``ஹார்சஸ் ஃபார் கோர்ஸஸ்'' - நீங்களே மறந்துடாதீங்க தோனி! #CSKvsRR | CSK vs RR match preview

வெளியிடப்பட்ட நேரம்: 12:14 (20/04/2018)

கடைசி தொடர்பு:12:23 (20/04/2018)

``ஹார்சஸ் ஃபார் கோர்ஸஸ்'' - நீங்களே மறந்துடாதீங்க தோனி! #CSKvsRR

ஹார்சஸ் ஃபார் கோர்சஸ் தியரியை கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பிரபலப்படுத்தியவர் தோனிதான். அந்த தோனி மீண்டும் ஹார்ஸஸ் தியரியைக் கையில் எடுத்தால்தான் சென்னை அணியைக் கரைசேர்க்க முடியும். 

``ஹார்சஸ் ஃபார் கோர்ஸஸ்'' - நீங்களே மறந்துடாதீங்க தோனி!  #CSKvsRR

`சேப்பாக்கத்துக்கு பதில் புனே’ எனப் புதுவீட்டுக்குள் புகுந்து முதல் மேட்ச் ஆடுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ். மேட்ச் ஃபிக்ஸிங் புகாரால் இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் இருவரும் 2 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று சந்திக்கிறார்கள். இரண்டு போட்டிகளில் வெற்றி, ஒன்றில் தோல்வி என ராஜஸ்தான் ராயல்ஸுடனான இன்றைய ஆட்டம் தோனி தலைமையிலான சென்னை அணிக்கு நான்காவது ஆட்டம். ராயல்ஸுக்கு இது ஐந்தாவது ஆட்டம். 2 வெற்றி, 2 தோல்வி என அவர்கள் சமநிலையில் இருக்கிறார்கள்.

#CSKvsRR

 

பழம் பெருமைகள் உதவாது! 

2018 ஐ.பி.எல் தொடங்குவதற்கு முன்பு `சென்னை சூப்பர் கிங்ஸ் ரிட்டர்ன்ஸ்’, `சென்னை எப்படிப்பட்ட அணி தெரியுமா?’, `தோனிதான் சூப்பர் கேப்டன் தெரியும்ல’ எனப் பலவித பில்ட் அப்களோடு தொடரைத் தொடங்கியது சென்னை. ஆனால், இப்போது சென்னை சூப்பர் கிங்ஸின் பலங்களைவிட பலவீனங்கள் அதிகம் என்பது மற்ற அணிகளுக்கு மட்டுமல்ல, எல்லா கிரிக்கெட் ரசிகனுக்கும் தெரிந்துவிட்டது. இனி ஆட்டம்தான் பேசவேண்டும். 

தனியொருவன்களின் டீம்!

மும்பை இந்தியன்ஸிடம் இருந்து பிராவோ காப்பாற்றினால், கொல்கத்தாவிடம் இருந்து பில்லிங்ஸ் காப்பாற்றினார். பஞ்சாபிடம் இருந்து தப்பிக்க தோனி தனியொருவனாக முயன்றார். ஆனால், தோனியால் வெற்றியை நெருங்கமுடிந்ததே தவிர வெற்றிபெற வைக்கமுடியவில்லை. மூன்று போட்டிகளிலுமே ஒரு கூட்டாக விளையாடாமல் யாராவது ஒருவர் காப்பாற்றிவிடுவார் என்கிற நிலையில்தான் சென்னையின் ஆட்டம் இருந்தது. ஆனால், இந்த தனியொருவன்களால் கோப்பையை வென்று தரமுடியாது. 

`ஹார்சஸ் ஃபார் கோர்சஸ்’ தியரியை கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பிரபலப்படுத்தியவர் தோனிதான். அந்த தோனி மீண்டும் ஹார்சஸ் தியரியைக் கையில் எடுத்தால்தான் சென்னை அணியைக் கரைசேர்க்க முடியும். 

தோனி

தோனி விளையாடுவார்!

பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் முதுகுவலியால் அவதிப்பட்ட தோனி மீண்டுவிட்டார் என்கிறார்கள். தோனி அணியில் இருக்கிறார் என்பதுதான் சென்னை அணிக்கான மிகப்பெரிய உளவியல் பலம். நேற்று வலைப்பயிற்சியில் தோனி ஈடுபட்டிருந்ததால் இன்றைய மேட்ச்சில் அவர் நிச்சயம் விளையாடுவார்.

சென்னையின் பெளலிங்தான் பேட்டிங்கைவிட மிகப்பெரிய பலவீனமே. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை 165 ரன்களுக்குள் சுருட்டியதுதான் இதுவரை சென்னையின் பெஸ்ட் பெளலிங். கொல்கத்தா, சென்னையின் பெளலர்களை அடித்தது துவைத்து 202 ரன்கள் எடுக்க, பஞ்சாப் 197 ரன்கள் எடுத்தது. அதனால் இன்றைய மேட்ச்சில் நிச்சயம் பெளலிங் மாற்றங்கள் வேண்டும். 

ரஹானே, சாம்சன், பென் ஸ்டோக்ஸ் என பலமான பேட்டிங் லைன் அப் கொண்டிருக்கும் ராஜஸ்தானை தோற்கடிக்க பெளலிங் அட்டாக் சிறப்பாக இருக்கவேண்டும். ராஜஸ்தான் பேட்ஸ்மேன் டார்சி ஷார்ட்டுக்கு பதிலாக இன்றைய மேட்ச்சில் க்ளாஸன் விளையாடக்கூடும். 

வருகிறார் வில்லி!

சென்னை அணியில் மிக முக்கிய மாற்றமாக இன்றைய மேட்ச்சில் டேவிட் வில்லி விளையாடுவார் என எதிர்பார்க்கலாம். வேகப்பந்து வீச்சாளரான டேவிட் வில்லி இங்கிலாந்து அணியின் மிக முக்கியமான டி-20 பெளலர். அவரது இடது கை பந்துவீச்சு நிச்சயம் சென்னை அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். 

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த ஆண்டு மிகச்சிறப்பாக பந்து வீசியவர் சுழற்பந்து வீச்சாளர் கரன் ஷர்மா. இம்ரான் தாஹிருக்கு பதிலாக இன்றைய மேட்ச்சில் கரன் ஷர்மாவை தோனி தைரியமாகக் களமிறக்கலாம். 

ஜடேஜா

என்ன செய்கிறார் ஜடேஜா?

தோனி, ரெய்னாவுக்கு அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகமும், பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபெளமிங்கும் மிகப்பெரிய நம்பிக்கையை ரவீந்திர ஜடேஜா மீதுதான் வைத்திருக்கிறார்கள். ஆனால், கொல்கத்தாவுக்கு எதிராக அடித்த அந்த சிக்ஸரைத் தவிர பேட்டிங்கிலும், பெளலிங்கிலும்  இதுவரை ஜடேஜா  ஏமாற்றமே. மேலும், அணியில் அவருக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் புதிராகவே இருக்கிறது. இடது கை ஸ்பின்னரான ஜடேஜா இரண்டு மேட்ச்களில் முழுமையாக பந்துவீசவே இல்லை. இவருக்கு காயமா? அல்லது இடது கை ஸ்பின்னரைப் பயன்படுத்துவதில்  தோனிக்கு என்ன பிரச்னை என்றே தெரியவில்லை. அதேபோல் பிராவோ செம ஃபார்மில் இருந்தும், ஃபார்மில் இல்லாத ஜடேஜா அவருக்கு முன்னாள் இறக்கப்படுகிறார். பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் பிராவோவுக்கு முன்னால் ஜடேஜா களமிறக்கப்பட, ஸ்பின்தான் காரணம் என்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். ``பிராவோ ஸ்பின்னர்களுக்கு எதிராகத் திணறுவார். அதனால் ஸ்பின்னர்களின் ஓவர்கள் எல்லாம் முடிந்து வேகப்பந்து வீச்சாளர்களின் கைக்கு பந்து வரும்போது பிராவோவை இறக்குகிறோம். ஸ்பின்னர்களை சரியாக சமாளிக்கக்கூடிய பேட்ஸ்மேன் ஜடேஜா. நம்புங்கள்'' என்கிறது சூப்பர் கிங்ஸ் தரப்பு. ஆனால், ஜடேஜாவுக்கு ஏன் பெளலிங் வாய்ப்பு தரப்படுவதில்லை என்பதற்கு மழுப்பலாகவே பதில் சொல்கிறார்கள்.

இரண்டுக்குமே சாதகம்!

புனே மைதானம் பேட்டிங், பெளலிங் என இரண்டுக்குமே கைகொடுக்கும் ஆடுகளம்தான். இந்த பிட்ச்சில் அதிகபட்சமாக 205 ரன்கள் எடுத்திருக்கிறார்கள். அதேசமயம் 73 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆகியிருக்கிறார்கள். ஸ்பின், வேகப்பந்து என இரண்டு வகையான பெளலிங்குமே இங்கு எடுபடும். ஆனால், 20/20 போட்டிகளில் ஸ்பின்னர்கள்தான் அதிக விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார்கள். 

குதிரைகள்...

இந்த மேட்ச்க்கு, இந்த ஆடுகளத்துக்கு என வீரர்களை களமிறக்கினால் மட்டுமே சென்னை, ராஜஸ்தானை வீழ்த்த முடியும். மிக முக்கியமாக ஓப்பனிங் பேட்டிங் பார்ட்னர்ஷிப் மிக முக்கியம். பவர்ப்ளே ஓவர்களில் விக்கெட் இழக்காமல் அதிரடி ஆட்டம் ஆடினால் மட்டுமே சென்னையின் பின்வரிசை பேட்ஸ்மேன்களுக்கு பிரஷர் குறையும்.

வாட்சன்

விஜய்க்கு பதிலாக ராயுடுவே ஷேன் வாட்சனுடன் ஓப்பனிங் இறங்கலாம். ரெய்னா, தோனி, பில்லிங்ஸ், பிராவோ, ஜடேஜா என பேட்டிங் வரிசை இருந்தால் சிறப்பாக இருக்கும்.

பெளலிங்கைப் பொறுத்தவரை டேவிட் வில்லி, சஹார், பிராவோ ஹர்பஜன் சிங், கரன் ஷர்மாவுடன் ஜடேஜாவையும் பயன்படுத்தலாம். ராஜஸ்தானில் ஸ்டோக்ஸைத்தவிர இடது கை பேட்ஸ்மேன்கள் பெரிதாக இல்லை என்பதால் இடது கை ஸ்பின்னர் ஜடேஜாவை நிச்சயம் சென்னை பயன்படுத்தலாம்.

கமான் சிஎஸ்கே!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்