மிரள வைத்த கெயில்... எல்லா ஏரியாவிலும் சொதப்பிய சன்ரைஸர்ஸ்! #KXIPvsSRH | Gayle smashes his sixth Ton in IPL to guide punjab an easy win

வெளியிடப்பட்ட நேரம்: 11:09 (20/04/2018)

கடைசி தொடர்பு:14:30 (20/04/2018)

மிரள வைத்த கெயில்... எல்லா ஏரியாவிலும் சொதப்பிய சன்ரைஸர்ஸ்! #KXIPvsSRH

மிரள வைத்த கெயில்... எல்லா ஏரியாவிலும் சொதப்பிய சன்ரைஸர்ஸ்! #KXIPvsSRH

இந்த ஐ.பி.எல் முழுக்க டாஸ் வெல்லும் அணி தேர்வு செய்தது இரு விஷயங்கள்தான். ஒன்று பௌலிங் இல்லையேல் ஃபீல்டிங். முதல் 15 போட்டிகளிலும், டாஸ் வென்றதும், கேப்டன் என்ன சொல்லப்போகிறார் என யாரும் காத்திருக்கத் தேவையில்லை. But, Ashwin had other ideas. ஆனால், அஷ்வினுக்கு மட்டுமல்ல கெயிலுக்கும் வேறு ஐடியாக்கள் இருந்திருக்கின்றன. #KXIPvsSRH

அஷ்வினின் 200-வது டி20 போட்டி. இந்த ஐ.பி.எல் தொடரில் மொகாலியில் நடக்கும் கடைசிப்போட்டி. மொகாலியில் ஐதராபாத் தோற்றதே இல்லை. மொகாலியில் நடக்கும் போட்டிகளில் 3 அரைசதம் (4 இன்னிங்ஸ்) அடித்து ராசியான கெயில்... போன்ற சுவாரஸ்யங்களுடன் டாஸ் வென்ற அஷ்வின் , பேட்டிங் தேர்வு செய்து முதல் அதிர்ச்சி கொடுத்தார். சென்னையை வென்ற மகிழ்ச்சியில் ஜெர்ஸியைக்கூட கழட்டாமல், அதே டீமை களமிறக்கினார் அஷ்வின். சன்ரைஸர்ஸ் அணியில் ஸ்டன்லேக்குக்கு பதிலாக கிறிஸ் ஜோர்டான் களமிறங்கினார். 

#KXIPvsSRH

முதல் 3 ஓவர்களில் பஞ்சாப் 13 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. புவனேஷ்குமார் மீண்டும் ஒரு அட்டகாசமான ஸ்பெல்லை (2 - 0 - 7 - 0)  வீசினார். ரஷித் கான் ஓவரில் கெயில் இரு சிக்ஸர்கள் அடித்து அதகளப்படுத்தினார். பவர்பிளே முடிவில் பஞ்சாப் அணி 49 ரன்கள் அடித்திருந்தது. 

சும்மாவே வெளுத்து வாங்கும் கெயிலுக்கு,  லெஃப்ட் ஆர்ம் ஸ்பின்னர்கள் என்றால் அலாதி பிரியம். ஐ.பி.எல் தொடரில் லெப்ஃட் ஆர்ம் ஸ்பின்னர்களுக்கு எதிராக கெயிலின் ஸ்ட்ரைக் ரேட் 266. அதனாலேயே ஷகிப் அல் ஹசனுக்கு பௌலிங் தராமல் வைத்திருந்தார் கேன் வில்லியம்சன். சரி, ஆனது ஆகட்டும்  என ஷகிப்பை இறக்க, மயாங்க் அவரை பவுண்டரி எடுத்து வரவேற்றார். கெயில் பங்குக்கு லாங் ஆன் திசையில் ஒரு சிக்ஸ். சித்தார்த் கவுல் பந்தில் மயாங்க் அவுட்டாக, கருண் நாயர் களமிறங்கினார். மீண்டும் ஷகிப் அல் ஹசன் பௌலிங். மீண்டும், கருண் ஒரு சிக்ஸ். லாங் ஆனில் கெயில் ஒரு சிக்ஸ்.

#KXIPvsSRH

13 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 104 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்து வலுவான நிலையில் இருந்தது. 40 பந்துகள் சந்தித்த கெயில் 51 ரன்கள் எடுத்திருந்தார். மொகாலியில் கெயில் அடிக்கும் நாலாவது அரைசதம் (5 இன்னிங்ஸ்). 

