Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தோனி படையைத் தோற்கடிக்க என்னவெல்லாம் செய்தார் அஷ்வின்..? கேப்டன்ஷிப் அசத்தல்கள்! #CSKvsKXIP #IPL

சென்னை சூப்பர் கிங்ஸை வென்றது கிங்ஸ் லெவன் பஞ்சாப் என்பதைவிட தோனியை வென்றார் அஷ்வின் என்பதே சரியாக இருக்கும். எல்லோருமே சென்னை, பஞ்சாப் மோதலை மற்றுமொரு ஐ.பி.எல் மேட்சாகப் பார்க்க, அஷ்வின் மட்டும் அதை வாழ்வா- சாவா போராட்டமாக, தனக்கு தலைமைப் பண்பு இருக்கிறதா என்பதை சோதிக்கும் போட்டியாகப் பார்த்திருக்கிறார். தோனி படையை வெல்ல என்னவெல்லாம் செய்தார் அஷ்வின்! #KXIPvCSK

KXIPvCSK

எதிர்பாராததை எதிர்பாருங்கள்!

சென்னையை எதிர்கொள்ளப்போகும் முன் அஷ்வினின் பெரிய கவலையாக இருந்தது பேட்டிங். அதுவும் ஓப்பனிங் பேட்டிங். கே.எல். ராகுல், மாயங்க் அகர்வால் என இந்த ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் சென்னையின் பெளலிங் அட்டாக்கிற்கு முன்னால் எடுபடாது என்பதைக் கணித்ததுதான் அஷ்வினின் முதல் வெற்றி. போர் என வந்துவிட்டப்பிறகு  வெற்றிக்காக என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அதை செய்யத்துணிந்தார் அஷ்வின். 'கிறிஸ் கெய்ல் வெறும் பேட்ஸ்மேன். முதல் ஓவரிலேயே  அவர் அவுட் ஆகவும் வாய்ப்பிருக்கிறது, 20 பந்துகளில் அரை சதம் எடுக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், வெறும் பேட்டிங்குக்காக மட்டுமே, அதுவும் ஏதோ ஒரு மேட்ச்சில் அடிப்பார் என்பதற்காக மட்டுமே, அவரை டீமில் வைத்திருப்பதற்குப் பதிலாக ஆல் ரவுண்டர் மார்க் ஸ்டாய்னிஸை அணியில் வைத்திருக்கலாம்' என்கிற அறிவுறுத்தல் மட்டுமே கெயிலை, அஷ்வின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடவிடாமல் விட்டதற்குக் காரணம். 

ஆனால், சென்னை மேட்ச்சில் கெயில் அடித்தால் அடிக்கட்டும், அவுட் ஆனாலும் பரவாயில்லை என முதல் ரிஸ்கை எடுத்தார் அஷ்வின். கெயில் சென்னை அணிக்கு எதிராக விளையாடுவார் என்பது யாருமே எதிர்பாராத முடிவு. அதேபோல் அஷ்வினின் கனவை கலைக்கவில்லை கெயில். 33 பந்துகளில் 63 ரன்கள். 7 பவுண்டரி, 4 சிக்ஸர்கள்...  ``நீ என்கிட்ட இதைத்தானே எதிர்பார்த்த... இந்தா வெச்சுக்கோ'' என்பதுபோலவே இருந்தது கெயிலின் பாடி லேங்வேஜ். அவருக்குமே தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருந்ததால் தன்னை அதிக முறை அவுட்டாக்கிய, தன்னை அதிக ரன் எடுக்க விடாமல் தடுக்கக்கூடிய பெளலரான ஹர்பஜனை நேற்று ஓட ஓட விரட்டியடித்தார் கெய்ல்.

#KXIPvCSK

பெளலிங் பிளான்!

வாட்சன், முரளி விஜய் என சென்னை ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை மாற்றியிருப்பதால் ஸ்பின்னர்களை வைத்தே பவர் ப்ளே ஓவர்களை அஷ்வின் சந்திப்பார் என்பதே எதிர்பார்ப்பு. ஆனால், அதையும் நேற்று பொய்யாக்கினார் அஷ்வின். அக்ஸார் பட்டேல் இல்லாமலேயே மேட்சைத் தொடங்கினார் அஷ்வின். முதல் ஓவரை வேகப்பந்து வீச்சாளர் பரிந்தர் சரணிடம் கொடுத்தார். அதேபோல் பவர் ப்ளே ஓவர்களில் ஒரே ஓரு ஓவர் மட்டுமே ஸ்பின்னருக்குக் கொடுத்தார். அதுவும் தான் வீசாமல் முஜிப் உர் ரஹ்மானிடம் கொடுத்தார் அஷ்வின். பவர் ப்ளேவின் முடிவில் 2 விக்கெட்டுகளையும் இழந்து 53 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது சென்னை.

அந்த எல்டபிள்யு!

சாம் பில்லிங்ஸ்தான் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னையைக் காப்பாற்றியவர். அவரை வீழ்த்துவது மிக முக்கியம் என்பதால், அவரை வீழ்த்தத் துடித்தார் அஷ்வின். ஆஃப் ஸ்பின்னர் அஷ்வின், நான்காவது பந்தை லெக் ஸ்பின்னாக மாற்றினார். கால் மேல் பலன். நடுவர், பில்லிங்ஸின் பேட்டில் பட்டு பந்து பெளண்டரிக்குப் போனதாக அறிவிக்க, அது க்ளீன் எல்பிடபுள்யூ எனக் கதறினார் அஷ்வின். ஆனால், டிஆர்எஸ் கேட்க அவருக்குச் சின்ன தயக்கம் இருந்தது. சிறிது நேர யோசனைக்குப் பிறகு துணிந்து முடிவெடுத்தார் அஷ்வின். அவரின் கணிப்பு உண்மையானது. ரீ-ப்ளேவில் பந்து காலில் பட்டுப்போனதும்,  சரியான லைனில் பிட்ச் ஆனதும் தெரிய, பில்லிங்ஸ் அவுட். பஞ்சாபுக்கும், அஷ்வினுக்கும் மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்ததே இந்த விக்கெட்தான்.

#KXIPvCSK

ராயுடு ரன் அவுட்!

ஃபீல்டிங் சொதப்பல், ரன் அவுட் சொதப்பல்களுக்குப் பெயர் பெற்றவர் அஷ்வின். பந்தை நோக்கி ஓடமாட்டார் என்பதோடு ஸ்டம்பைக் குறிபார்த்து அவர் அடித்ததாக வரலாறே இல்லை. ஆனால், தன்னுடைய ட்ராக்  ரெகார்டையே நேற்று மாற்றிக்காட்டினார் அஷ்வின். மின்னல் வேகம் என வார்த்தைக்காக சொல்லவில்லை. உண்மையாகவே நடந்தது அதுதான். எக்ஸ்ட்ரா கவருக்குப் பந்து வந்த வேகத்தில் அதைப் பிடித்து ஸ்டம்பை நோக்கி வீச 49 ரன்களுடன் களத்தில் இருந்த ராயுடு அவுட். அஷ்வினை ஒரு கேப்டனாக கொண்டாடவைத்தது இந்த ரன் அவுட்தான். 

மோஹித் ஷர்மாவுக்கு 2 ஓவர்!

3 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்த எக்கனாமிக்கல் பெளலர் நஜீம் இருந்தாலும், டெத் ஓவர்களை வீச வேகப்பந்து வீச்சாளர்களையே தேர்ந்தெடுத்தார் அஷ்வின். சென்னை அணியில் இருந்த மோஹித் ஷர்மா நெட்களில் தோனிக்கு அதிகமுறை பந்து வீசியவர் எனத் தெரிந்தும், ஸ்பின்னரிடம் கொடுக்காமல் ஷர்மாவிடமே பந்தை அஷ்வின் கொடுக்கக் காரணம், தோனியின் மைனஸ்கள் அவருக்குத் தெரியும் என்பதே. ஆனால், 18-வது ஓவரை மோஹித் வீசியபோது  2 சிக்ஸர், 1 பவுண்டரி என பொளந்துகட்டினார் தோனி. அதனால் 20-வது ஓவர் ஸ்பின்னரிடம்தான் கொடுக்கப்படும் என எல்லோரும் நினைக்க, கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்கிற நிலையில், முந்தைய ஓவரில் 17 ரன்கள் கொடுத்த அதே மோஹித் ஷர்மாவிடம் பந்தைக் கொடுத்தார் அஷ்வின். 

KXIPvCSK

18-வது ஓவரில் ஸ்டம்ப்பை நோக்கிப் பந்துகளை வீசிய மோஹித் கடைசி ஓவரில் வைடாகப் பந்துகளை வீசினார். தோனி முந்தைய ஓவரில் அடித்ததுபோல அடிக்கமுடியவில்லை. 1 பவுண்டரி 1 சிக்ஸர் மட்டுமே. பஞ்சாப் வென்றது. 

பஞ்சாபின் வெற்றிக்கு கெயில், முஜிப், மோஹித் என பலர் உரிமை கொண்டாடலாம். ஆனால், சரியான திறமைகளை சரியான நேரத்தில் முன்நிறுத்தி, ஒன்றாக ஒருங்கிணைத்து, பலவீனங்களை எல்லாம் பலமாக மாற்றி தோனியின் படையை வென்ற பெருமை அஷ்வினை மட்டுமே சேரும்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement