`ஜேசன் ராய் அதிரடி!' - மும்பை அணிக்கு ஹாட்ரிக் தோல்வி MIvsDD

ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி டேர்டெவில்ஸ் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது. 

ஜேசன் ராய்

Photo: Twitter/DelhiDaredevils

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்தது. 8.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 100 ரன்களைக் கடந்த மும்பை அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால், 200 ரன்களைக் கடக்க முடியாமல் இன்னிங்ஸை முடித்தது. அந்த அணி தரப்பில் சூர்யகுமார் யாதவ் 53 ரன்களும், எவின் லீவிஸ் 48 ரன்களும், இஷான் கிஷான் 44 ரன்களும் எடுத்தனர். டெல்லி அணி தரப்பில் ராகுல் டீவாட்டியா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு கௌதம் காம்பீர் - ஜேசன் ராய் ஜோடி நல்ல தொடக்கம் கொடுத்தது. 5.1 ஓவர்களில் 50 ரன்களை டெல்லி அணி எடுத்திருந்த நிலையில், காம்பீர் 15 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ரிஷாப் பாண்ட், ஜேசன் ராயுடன் இணைந்து அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். 2-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 69 ரன்கள் சேர்த்த நிலையில், 47 ரன்களுடன் பாண்ட் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் 13 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேசன் ராய் 27 பந்துகளில் அரைசதம் அடித்தார். 4-வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி சேர்ந்த அவர், கடைசி ஓவரில் அணியை வெற்றிபெற வைத்தார். ஜேசன் ராய் 91 ரன்களுடனும், ஸ்ரேயாஸ் ஐயர் 27 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை அணி தரப்பில் குர்ணால் பாண்ட்யா 2 விக்கெட்டுகளும், முஸ்தாபிசுர் ரஹ்மான் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு, இது முதல் வெற்றியாகும். அதேநேரம், மும்பை அணி, தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!