`என்னடா இது கெயில் பேட்டிங் போல் இல்லையே’ என யோசிக்கும்போது, `நாந்தான் இருக்கேன்ல' என சிரித்துக்கொண்டே வந்தார் ரஷித் கான். முதல் பந்தை கருண் சிங்கிள் தட்டிவிட, `கெயில் ரியல் கெயில் ' மோடுக்கு வந்தார். லாங் ஆஃப் திசையில் முதல் சிக்ஸ். அடுத்து சைட்ஸ்கிரீனைத் தகர்த்தெறியும் விதமாக ஒரு சிக்ஸ். அடுத்து பந்து ரிப்ளேவா இல்லை என்னவென்றே தெரியாத அளவுக்கு, `அதே டெய்லர், அதே வாடகை' ரீதியில் அதே லைனில் மற்றுமொரு பந்து, அதை அப்படியே அதே சைட் ஸ்கிரீனில் இன்னும் ஃபோர்ஷாக ஒரு சிக்ஸ். ஹாட்ரிக் சிக்ஸ். அடுத்த பந்தை அரௌண்ட் தி விக்கெட்டில் வீசினார் ரஷித். `இந்தா வாங்கிக்க’ என லெக் சைடில் ஒரு சிக்ஸ்.  40 பந்துகளில் 51 என இருந்த கெயில் ஸ்கோர், இந்த ஓவர் இறுதியில் 77 (45 பந்துகள் ) ரன்கள். கருண் நாயர் அதிரடியாக ஆடினாலும், அரங்கம் முழுக்க 'கெயில் கெயில் ' என அதிர்ந்தது. டிசைன் அப்படி! 

ஜோர்டான், புவனேஷ் குமார் என பந்து வீச வந்த எல்லோருக்கும் ஒரு சிக்ஸை பார்சல் செய்த கெயில், சித்தார்த் பந்தில் சிங்கிள் தட்டி, 21-வது சதத்தை பூர்த்தி செய்தார். கடைசி ஓவரில் ஃபின்ச்சும் அதிரடி மோடுக்கு மாற, 20 ஓவர் முடிவில் 193 ரன்கள் எடுத்தது பஞ்சாப் அணி.

#KXIPvsSRH

 

இங்கு கெயிலின் சதம் பற்றி சொல்லியாக வேண்டும். கொல்கத்தா அணி கெயிலை டிராப் செய்தபோது, அடுத்து நடைபெற்ற ஏலத்தில் கெயில் `அன்சோல்ட்’ பிளேயராகத்தான் இருந்தார். பெங்களூரு அணியில் டர்க் நேன்ஸ் விலக, மாற்று வீரராக கெயிலை எடுத்தது பெங்களூரு. அந்த சீசன் முழுக்க கெயிலின் அதிரடி தொடர்ந்தது. இந்தமுறையும் கிட்டத்தட்ட அதே நிலைமைதான். முதல் நாள் ஏலத்தில் கெயிலை யாரும் எடுக்க தயாராக இல்லை. இரண்டாம் நாளில் கெயிலின் ஆரம்பத் தொகையான 2 கோடிக்கு, கெயிலை எடுத்தார் ப்ரீத்தி. ஷாப்பிங் செல்லும் மகிழ்ச்சியில் காணப்பட்ட பிரீத்திக்கு அன்று அவர் செய்தது ஜாக்பாட் என நேற்று உணர்த்தினார் கெயில். பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் சேவாக். ``நாங்கள் கெயில் மீது முதலீடு செய்த தொகைக்கு, அவர் இரு போட்டிகள் வென்று கொடுத்தாலே போதுமானது’’ என்றார். அதை தனக்குக் கிடைத்த இரண்டாவது வாய்ப்பிலேயே சாதித்துவிட்டார் கெயில்.

முதலிரண்டு போட்டிகளில் கெயில் களம் இறக்கப்படவில்லை. சென்னைக்கு எதிரான போட்டியில் கூட, அன்று காலையில்தான் தனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக பேட்டியளித்தார் கெயில். அந்தப் போட்டியில்  33 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து விளாசினார். சென்னைக்கு எதிராக நாலு சிக்ஸ் என்றால், ஐதரபாத்துக்கு எதிராக 11 சிக்ஸ். சர்க்கஸில் இருக்கும் யானையிடம் ஒரு பேட்டைக் கொடுத்து, அதன்முன் ஃபுட்பாலை எறிவார்கள். அது தன் உடலில் எந்தவொரு அசைவும் இல்லாமல்,  அந்த சின்ன பேட்டை வைத்து புட்பாலை அரங்கம் முழுக்க எறியும். எந்தவொரு ஃபுட்வொர்க், உடல் அசைவு என எதுவும் இல்லாத  கெயிலிடம் அதே மனநிலையான பேட்டிங்தான். பாரபட்சம் இல்லாமல் அரங்கில் எல்லா இடங்களிலும் சிக்ஸ் அடித்து அதிர வைத்தார் கெயில். கெயில்,சேவாக் போன்ற அதிரடி பேட்ஸ்மென் ஃபுட்வொர்க்கை பெரிதும் நம்புவதில்லை என மீண்டுமொருமுறை நீரூபணம் செய்தார். 

