Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மூன்று கோல்டன் டக், நான்கு கோல்டன் சிக்ஸ்! - முதல் வெற்றியை பதிவு செய்த பெங்களூரு! #RCBvKXIP

ஐ.பி.எல்லின் கலர்ஃபுல் அணியான பெங்களூரு தன் ஹோம்கிரவுண்டில் முதல் போட்டியில் ஆடுகிறது. ஐ.பி.எல்லைப் பொறுத்தவரை சென்னை, மும்பை, பெங்களூரு அணிகளுக்குத்தான் ரசிகர்கள் அதிகம். எனவே இந்த மூன்று அணிகளும் ஹோம் கிரவுண்டில் ஆடும்போது எப்பாடுபட்டாவது வெற்றி பெறவே விரும்பும். முதல் போட்டியில் தோற்றிருந்ததால் நேற்று பிரஷரும் கேப்டன் கோலியின் மீது! டாஸை வென்று பீல்டிங் தேர்ந்தெடுத்தார் கோலி. இதுவரை ஆடிய எல்லாப் போட்டிகளிலும் டாஸ் வென்ற கேப்டன்கள் பீல்டிங்கையே தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

கே.எல் ராகுலும் மயாங்க் அகர்வாலும் களமிறங்கினார்கள். வோக்ஸின் முதல் ஓவரிலேயே இரண்டு சிக்ஸ்கள் பறக்கவிட்டார் ராகுல். அடுத்த ஓவர் உமேஷ் யாதவுடையது. அதில் தன் பங்குக்கு இரு பவுண்டரிகளை தட்டிவிட்டார் மயாங்க். இந்த ஆட்டம் அஸ்வின், கோலியைவிட இரண்டு பேருக்கு மிக முக்கியமானது. ஒருவர் பஞ்சாப் அணியின் கே.எல்.ராகுல். இன்னொருவர் பெங்களூருவின் உமேஷ் யாதவ். இருவரையும் டெஸ்ட் பிளேயர்கள் என முத்திரை குத்தி மாதங்கள் பல ஆகின்றன. 'நாங்க டி20லயும் பொளந்து கட்டுவோம்' என இருவரும் நிரூபிக்க ஐ.பி.எல்லைவிட சிறந்த ப்ளாட்பார்ம் கிடைக்காது. செய்தார்களா?

பெங்களூரு

முதலில் தெறிக்கவிட்டது உமேஷ்தான். ஆட்டத்தின் நான்காவது ஓவரில் அவர் போட்ட பந்தை இழுத்து அடிக்க முற்பட்டு கீப்பர் டிகாக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் மயாங்க். அதன்பின் களமிறங்கியது ஆரோன் பின்ச். இந்த ஐ.பி.எல்லில் அவர் சந்திக்கும் முதல் பால் இதுதான். விர்ரென காலுக்கு வந்த பந்தை தடுக்க முற்பட்டு எல்.பி.டபிள்யூ ஆனார். ஆட்டத்தின் முதல் கோல்டன் டக் இது. அடுத்த பந்து ஹாட்ரிக் டெலிவரி! எதிர்கொள்வது ஃபார்ம் அவுட் ஆகி திணறும் யுவராஜ். ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வந்த பந்தை கவனமாக தடுத்தார் யுவராஜ். அதற்கடுத்த பந்தும் 'டொக்'! ஐந்தாவது பந்தை புல் ஷாட் ஆடி பவுண்டரிக்கு விரட்டினார். ஓவரின் கடைசி பால்! விருட்டென கால் நோக்கி வரும் பந்தை எதிர்பார்க்காத யுவராஜ் திணற பேடில் பட்டு ஸ்டம்ப்பை பிடுங்கிச் சென்றது பால்! Umesh You Beauty! ஒரே ஓவரில் மூன்று முக்கிய விக்கெட்கள். ஆட்டம் பெங்களூரு வசமானது.

பெங்களூரு

தள்ளாடிய பஞ்சாப்பை தன் நேர்த்தியான ஆட்டம் வழியே நங்கூரம் போட்டு நிறுத்தினார் கே.எல் ராகுல். அவருக்குத் துணையாக கருண் நாயரும் தோள் கொடுக்க, இந்த ஜோடி மட்டும் 58 ரன்கள் சேர்த்தது. போன மேட்ச்சில் சொதப்பிய வாஷிங்டன் சுந்தர் இந்த ஆட்டத்தில் மிரட்டியெடுத்தார். தன் முதல் ஓவரில் ஐந்து ரன்கள் மட்டுமே கொடுத்த சுந்தர் அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே ராகுலை பெவிலியனுக்கு அனுப்பினார். அதன்பின் கருண் நாயர், ஸ்டோய்னிஸ், அக்‌சர் படேல் எல்லாரும் வரிசையாக வெளியேற ஸ்கோரை உயர்த்த வேண்டிய பொறுப்பு கேப்டன் அஸ்வினுக்கு. விறுவிறுவென தன் பங்குக்கு 33 ரன்கள் சேர்த்தார். கடைசியில் 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 155 ரன்கள் எடுத்தது பஞ்சாப்.

டாஸ் வென்றது முதல் வெற்றியென்றால் கடந்த ஆட்டத்தில் ரன்களை வாரி வழங்கிய அதே ஐந்து பவுலர்களை வைத்து பஞ்சாப்பை சுருட்டியது இரண்டாவது வெற்றி. இப்போது பொறுப்பு பேட்ஸ்மேன்க.... சொல்லி முடிப்பதற்குள்ளாகவே ஓபனிங் பேட்ஸ்மேன் மெக்கல்லம் அவுட்! அதுவும் சந்தித்த முதல் பந்தில்! கோல்டன் டக்! பொதுவாகவே ஸ்பின்னர்களிடம் திணறும் மெக்கல்லம் அக்சரின் பந்தை தூக்கி முஜிப் ரகுமானிடம் கொடுத்துவிட்டு வெளியேறினார். 'யார் போனா என்ன நான் இருப்பேனடி' என அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டி என்ட்ரியானார் கோலி. 

பெங்களூரு

டார்கெட் கம்மியென்பதால் குயின் டிகாக்கும் கோலியும் தட்டி தட்டி ஆடினார்கள். அதற்கும் சூனியம் வைத்தார் முஜிப் ரகுமான். ஒரு சூப்பரான ஆஃப் ஸ்பின் ஸ்லோ டெலிவரியை வீச, அதை முன்னால் வந்து கவர் ட்ரைவ் ஆட முற்பட்டார் கோலி. அவருக்கு போக்கு காட்டிய பந்து சட்டென டர்ன் ஆகி ஸ்டம்ப்பை பதம் பார்த்தது. மேட்ச் பார்க்காதவர்கள் இந்த ஒரு டெலிவரிக்காகவாவது ஹைலைட்ஸ் பார்த்துவிடுங்கள். That was one of the kind! 

இரண்டு தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் இப்போது க்ரீஸில்! ஓரளவிற்கு செட்டிலாகியிருந்த டிகாக் முஜிப்பை சமாளித்து ஆடினாலும் டிவில்லியர்ஸ் ரொம்பவே திணறினார். இதற்கெல்லாம் சேர்த்து வைத்து மோகித் சர்மாவின் அடுத்த ஓவரை வெளுத்தார்கள். 16 ரன்கள். அதில் டிவில்லியர்ஸ் ஸ்கொயர் லெக்கில் அடித்த சிக்ஸும் அடக்கம். நன்றாக செட்டிலாகியிருந்த டிகாக்கை தன் ட்ரேட்மார்க் பந்தில் அவுட்டாக்கினார் அஸ்வின். அடுத்த பந்து இளம் சென்சேஷன் சர்ஃபராஸ் கானுக்கு! 'எனக்கு பத்து மணி சீரியல் பார்க்கணுங்க' என்ற ரீதியில் முதல் பந்தையே ஸ்லிப்பில் கொடுத்துவிட்டு அவரும் வெளியேறினார். ஆட்டத்தின் மூன்றாவது கோல்டன் டக்! 

பெங்களூரு

இப்போது முழுப் பொறுப்பும் டிவில்லியர்ஸ் கையில். தானும் அவுட்டாகிவிட்டால் டெயில் எண்டர்கள் மேல் எக்கச்சக்க பிரஷர் விழும் என்பதை உணர்ந்து நிதானமாக ஆடினார். அஸ்வினின் அந்த ஓவருக்கு பின் வந்த நான்கு ஓவர்களில் ஒரே ஒரு பவுண்டரிதான். அப்படியொரு நிதானமான ஆட்டம். 17வது ஓவர். முஜிப் ரகுமான் சுழல். ஸ்ட்ராடிஜிக் டைம் அவுட்டில் பேசி வைத்திருப்பார்கள் போல. மாறி மாறி அடித்தார்கள் டிவில்லியர்ஸும் மந்தீப்பும். லாங் ஆஃப்பில் ஒன்று, மிட் விக்கெட்டில் ஒன்று என இரண்டு சிக்ஸ் அடுத்தடுத்து! உபயம் - டிவில்லியர்ஸ். 

அதற்கடுத்த ஓவரில் மோகித்தின் அநியாய ஸ்லோ பாலை ஒரு சாத்து சாத்தினார். அது ஈபிள் டவர் உயரத்திற்கு பறந்து ஹாஸ்பிட்டாலிடி பாக்ஸைத் தொட்டது. நான்கு கோல்டன் சிக்ஸ்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஸ்டைலில்! வாவ்! ஐம்பதைக் கடந்தார் டிவில்லியர்ஸ். அதற்கடுத்த ஓவரிலேயே அவுட்டாகினாலும் போதுமான டேமேஜை ஏற்கனவே செய்திருந்ததால் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பெங்களூரு! நிறைய நாட்கள் கழித்து கோலியின் முகத்தில் சிரிப்பு. பெங்களூரு ரசிகர்களின் முகத்திலும்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்
Advertisement

MUST READ

Advertisement