டெல்லி டேர்டெவில்ஸ்... டேரும் இல்லை டெவிலும் இல்லை... பெயரை மாத்திடுங்க ப்ளீஸ்! #KXIPvsDD | Delhi Daredevils collapses in batting once again.

வெளியிடப்பட்ட நேரம்: 08:50 (24/04/2018)

கடைசி தொடர்பு:15:01 (24/04/2018)

டெல்லி டேர்டெவில்ஸ்... டேரும் இல்லை டெவிலும் இல்லை... பெயரை மாத்திடுங்க ப்ளீஸ்! #KXIPvsDD

டெல்லி டேர்டெவில்ஸ்... டேரும் இல்லை டெவிலும் இல்லை... பெயரை மாத்திடுங்க ப்ளீஸ்! #KXIPvsDD

வீக்கெண்ட் ஃபீவர் முடிந்து , ஐபிஎல் மீண்டும் சிங்கிள் மேட்ச் மோடுக்கு வந்துவிட்டது. முதல் போட்டியே இரண்டாம் இடத்தில் இருக்கும் பஞ்சாப் வெர்சஸ் கடைசி இடத்தில் தத்தளிக்கும் டெல்லி டேர்டெவில்ஸ். இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியை, பஞ்சாப் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது. 16 நாட்களாக இந்தியா முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு தோல்வியுற்ற டெல்லி, முதல் முறையாக சொந்த மண்ணான பெரோஷா கோட்லாவில் விளையாடியது. #KXIPvsDD

நாங்கள் இதயங்களுக்காக விளையாடுபவர்கள் என கண்கள் வியர்க்க சிரித்துக்கொண்டே சொல்லும் ராயல் சாலஞ்சர்ஸ் அணியாவது இந்த முறை இரண்டாவது வெற்றியை பதிவு செய்துவிட்டது. ' முழுசா மொட்டையடிச்சுட்டு அப்புறம் முடி இருக்கற மாதிரி வெட்டப் போறீங்களா ' என வடிவேலு கேட்பது போல், ஒவ்வொரு போட்டியிலும் , ஜெய்ப்பது போல் இறுதிவரை சென்று தோற்றுக்கொண்டிருக்கிறது மும்பை இந்தியன்ஸ். மற்றொருபுறம் ' என்னத்த ஆடி என்னத்த ஜெயிச்சு ' மோடில் விளையாடிக்கொண்டிருக்கிறது டெல்லி டேர்டெவில்ஸ். 

#KXIPvsDD

அதிலும் கேப்டன் கம்பீரின் ஃபார்ம் படுமோசம். கொல்கத்தாவுக்காக இருமுறை கோப்பை வாங்கிக் கொடுத்தவர், இந்த முறை சொந்த மாநில அணியை எப்படியேனும் கோப்பை வாங்க வைப்பேன் என கங்கனம் கட்டிக்கொண்டு கொல்கத்தா அணியிலிருந்து , டெல்லி அணிக்கு மீண்டும் வந்தார். முதல் மூன்று ஐபிஎல் தொடர்களில், டெல்லி இருமுறை (2008, 2010 ) ப்ளே-ஆஃப்க்கு தகுதி பெற்றது. ஆனாலும், கோப்பை வெல்ல முடியவில்லை. கடுப்பான டெல்லி அணி நிர்வாகம், கம்பீர் , தில்சான், ஏ பி டி என டீமில் இருந்த அனைத்து ஸ்டார் பிளேயர்களையும் வெளியே அனுப்பியது. விளைவு, 2012ம் ஆண்டைத் தவிர எல்லா ஆண்டுகளிலும், கடைசி இரண்டு இடத்தில் ஒரு இடத்தை தனக்கென ரிசர்வ் செய்து கொண்டது டெல்லி( 2016, 2017 ல் ஆறாம் இடம் ). இந்த முறையேனும் தன் சோகமான வரலாற்றை டெல்லி மாற்றியமைக்குமா என்றால், நேற்றைய போட்டி வரையில் இல்லை என்பது தான் பதிலாக இருக்கிறது. 

