`கிறிஸ் லின், தினேஷ் கார்த்திக் அதிரடி!’ - கொல்கத்தா அணி 191 ரன்கள் குவிப்பு

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்துள்ளது.

கிறிஸ் லின்

ஐபிஎல் தொடரில் இன்று 2 லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர்கொள்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் மற்றும் அஸ்வின் இருவரும் ஐபிஎல் அணிகளின் கேப்டன்களாக நியமிக்கப்பட்ட பிறகு, இருவர் தலைமையிலான அணிகள் முதல்முறையாக மோதுகின்றன. ஈடன்கார்டன் மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் அஸ்வின், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பஞ்சாப் அணியில் மோஹித் சர்மாவுக்குப் பதிலாக அங்கீத் ராஜ்புத் விளையாடுகிறார். கொல்கத்தா அணியில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை.

ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே நரேன் ஆட்டமிழக்க, கிறிஸ் லின்னுடன், உத்தப்பா கைகோத்தார். இந்த ஜோடி, சீரான ரன்குவிப்பில் ஈடுபட்டது. இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 72 ரன்கள் குவித்திருந்த நிலையில், உத்தப்பா 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ராணாவும் விரைவில் வெளியேற 85 ரன்களுக்கு கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து களமிறங்கிய கேப்டன் தினேஷ் கார்த்திக், கிறிஸ் லின்னுடன் இணைந்து அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டார். இதனால், கொல்கத்தாவின் ரன்ரேட் 10 என்ற அளவில் எகிறியது. கடைசி ஓவர்களில் கிறிஸ் லின் 74 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 43 ரன்களுடனும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க கொல்கத்தா அணியின் ரன்ரேட் சற்று குறைந்தது. அதிரடி வீரர் ரஸலும் 10 ரன்களுடன் திருப்திப்பட்டுக் கொண்டார். தொடக்கத்திலிருந்த அதிரடி கடைசி ஓவர்களில் மிஸ்ஸாக, கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணி தரப்பில் ஆண்ட்ரு டை அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். கொல்கத்தா அணி கடைசி 5 ஓவர்களில் 45 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!