Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கடைசி ஓவரில் 3 டாட் பால்… டெல்லிக்கு முதல் வெற்றி… மும்பை ஹாட்ரிக் தோல்வி! #MIvDD

இந்த ஐ.பி.எல் சீசனில் நடப்பு சாம்பியன் மும்பை மூன்றாவது முறையாக கடைசி ஓவரில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது. பவர்பிளேவில் வெளுத்துக் கட்டியும் பயனில்லை. அதிவேகமாக 50 ரன்கள் அடித்தும் பிரயோஜனமில்லை. பேட்டிங் ஆர்டர் மாற்றியும் புண்ணியமில்லை. டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பெளலர்கள் இருந்தும் மிரட்ட முடியிவில்லை. கடைசி ஓவரில் மூன்று டாட் பால் வீசியும் வழி பிறக்கவில்லை. மும்பை அணியால் த்ரில்லான மேட்ச்சைத்தான் கொடுக்க முடிந்தது. வெற்றியை வசப்படுத்த முடியவில்லை. ஷார்ட் தேர்ட்மேனில் முஸ்டஃபிசுர் இரண்டு கேட்சகளை கோட்டைவிட்டது காரணமா? ஜேசன் ராயின் அதிரடியா? எது மும்பையின் வெற்றியைப் பறித்தது. `எங்களால் மீண்டு வர முடியும்’ எனச் சொல்லும் ரோகித், ஸ்கிரிப்டை ரீரைட் செய்ய வேண்டிய நேரமிது! #MIvDD 

#MIvDD

டாஸ் வென்றதும் சேஸிங்கைத் தேர்வுசெய்வதுதான் இந்த ஐ.பி.எல்-ன் டிரெண்ட். டெல்லி டேர்டெவில்ஸ் கேப்டன் கெளதம் கம்பீரும் அதற்கு விதிவிலக்கல்ல. வான்கடேயில் நடந்த மும்பைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி, ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்தது. டெல்லி அணி சார்பில் காலின் முன்றோவுக்குப் பதிலாக ஜேசன்ராய், கிறிஸ் மோரிஸுக்குப் பதிலாக டேனியல் கிறிஸ்டியன் இடம்பிடித்தனர். மும்பை அணியின் ஹர்டிக் பாண்டியா அணிக்குத் திரும்பினார். பென் கட்டிங்குக்குப் பதிலாக அகிலா தனஞ்செயா வாய்ப்பு பெற்றார்.

சென்னை, ஹைதராபாத் அணிகளுக்கு எதிராக கடைசி ஓவரில், கடைசி பந்தில் வெற்றிவாய்ப்பைத் தவறவிட்ட நடப்பு சாம்பியனுக்கு இது முக்கியமான போட்டி. இதை ரோகித் நன்கு உணர்ந்திருந்தார். அதனால்தான், தனக்குப்  பதிலாக லீவிஸ் உடன் சூர்யகுமாரை  ஓபனிங் இறக்கிவிட்டார். அவரும் டிரென்ட் போல்ட் வீசிய முதல் ஓவரில் நேர்த்தியான ஆஃப் டிரைவ்கள் மூலம் பவுண்டரி,  போல்ட் வீசிய அடுத்த ஓவரில் அப்பர் கட் மூலம் பவுண்டரி என வெரைட்டி காட்டினார்.  

மறுபுறம் போல்ட்டின் வேகத்திலும் நதீமின் சுழலிலும் லீவிஸ் அசராது சிக்ஸர் அடிக்க, 3.4 ஓவரில் மும்பை 50 ரன்களை எட்டியது. ஐபிஎல் வரலாற்றில் மும்பையின் அதிவேக அரைசதம் இது. மும்பை 18 பந்துகளிலேயே 40 ரன்கள் எடுத்து விட்டதால், பிரதான பௌலர் முகமது ஷமியிடம் பந்தைக் கொடுத்தார்   கம்பீர். ஆனால், ஷமியின் முதல் பந்தையே ரசிகர்கள் பக்கம் அனுப்பி வைத்தார் சூர்யகுமார்.  அடுத்த பந்து யார்க்கர்.  பதற்றமடையாமல் அதை ஸ்லிப் ஏரியாவில் தட்டிவிட, அதுவும் பவுண்டரி. கடைசி பந்து ஃபுல்டாஸ். அதுவும் பவுண்டரி.

 இரண்டு ஃபீல்டர்கள் மட்டுமே அவுட் சைட் தி சர்க்கிளில் இருக்கும் பவர் பிளேவின் கடைசி ஓவர். கிறிஸ்டியன் வீசிய அந்த ஆறாவது ஓவரில் லீவிஸ் தனி ஆளாக பந்துகளை சிதறடித்தார். 3 பவுண்டரிகள், கடைசி பந்தில் சிக்ஸர்.   மொத்தம் அந்த ஓவரில் மட்டும் 18 ரன்கள். பவர்பிளே முடிவில் மும்பையின் ஸ்கோர் விக்கெட் இழப்பின்றி 84. நோ லாஸ் இதுதான் முக்கியமான விஷயம். முந்தைய இரு போட்டிகளிலும் மும்பை இப்படி ஆடவில்லை. சென்னைக்கு எதிரான போட்டியில் பவர்பிளே முடிவில் 39 ரன்களை எடுத்திருந்தபோது 2 விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. ஹைதராபாத் அணிக்கு எதிராக பவர்பிளேயில் மும்பை அடித்த ஸ்கோர் 54/3.

#MIvDD

 

தொடர்ந்து லீவிஸ் தாண்டவமாட 8.3 ஓவர்களில் மும்பை 100 ரன்களைத் தொட்டது. 20 ஓவர் முடிவில் ஸ்கோர் எப்படியும் 200-ஐத் தாண்டும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், தெவேத்தியா பந்தில் ஜேசன் ராய் வசம் கேட்ச் கொடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை  தவறவிட்டார் லீவிஸ் (48 ரன்). முதல் விக்கெட்டுக்கு 102 ரன்கள் பார்ட்னர்ஷிப். லீவிஸ் போல சூர்யகுமார் அவசரப்படவில்லை. அரைசதம் அடித்தார்.

பேக் டு பேக் சிக்ஸர், பேடில் ஸ்வீப் பவுண்டரி என இஷன் கிஷன் அட்டகாசமான இன்னிங்ஸ் ஆடினார். 23 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர் அடித்த அவர் 44 ரன்களில் பெவிலியன் திரும்ப, மும்பையின் ரன்ரேட் சரியத் தொடங்கியது. பிடிக்காத ஃபங்ஷனுக்குச் சென்று பேருக்கு தலையைக் காட்டிவிட்டு வருவதுபோல சென்றார் பொல்லார்டு. ஆம், டக் அவுட். அதுவும் அவுட்டான விதம் கொடூரம். விலகி வந்து அடிக்கிறேன் என ஆஃப் ஸ்டம்ப்பை பறிகொடுத்தார். அதற்கு முந்தைய பந்தில் ஃபுல் டாஸ் மூலம் இஷன் கிஷனை போல்டாக்கி இருந்தார் கிறிஸ்டியன். அடுத்தடுத்து இரு ஹிட்டர்கள் அவுட். லெஃப்ட் ரைட் காம்பினேஷனுக்காக ஹர்டிக் பாண்டியாவுக்கு முன் களம் கண்டார் க்ருனல் பாண்டியா.

கேப்டன் ரோகித் இன்றும் ஜொலிக்கவில்லை. போல்ட் வீசிய ஸ்லோயர் டெலிவரியில் ஜேசன் ராயிடம் கேட்ச் கொடுத்து ரோகித் வெளியேறியபோது, வான்கடே மைதானத்தில் நிசப்தம். பொல்லார்டு போலவே க்ருனல் பாண்டியாவும் மோசமான ஷாட் செலக்ஷனில் விக்கெட்டை இழந்தார். ஹர்டிக் பாண்டியா 2 ரன்னில் திருப்தியடைந்தார். பவர்பிளேவில் 84 ரன்கள் எடுத்த மும்பை, 21 ரன்களை எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்ததால், 20 ஓவர்கள் முடிவில்  194 ரன்களுடன் இன்னிங்ஸை முடித்தது. 

இமாலய சேஸிங்கின்போது பவர் பிளேவில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் வெளுத்து வாங்க வேண்டிய பேட்ஸ்மேன் களத்தில் இருக்க வேண்டியது அவசியம். இங்கிலாந்தின் ஜேசன் ராய் அந்தப் பணியை செவ்வனே செய்தார். ஹர்டிக் பாண்டியாவின் இரண்டாவது ஓவரில் ஜேசன் அடுத்தடுத்து அடித்த இரண்டு சிக்ஸர்கள் போதும் அவர் ஹிட்டர் என்பதைச் சொல்ல. அதிலும் இரண்டாவது சிக்ஸர் செம. பேக் ஆஃப் லென்த்தில் வந்ததை புல் ஷாட் மூலம் ஸ்கொயர் லெக் பக்கம் திருப்பிவிட்டபோது, Even better, Even bigger என்றார் வர்ணனையில் இருந்த முரளி கார்த்திக். பாண்டியாவை ஒரு பெளலராகவே மதிக்காமல் ஜேசன் ராய் வெளுத்து வாங்க, அந்த ஓவரில் மட்டும் மும்பைக்கு 21 ரன்கள் கிடைத்தது.

ஆனால், டெல்லி கேப்டன் கெளதம் கம்பீர் மறுமுனையில் தடவிக்கொண்டிருந்தார். இந்தத் திணறலை சரியாக கணித்த பும்ரா, கம்பீரை ஒருவழி செய்தார். அந்த ஓவரில் டெல்லி அடித்தது 2 ரன்கள். பவர்பிளேவில் இந்த ரன்கள் அழகல்ல. பவர்பிளே முடிவில் டெல்லியின் ஸ்கோர் 53/1.