இதற்கு முன்பு டி - 20 போட்டிகளில் கெயில் இவ்வளவு சிங்கிள்ஸ், டபுள்ஸ் ஓடியதாக நினைவில்லை. இந்தப் போட்டியில் அத்தனை  டபுள்ஸ் .18 பந்துகள் மட்டுமே டாட் வைத்திருந்தார். 

டார்கெட் 194:

பர்விந்தர் ஸ்ரன் வீசிய முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஸ்ரன் வீசிய பந்து, இடது முழங்கையில் பட, ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் , அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தவான் வெளியேறினார். இரண்டாவது ஓவரில், சாஹா அவுட். அடுத்து வந்த யூசஃப் பதானையும் வெளியேற்றினார் மோகித் ஷர்மா.  பவர் பிளே முடிவில் மூன்று பேட்ஸ்மெனை இழந்து 40/2 என தத்தளித்தது சன்ரைசர்ஸ். (யூசஃப் பதான், சாஹா , தவான் ).  

தன் மீது இருக்கும் பொறுப்பை உணர்ந்து ஆடினார் கேப்டன் கேன் வில்லியம்சன். டை, முஜிப் ரஹ்மான் ஸ்பெல்லில் பெரிதாக ஐதராபாத் அணியால் ரன் எதுவும் எடுக்க முடியவில்லை. அரைசதம் கடந்த வில்லியம்சன், டை பந்தில் அவுட்டானார். 54 (41 ). 15 ஓவர் முடிவில் தேவையான ரன் ரேட் 15ஐ கடந்துவிட்டது. மனிஷ் பாண்டே அதிரடியாக ஆடினாலும், அது தேவையான ரன்ரேட்டை எந்தவிதத்திலும் குறைக்கவில்லை. முஜிபுர் ரஹ்மான், டை, ஸ்ரன் மூவரது ஓவர்களிலும் தேமே என நின்றனர் ஐதராபாத் பேட்ஸ்மென். அந்த 12 ஓவர்களில் 72 ரன்களை மட்டுமே எடுத்திருந்தனர். மற்ற அணிகளாக இருந்திருந்தால், இதை எளிதாக சேஸ் செய்திருக்கவே வாய்ப்புகள் அதிகம். 

இறுதி ஓவரில் 33 ரன்கள் தேவைப்பட, ஷகிப் அல் ஹசனால் இரு சிக்ஸ் மட்டுமே அடிக்க முடிந்தது.பஞ்சாப் 15 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது.

#KXIPvsSRH

மூன்று போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியலில், டாப்பில் இருந்த சன் ரசர்ஸ் முதல் தோல்வியை சந்தித்தது. தங்கள் பௌலர்களை மட்டுமே பிரதானமாக நம்பியிருக்கும் ஒரு அணி, ஃபீல்டிங்கில் இவ்வளவு மோசமாக செயல்பட்டது, மிக மோசம். கெயில் 14 ரன்கள் எடுத்திருந்தபோது, சாஹா கேட்ச் மிஸ் செய்தார். பல நல்ல வாய்ப்புகளை நழுவவிட்டனர். சிங்கிள் ஓட வேண்டிய இடத்தில் எல்லாம் கெயில் கூட டபுள்ஸ் ஓடியதற்கு, சன் ரைசர்ஸின் மோசமான ஃபீல்டிங்கே காரணம். அதுவும் முதல் இன்னிங்ஸின் கடைசி பந்தில் எதற்காக கீப்பர் சாஹா, பௌலர் திசையில் இருக்கும் ஸ்டம்ப்பை நோக்கி எறிந்தார் என தெரியவில்லை. அதுவும் மிஸ்ஹிட். அத்தனை மிஸ்ஹிட்... ஓவர்த்ரோ. 

STATS:

* டி-20 போட்டிகளின் சிறப்பான ஸ்பின்னர்கள் என்றால், பலருக்கும் சட்டென நினைவுக்கு வருவது ரஷித் கான், நரேன், அஷ்வின் போன்றவர்கள். கடந்த மூன்று இன்னிங்ஸ் மூவருக்குமே மோசமானதாக அமைந்தது. மூவரும் தங்கள் வாழ்நாளின் மோசமான பௌலிங்கை பதிவு செய்திருந்தனர். 


- அஷ்வின் 4 - 0 - 53 - 0 
- ரஷித் கான் 4 - 0 - 55 - 1
- சுனில் நரேன் 4 - 0 - 48 - 0 

* இந்த ஐ.பி.எல் சீசனில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த முதல் கேப்டன் அஷ்வின்.

* இந்த ஐ.பி.எல் சீசனில் முதல் முறையாக தோற்றது சன் ரைசர்ஸ் ஐதராபாத்.

*  மொகாலியில் முதல் முறையாக ஐதராபாத்தை வென்றது பஞ்சாப்

* விளையாடிய இரண்டு இன்னிங்ஸில் ஒரு சதம் , ஒரு அரைசதம் என மொத்தம் 167 ரன்கள் எடுத்திருக்கிறார் கெயில்.  


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close