கடந்த மூன்று போட்டிகளில் பஞ்சாபை வெற்றி பெற வைத்த கெயில், காயம் காரணமாக இந்தப் போட்டியில் விலக, பஞ்சாபின் ஆஸ்தான வீரர் டேவிட் மில்லர் களமிறங்கினார். டாஸ் வென்ற கம்பீர் வழக்கம் போல , பவுலிங் தேர்வு செய்தார். கம்பீர் அடுத்த அறிவித்த அணி ஃபேன்டஸி லீக், டிரீம் 11 போன்ற ஆன்லைன் போட்டிகளில் விளையாடுபவர்களை அதிர்ச்சுக்குள்ளாக்கியது. ' யூ செலக்டட், யூ ரெஜெக்டட் ' என மில்லுக்கு பெண்களை தேர்வு செய்யும் கவுண்டமணி போல், பயிற்சியாளர் ரிக்கி பான்டிங்கும், கேப்டன் கம்பீரும் புதிதாக ஒரு அணியை எடுத்திருந்தார்கள். அண்டர் 19ல் கோப்பை வென்ற கேப்டன் பிருத்வி ஷா, அவேஷ் கான், இங்கிலாந்தின் லியம் பிளங்கட் , அமித் மிஷ்ரா என மீண்டும் ஒரு முறை பிளேயிங் 11ஐ மாற்றியது டெல்லி. கடந்த போட்டியில் சோபிக்காத ஹர்ஷல் பட்டேல், கிறிஸ் மோரிஸ், ஷபாஸ் நதீம், தமிழக வீரர் விஜய் ஷங்கர் அதிரடியாக Dug Outல் அமர்த்தப்பட்டனர். 

#KXIPvsDD

மாற்றங்கள் நல்ல பலனையே டெல்லிக்கு நல்கின. இந்த சீசன் முழுக்கவே முதல் ஓவரை அட்டகாசமாக வீசும் டிரெண்ட் பௌல்ட், இந்த போட்டியிலும் அதை செவ்வனே செய்தார். கெயில் இல்லாததால், தனது ஃபேவரைட் ஸ்பாட்டான ஓப்பனரானார் ஆஸ்திரேலிய அணியின் ஆரோன் பின்ச். அவேஷ் கான் பந்தில் புல் ஷாட் அடிக்க ஆசைப்பட்டு, ஸ்ரேயாஸிடம் கேட்ச் கொடுத்து 2 ரன்களுக்கு அவுட்டானார். மயாங்க் அகர்வால் இருந்த ஃபார்முக்கு பௌல்ட் ஓவரிலும் மூன்று பவுண்டரிகளை அடித்துத் தள்ளினார். இந்த சீசனின் சிறந்த விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேனான கே. எல் .ராகுல் ஷார்ட் ஃபைன் லெக்கில் பிளங்கட் பந்தில் தன் விக்கெட்டை இழந்தார். பவர் பிளே முடிவில் பஞ்சாப் அணி 2 விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்திருந்தது. 

கருண் நாயர் இரண்டு பவுண்டரிகள் அடித்து செட்டிலானவுடன், பிளங்கட் பந்தில் போல்டானார் மயாங்க் அகர்வால். இந்தப் போட்டியிலாவது ஆட வேண்டிய கட்டாயத்தில் இறங்கினார் யுவராஜ் சிங். ஆனாலும், சொதப்பல்களே அதிகம். யுவராஜின் பவுலிங், பேட்டிங் இரண்டிலும் பெரிதாக எதிரணிகளுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. அதிலும் , பேட்டிங்கில் hand - eye coordinationமிகவும் மோசம். சேவக்கிற்கு ஒரு கட்டத்தில் கண்களில் பிரச்னை வர , கண்ணாடி அணிய ஆரம்பித்தார். அதிலிருந்து தனக்கிருந்த hand - eye coordination முற்றிலுமாக மாறிப்போனது. அந்த பழைய அதிரடி சேவக்கை அவரால் மீட்டெடுக்க முடியவேயில்லை. யுவராஜ் அமித் மிஷ்ராவின் பந்துகளில் கூட திணறினார். 2019க்குப் பின், தன் ஓய்வு குறித்த செய்தியை வெளியிடுவதாக இரண்டு நாட்களுக்கு முன், அறிவித்திருக்கிறார் யுவராஜ். 'UV CAN' என அரங்கம் அதிர ஆர்ப்பரித்த ரசிகன் எல்லாம், ' Its enough UV ' மோடுக்கு வந்துவிட்டனர். காலம் தான் எவ்வளவு கொடுமையானது. இறுதியாக அவேஷ் கான் பந்து வீச்சில் அவுட்டானார் யுவராஜ். 14 (17b 1x4 0x6) SR: 82.35. 

