வெளியிடப்பட்ட நேரம்: 07:15 (16/04/2018)

கடைசி தொடர்பு:10:44 (16/04/2018)

காமன்வெல்த்: மல்யுத்தத்தில் அனைவரும் பதக்கம் வென்று சாதனை! #CWG2018

ஆஸ்திரேலியாவின் கோல் கோஸ்ட் நகரில் கடந்த 4-ம் தேதி தொடங்கிய 21வது காமன்வெல்த் போட்டிகள் நேற்று இரவு வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது. இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் நிறைவு விழாவில் தேசியக் கொடி ஏந்திச் சென்றார். இந்திய வீரர்கள் வீராங்கனைகள் அனைத்துப் பிரிவுகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பதக்கங்களை பெற்றுத்தந்தனர். 

மல்யுத்தம்

அதிலும் குறிப்பாக, மல்யுத்தத்தில் பங்கேற்ற இந்திய வீரர்கள் அனைவரும் தலா ஒரு பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளனர். இந்த முறை பல்வேறு எடைப் பிரிவில் 12 இந்திய வீரர், வீராங்கனைகள் மல்யுத்தப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்டனர். இவர்களில் 6 பேர் ஆண்கள், 6 பேர் பெண்கள். பொதுவாகவே மல்யுத்தப் பிரிவில் இந்திய வீரர், வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்துவார்கள். இந்த முறையும் சிறப்பாக விளையாடிப் பல பதக்கங்களை வென்றனர். கலந்துகொண்ட 12 பேரும் ஆளுக்கு தலா ஒரு பதக்கம் வென்றுள்ளனர். இதில் 5 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களும் அடங்கும். சுமித், ராகுல், பஜ்ரங், சுஷில் குமார், வினீஷ் போகாத் ஆகியோர் தங்கப்பதக்கமும், காதிரி, பபிதா குமாரி, பூஜா தண்டா ஆகியோர் வெள்ளிப்பதக்கமும், சோம்வீர், சாக்க்ஷி மாலிக், திவ்யா கக்ரன், கிரண் ஆகியோர் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.  கலந்துகொண்ட அனைவரும் பதக்கம் வென்றிருப்பதன் மூலம் மீண்டும் ஒருமுறை மல்யுத்தப் பிரிவில் தங்களது பலத்தைக் காட்டியுள்ளது இந்தியா. 

அதிகப்படியாக துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய வீரர்கள் 16 பதக்கங்கள் பெற்றனர். இதில் 7 தங்கப்பதக்கங்கள் அடங்கும். பளுதூக்குதலில் 5 தங்கம் உட்பட 9 பதக்கங்கள் இந்தியா கைப்பற்றியது.   ஒட்டுமொத்தமாக இந்தியா 26 தங்கப்பதக்கம், 20 வெள்ளிப்பதக்கம், 20 வெண்கலப்பதக்கம் என 66 பதக்கங்களுடன் மூன்றாவது இடம் பிடித்தது. முதல் இடத்தை ஆஸ்திரேலியாவும், இரண்டாவது இடத்தை இங்கிலாந்தும் பிடித்தது.