வெளியிடப்பட்ட நேரம்: 09:33 (17/04/2018)

கடைசி தொடர்பு:09:47 (17/04/2018)

காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்கள் தாயகம் திரும்பினர்..!

காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்களை வென்ற இந்திய வீரர்கள், இன்று தாயகம் திரும்பினர். டெல்லி வந்த அவர்களுக்கு உற்சாக
வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு, மல்யுத்த வீரர்கள் சுஷில் குமார் மற்றும் சுமித் மாலிக் ஆகியோர் பாபா ராம்தேவை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

21-வது காமன்வெல்த் போட்டிகள், கடந்த ஏப்ரல் 4-ம் தேதி ஆஸ்திரேலியாவின் கோல் கோஸ்ட் நகரில் தொடங்கி 11
நாள்கள் நடைபெற்றன. இந்தத் தொடரில் மொத்தம் 71 நாடுகள் பங்கேற்றன. இதன் முதல் நாளிலிருந்தே இந்திய வீரர்கள் மற்றும்
வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கங்களைக் குவித்துவந்தனர். இறுதியில், இந்தியா 26 தங்கப்பதக்கம், 20 வெள்ளி மற்றும் 20 வெண்கலங்களுடன் பதக்கப் பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பிடித்தது. ஏப்ரல் 15-ம் தேதியுடன் அனைத்துப் போட்டிகளும் முடிவடைந்த
நிலையில், வீரர்கள் ஒவ்வொருவராக இந்தியா வருகின்றனர்.

இந்நிலையில், காமன்வெல்த் ஆடவர் மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்ற சுஷில் குமார், பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற மேரி கோம், பெண்கள் டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்ற மனிகா மத்ரா மற்றும் ஆடவர் மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்ற சுமித் மாலிக் ஆகியோர், இன்று அதிகாலை டெல்லி விமான நிலையம் வந்தடைந்தனர். இந்தியா வந்த அவர்களுக்கு, ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

 அதன் பின், மல்யுத்த வீரர்கள் சுஷில் குமார் மற்றும் சுமித் மாலிக் ஆகியோர் பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவை நேரில் சந்தித்து
வாழ்த்துப் பெற்றனர். அப்போது பேசிய பாபா ராம்தேவ், ``சுஷில் குமார் மற்றும் சுமித் மாலிக் இருவரும் காமன்வெல்த் போட்டிகளில்
தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமைசேர்த்துள்ளனர். இளைஞர்கள் அனைவரும் இவர்களை உத்வேகமாகக்கொண்டு செயல்பட வேண்டும். வீரர்கள் இருவரும் தொடர்ந்து பயிற்சிபெற்று, ஒலிம்பிக் போட்டிகளிலும் கலந்துகொள்ள வேண்டும். இந்தியாவுக்கு
மேலும் தங்கங்களைச் சேர்க்க வேண்டும்'' எனக் கூறினார்.

இவரைத் தொடர்ந்து பேசிய மல்யுத்த வீரர் சுஷில் குமார், ``நான் காமன்வெல்த் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டேன் என நம்புகிறேன். அனைத்து இந்தியர்களின் ஆசீர்வாதங்கள்தான் என்னை இந்த அளவுக்கு செயல்படவைத்தது. நான் இன்னும் பல போட்டிகளில்
கலந்துகொண்டு இந்தியாவுக்காக நிறையத் தங்கம் வெல்ல ஆசைப்படுகிறேன்'' என்றார்.