#KXIPvsDD

அனுபவ வீரர் டேவிட் மில்லரும், கருண் நாயரும் சிங்கிள்ஸ், டபுள்ஸ் ஓடி ஸ்கோரை உயர்த்திக்கொண்டு இருந்தனர். 15 ஓவர் முடிவில் 100 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து , தத்தளித்தது பஞ்சாப்.  ' Its time to switch gears' என பஞ்சாப் ரசிகர்கள் கதற , 'அந்த கியரத்தாண்டா ரொம்ப நேரமா தேடறேன்' என தடவிக்கொண்டிருந்தார் மில்லர். டேவிட் மில்லர் அடிக்க வேண்டும் என்பதற்காகவே மிஸ்ஃபீல்ட் செய்துகொண்டிருந்தது டெல்லி. முதலில் எளிதான ஒரு கேட்ச்சை மேக்ஸ்வெல் கோட்டைவிட, அதை ஸ்டம்புக்கு எறிகிறேன் என ஓவர் த்ரோ ஆக்கினார் மேக்ஸ். அடுத்தமுறை கேட்ச்சை  தவறவிட்டது பிருத்வி ஷா. இத்தனை வாய்ப்புகள் அமைந்தும், மில்லர் அதைப் பயன்படுத்தவில்லை என்பது தான் சோகம்.  அடி வாங்கவே அளவெடுத்து செய்தது போல், பந்து வீச தொடங்கினார் மிஸ்ரா. மில்லர் அந்த ஓவரில் அடித்த சிக்ஸ், ஸ்டேடியத்தின் டாப் டெக்கில் விழுந்தது.  விளைவு இந்த ஓவரில் மட்டும், பஞ்சாபுக்கு 16 ரன்கள் கிடைத்தது. பிளங்கட் பந்தில் கருணும், கிறிஸ்டியன் பந்தில் மில்லரும் அவுட்டாக கன்னத்தில் கை வைக்க ஆரம்பித்தனர் பஞ்சாபியன்ஸ். 

கண்ணை மூடிக்கிட்டு பேட்டை சுத்து, என சேவக்கும், கெயிலும் சொல்லி அனுப்பியிருப்பார்கள் போல. ஆண்டிரூ டை, ஒவ்வொரு முறையும் 180 டிகிரி அளவுக்கு பேட்டை வேகமாக சுத்திக்கொண்டே இருந்தார். பாவம், ஒருமுறை கூட பந்து அவரது பேட்டை தொடவேயில்லை. பார்க்கவே பரிதாபமாக இருந்த அந்த பேட்டிங்கை, ஆட்டத்தின் கடைசி பந்தில் முடிவுக்குக் கொண்டு வந்தார் பௌல்ட். பௌல்ட் பந்தை வீச, டை பேட்டை வீச, இரண்டும் எட்டாம் அதிசமாய் உரசிக்கொள்ள, இன்சைட் எட்ஜாகி போல்டானார் . 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்திருந்தது பஞ்சாப். 

#KXIPvsDD

தன் முதல் போட்டியிலேயே அட்டகாசமாக பந்து வீசிய பிளங்கட் ( 4 - 0 - 17 - 3 ) 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். 

மிகவும் எளிய இலக்கு. கம்பீர், மேக்ஸ்வெல், ரிஷப் பன்ட், ஸ்ரேயாஸ் ஐயர் என ஆளுக்கு 40 ரன்கள் எடுத்தால் கூட வென்றுவிடலாம். ஆனால், ஒருவேளை வென்றுவிட்டால், கடைசி இடத்தை, தங்களிடமிருந்து மும்பை பிடுங்கிக் கொள்ளுமோ என்கிற மனநிலையில் விளையாடத் தொடங்கியது டெல்லி டேர்டெவில்ஸ். 