ஹைதராபாத்துக்கு எதிராக வித்தை காட்டிய மார்க்கண்டே மற்றும் தனஞ்செயாவின் பந்தை போட்டிபோட்டு வெளுத்தனர் ஜேசன் ராய், ரிஷப் பன்ட். அரைசதம் அடித்தபின், பும்ராவின் ஃபுல் லென்த் பந்தை எக்ஸ்டரா கவரில் தூக்கி அடித்து மிரட்டினார் ஜேசன். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பன்ட், க்ருனல் பாண்டியாவின் ஸ்லோ டெலிவரியில் லாங் ஆஃபில் இருந்த பொல்லார்டுவிடம் கேட்ச் கொடுத்தார். 47 ரன்களில் ரிஷப் பன்ட் அவுட்.

#MIvDD

மேக்ஸ்வெல் இறங்கியபோது 48 பந்துகளில் 76 ரன்கள் தேவை என்ற நிலை. முதல் பந்தில் இருந்தே அடித்து ஆட வேண்டும். அதற்கேற்ப, மார்க்கண்டே பந்தில் சிக்ஸர், பவுண்டரி என டாப் கியரில் பயணிக்க ஆரம்பித்தார் மேக்ஸ்வெல். அந்த வேகத்துக்கு தடைபோட்டார் க்ருனல். இல்லை, இந்த இடத்தில் க்ருனலைப் பாராட்டுவதற்குப் பதிலாக, ஹர்டிக் பாண்டியாவை பாராட்டுவதே உத்தமம். ஆம், கேட்ச் அப்படி! மேக்ஸ்வெல் தூக்கியடித்த பந்தை லாங் ஆஃபில் இருந்து டீப் எக்ஸ்ட்ரா கவர் நோக்கி ஓடிவந்து ஃபுல் லென்த் டைவ் அடித்துப் பிடித்தார் ஹர்டிக். மேக்ஸ்வெல் 13 ரன்களில் அவுட்.

30 பந்துகளில் 47 ரன்கள் தேவை. களத்தில் ஜேசன் ராய் இருக்கிறார். களமிறங்குவது ஷ்ரேயாஸ் ஐயர். இருவரும் அடங்காத காளைகள். தனஞ்செயா பந்தில் டீப் மிட்விக்கெட் பக்கம் ஷ்ரேயாஸ் ஒரு மேஸிவ் சிக்ஸர் அடிக்க, க்ருனல் பந்தில் இறங்கிவந்து ஜேசன் அடித்த சிக்ஸர், சைட் ஸ்கிரினில் விழுந்தது. பும்ராவின் ஓவரில் ஷார்ட் தேர்ட் மேன் ஏரியாவில் இருந்த முஸ்டஃபிசுர் இரண்டு கேட்ச்களை மிஸ் செய்தார். இரண்டுமே ஷ்ரேயாஸ் ஐயர் அடித்தது. அப்போதே மும்பை தோற்றுவிட்டது.

18 பந்தில் 24 ரன்கள் தேவை என்றபோது, மும்பை அபாரமாகவே பந்துவீசியது. முஸ்டஃபிசுர் 18-வது ஓவரில் 8 ரன்கள் கொடுக்க, 19-வது ஓவரில் பும்ரா கொடுத்தது 5 ரன்கள் மட்டுமே. கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவை. மீண்டும் மும்பை விளையாடும் மேட்ச்சில் த்ரில்லிங். முஸ்டஃபிசுர் பெளலர். முதல் பந்தில் பவுண்டரி, அடுத்த பந்தில் சிக்ஸர் விரட்டினார் ஜேசன். ஈஸி வின் போல தெரிந்தது. ஆனால், அடுத்த மூன்று பந்துகளில் ரன்னில்லை. அதிலும் ஐந்தாவது பந்து ஜேசன் ராய் பேட்டில் பட்டது போல இருந்ததால், மும்பை ரிவ்யூ கோரியது. முடிவில் நாட் அவுட். இன்னும் ஒரே பால். அதுவும் டாட் பாலாகி விட்டால் மேட்ச் டை. சூப்பர் ஓவருக்குப் போகும். ஆனால், 90 ரன்கள் எடுக்கத் தெரிந்த ஜேசன் ராய்க்கு ஒரு ரன் எடுக்கத் தெரியாதா? கடைசி பந்தில் கவர் திசையில் தூக்கி அடித்து ஒரு ரன் எடுத்தார். டெல்லி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

டெல்லிக்கு இது முதல் வெற்றி. மும்பைக்கு ஹாட்ரிக் தோல்வி. இவை எல்லாவற்றையும் விட, மீண்டும் ஒருமுறை சேஸிங்கைத் தேர்வு செய்த அணி வெற்றிபெற்றுள்ளது என்பதே இந்த ஐ.பி.எல்-ன் சுவாரஸ்யம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement