வெளியிடப்பட்ட நேரம்: 22:03 (17/04/2018)

கடைசி தொடர்பு:07:34 (18/04/2018)

`ரோஹித் ஷர்மா அதிரடி!’ பெங்களூர் அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த மும்பை அணி #MIvRCB

ஐ.பி.எல் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கெதிரான லீக் போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை அணி 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. 

ரோகித் ஷர்மா

Photo: Twitter/IPL

ஐ.பி.எல்   2018 -ல் மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் 14 -வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, பந்துவீச முடிவு செய்தார். இதையடுத்து, மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சூர்யகுமார் யாதவ் மற்றும் எவின் லீவிஸ் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். முதல் ஓவரில் சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றி மும்பை அணிக்கு உமேஷ் யாதவ் அதிர்ச்சி அளித்தார். அடுத்ததாக கேப்டன் ரோஹித் ஷர்மா களமிறங்கினார். 

ரோஹித் ஷர்மா மற்றும் லீவிஸ் ஆகியோர் அணியைச் சரிவில் இருந்து மீட்கும் பணியில் இறங்கினார். அதேநேரத்தில் மோசமான பந்துகளை பவுண்டரிகளுக்கும், சிக்ஸர்களுக்கும் பறக்க விட்டனர். முதல்  6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு, அந்த அணி  60 ரன்கள் எடுத்தது. லீவிஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். 42 பந்துகளில்  65 ரன்கள் எடுத்த அவர், கோரி ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்துக் களமிறங்கிய குர்னல் பாண்டியா 15 ரன்களில் ஆட்டமிழந்தார் . ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுமுனையில் ரோஹித் ஷர்மா தொடர்ந்து அதிரடியாக விளையாடி சிக்ஸர்கள் பறக்கவிட்டார். பொல்லார்ட் 5 ரன்னில் வோக்ஸ் பந்திவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரோஹித் ஷர்மா, கடைசி ஓவரில் 94 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை மிஸ் செய்தார். மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெடுகள் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது.