி தரவரிசை முறை இல்லாத காலத்திலேயே, பிரகாஷ் படுகோன் பேட்மின்டன் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!