`பெங்களூரைச் சோதித்த ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர்!’ - 174 ரன்கள் எடுத்த டெல்லி அணி #RCBvDD

பெங்களுர் அணிக்கு எதிரான போட்டியில் இளம் வீரர்கள் ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் அதிரடியால் 174 ரன்கள் எடுத்தது டெல்லி டேர்டெவில்ஸ் அணி. 

ஐ.பி.எல் தொடரில் இன்று இரவு 8 மணிக்குத் தொடங்கிய இரண்டாவது போட்டியில் பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியும் டெல்லி டேர்டெவில்ஸ் விளையாடி வருகிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணிக் கேப்டன் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். 

டெல்லி அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக ஜேசன் ராய் மற்றும் கவுதம் கம்பீர் களமிறங்கினர். இந்தப் தொடரில் தனது பந்துவீச்சால் மிரட்டி வரும் வரும் உமேஷ் யாதவ், இந்த முறையும் சிறப்பான துவக்கம் தந்தார். அவரது முதல் ஓவரில் ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்த அவர், தனது அடுத்த ஓவரில் கம்பீரை வெளியேற்றி டெல்லிக்கு அதிர்ச்சி துவக்கம் அளித்தார். இதனால் டெல்லி அணியின் ரன்ரேட் பவர்ப்ளே ஓவர்களில் 5 -க்கும் குறைவாகவே இருந்தது. 

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ராய், 16 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து சஹால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஸ்ரேயஸ் ஐயரும், ரிஷப் பண்ட் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியில் இறங்கியது. பொறுமையாக இன்னிங்ஸைத் தொடங்கிய இந்த ஜோடி பின்னர் அதிரடியில் இறங்கியது. ஸ்ரேயஸ் ஐயர் 31 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மேக்ஸ்வெல் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும், மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்த பண்ட், அரை சதம் அடித்தார். அதன் பின்னர் ரன்ரேட்டை உயர்த்தும் பொருட்டு அதிரடியில் இறங்கினார் பண்ட். சிராஜின் ஒரே ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட்ட அவர், அடுத்தடுத்து பவுண்டரிகள் விளாசினார். டெல்லி அணி சவாலான ஸ்கோரை எட்ட உதவிய பண்ட், கடைசி ஓவரில் 85 ரன்களில் ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் டெல்லி 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. பெங்களூர் அணி தரப்பில் சஹால் 2 விக்கெட்டுகள் எடுத்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!