வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (12/04/2018)

கடைசி தொடர்பு:20:00 (12/04/2018)

காமன்வெல்த் துப்பாக்கிச் சுடும் போட்டியில் வெள்ளி வென்ற தேஜஸ்வினி! யார் இவர்? #TejaswiniSawant

2010-ம் ஆண்டு, ஜெர்மனியில் நடந்த உலகத் துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் வென்ற முதல் இந்தியப் பெண் வீராங்கனை, தேஜஸ்வினி.

காமன்வெல்த் துப்பாக்கிச் சுடும் போட்டியில் வெள்ளி வென்ற தேஜஸ்வினி! யார் இவர்? #TejaswiniSawant

ஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியில், இந்தியா தொடர்ந்து பதக்கங்களைக் குவித்துவருகிறது. குறிப்பாக, இந்திய வீராங்கனைகளின் சாதனைகள் தொடர்கிறது. நேற்று (புதன்கிழமை), இந்தியாவுக்காக 25-வது பதக்கத்தை வென்றுள்ளார், மகாராஷ்டிராவைச் சேர்ந்த தேஜஸ்வினி சாவந்த். கோல்ட் கொஸ்ட்டில் உள்ள மெல்மொன்ட் ஷுட்டிங் சென்டரில் நடந்த 50 மீட்டர், ரைஃபிள் பிரவுன் வுமன் (50  m Rifle Prone Women) பிரிவில், வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் தேஜஸ்வினி. இந்தப் போட்டியில், சிங்கப்பூரைச் சேர்ந்த மார்டினா லிண்ட்சே வெலோசோ ( Martina Lindsay Veloso) தங்கப் பதக்கமும், ஸ்காட்லாந்தைச் சேர்ந்த சியோனாய்டு  மெனிடோஷ் ( Seonaid Mcintosh), வெண்கலமும் வென்றுள்ளனர்.

தேஜஸ்வினி

PC: india.com

 

2010-ம் ஆண்டு, ஜெர்மனியில் நடந்த உலகத் துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் வென்ற முதல் இந்தியப் பெண் வீராங்கனை, தேஜஸ்வினி. காமன் வெல்த் போட்டியில் வெள்ளி வென்றதும், ``பதக்கம் வென்றதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். போட்டியின்போது பலமாக காற்று வீசிக்கொண்டிருந்தது. அது கொஞ்சம் கடினமாக இருந்ததே தவிர, மிகவும் கடுமையான போட்டியாக உணரவில்லை. 2020-ம் ஆண்டு நடக்கப்போகும் ஒலிம்பிக் போட்டியை எதிர்பார்த்துள்ளேன். அதற்கு முன்பு, ஆகஸ்ட் மாதம், ஜகர்தாவில் நடைபெறும் ஆசியப் போட்டியில் கலந்துகொள்வேன். பிறகு, தென் கொரியாவில் நடக்கும் உலகச் சாம்பியன்ஷிப் போட்டியிலும் கலந்துகொள்கிறேன்” என்று உற்சாகமாகத் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவின் கொல்ஹாபூர் ( Kohlapur) மாவட்டத்தில் பிறந்தவர், தேஜஸ்வினி. அப்பா ரவிந்திரா சாவந்த், கடற்படை அதிகாரி. அம்மா சுனிதா, ஹோம்மேக்கர். துப்பாக்கிச் சுடும் பயிற்சியை கொல்ஹபூரில் இருக்கும், ஜெய்சிங் குசலே என்பவரிடம் முதன்முதலாகக் கற்றுக்கொண்டார். அதில் மேலும் ஈடுபாடு ஏற்பட்டபோது, தேஜஸ்வினி வயது 13. அன்று தொடங்கிய பயணம், பல தடைகளைத் தாண்டி, உலகச் சாதனை படைத்துள்ளது. 

தேஜஸ்வினி

PC: shethepeople.tv

துப்பாக்கிச் சுடுதல் மிகவும் காஸ்ட்லியான விளையாட்டு. தேஜஸ்வினியோ நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனாலும், தேஜஸ்வினியை ஊக்குவிக்கும் வகையில், தேவையானவற்றுக்காக வங்கியில் கடன், தெரிந்தவர்களிடம் பணம் உதவி எனக் கேட்டு, 2001-ம் ஆண்டில், தேஜஸ்வினிக்குச் சொந்தமாக ஒரு ரைஃபிள் வாங்கித்தந்தார் அவரின் அப்பா. பலரும் இதுபற்றி விமர்சனம் செய்தபோதெல்லாம், தேஜஸ்வினிக்குப் பெரும் பலமாக இருந்தது அவரின் குடும்பமே. ஆனால், 2010-ம் ஆண்டில் எதிர்பாராதவிதமாகத் தந்தையை இழந்தார். இந்தத் துயரமான தருணத்திலும், அதே ஆண்டில், துப்பாக்கிச் சுடும் போட்டியில் உலகச் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றார் தேஜூ. ``என் அப்பாவின் கனவை நிறைவேற்றிவிட்டேன். இந்தப் பதக்கத்தை அவருக்கு அர்ப்பணிக்கிறேன்” என்பதுதான் போட்டிக்குப் பிறகு அவர் கூறிய முதல் வார்த்தை.

தேஜூவின் வெற்றியைக் கொண்டாடிய அவரின் அம்மா சுனிதா, ``அவள் அப்பா இருந்திருக்கலாம். எத்தனையோ எதிர்ப்புகள் வந்தபோதும், தேஜூ மேல் அவருக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. பணமோ குடும்பச் சூழ்நிலையோ, ஒருவரின் வெற்றியைத் தீர்மானிப்பதில்லை. திறமை, கடின உழைப்பு, மன உறுதி ஆகியவையே ஒருவரின் வெற்றியைத் தீர்மானிக்கின்றன. நாங்கள் இதைத்தான் அவளுக்குக் கற்றுக்கொடுத்தோம். இப்போது அவள் நிரூபித்துக்காட்டிவிட்டாள்” என்று நெகிழ்ந்து கூறினார்.

தேஜஸ்வினி மிகவும் திறமையானவர் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், அவரிடம் அளவுக்கு அதிகமான துருதுருப்பு இருக்கும். அதனை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ``நான் கொஞ்சம் ஹைப்பர் ஆக்டிவ், என்னால் ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்க முடியாது. ஆனால், இந்தப் போட்டிக்கு மிகவும் நிதானம் தேவை. அதனால், ஹிந்தி இசையமைப்பாளர் கிஷோர் குமார், ஜக்ஜீத் சிங் ஆகியோரின் மென்மையான இசையைக் கேட்டு நிதானமாவேன். போட்டி நடைபெறுவதற்கு முன்பு, நான் தயாராகும் உத்திகளில் இதுவும் ஒன்று” என்கிறார் 37 வயதாகும் இந்தத் துப்பாக்கிச் சுடும் மங்கை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்