சச்சின் , லாரா, ஸ்டீவ் வாஹ் கைகளில் வலம் வந்த அதே MRF ஸ்டிக்கர் பேட்டுடன் களமிறங்கினான் 18 வயது சிறுவன் பிருத்வி ஷா. முதல் ஓவரில் ஒரு பவுண்டரி என அடக்கி வாசித்த ஷா, ஸ்ரன் வீசிய இரண்டாவது ஓவரில் மூன்று பவுண்டரிகள் அடித்து அசத்தினார். அனைத்து பந்துகளையும் அடித்து ஆட வேண்டும் என ஆர்வத்தில் அன்கீத் ராஜ்பூட் வீசிய பந்தில் போல்டானார் பிருத்வி ஷா.  22 (10b 4x4 0x6) SR: 220.00 

#KXIPvsDD

ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்துவிட்டு, தன் கடமை முடிந்ததென அவுட்டானார் மேக்ஸ்வெல். கேப்டன் கம்பீர் சிறப்பாக செயல்பட்டாலும், பேட்ஸ்மேன் கம்பீர் சில நாட்களாகவே மிஸ்ஸிங். முதல் போட்டியில் 42 பந்துகளில் 55 ரன் எடுத்ததோடு சரி. அதற்குப் பின் எல்லாமே சொற்ப ரன்கள். அதிலும் நேற்றைய போட்டியில் ரொம்பவே தடுமாறினார். டை வீசிய பந்தில், ஃபின்சிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் கம்பீர். 4 (13b 0x4 0x6) SR: 30.76

கவுதம் கம்பீர்

சேஸிங்கில் பவர்பிளே முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழப்பதென்பது , பாதி தோற்றதுக்கு சமம். கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டது பஞ்சாப். ரஹ்மான் பந்தில் ரிஷப் பன்ட் போல்டு, கிறிஸ்டியன் ரன் அவுட் என ஒரு பக்கம் விக்கெடுகள் சரிந்தாலும், ஸ்ரேயாஸ் ஐயர் சரியான விகிதத்தில் அணியின் ஸ்கோரை உயர்த்திக்கொண்டிருந்தார்.  

அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ஸ்ரேயாஸ் 15வது ஓவருக்குப் பின்னர் கட்டை போட ஆரம்பித்தார். சிங்கிளில் மட்டும் தன் கவனத்தை செலுத்த, வெற்றி டெல்லியை விட்டு விலக ஆரம்பித்தது. ஸ்ரன் வீசிய 17வது ஓவர் தான், டெல்லி அணியின் முதல் ஜாக்பாட். ராகுல் டெவேடியா ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடிக்க, அந்த ஓவரில் மட்டும் 15 ரன்கள் கிடைத்தது. ஸ்ரன் வீசிய 19வது ஓவரிலும் பவுண்டரி, சிக்ஸ் என முயற்சிக்காமல், ஸ்ரேயாஸ் தட்டிவிட்ட சிங்கிள் எல்லாம் அட்டூழியம். 19வது ஓவரில் 4 ரன்களை மட்டுமே எடுத்து, பிளங்கட்டின் விக்கெட்டையும் இழந்தது டெல்லி. 

ஸ்ரேயாஸ்

இறுதி ஓவரில் 17 ரன்கள் தேவை. அஷ்வின் ரஹ்மான் மீது நம்பிக்கை வைத்தார். முதல் பந்து டாட் பால். இரண்டாவது பந்தில் ஒரு சிக்ஸ். மூன்றாவது பந்து டாட் பால். நான்காவது பந்தில் டீப் மிட்விக்கெட் திசையில் அடித்துவிட்டு இரண்டு ரன்கள் ஓடினார் ஸ்ரேயாஸ். அடுத்த பந்தில் ஷார்ட் ஃபைன் லெக் திசையில் ஒரு பவுண்டரி. கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தால் மட்டுமே டெல்லி வெற்றி பெற முடியும். லாங் ஆஃப் திசையில் அதை ஸ்ரேயாஸ் தூக்கி அடிக்க, ஃபின்ச் அதை கேட்ச் செய்து, பஞ்சாபை வெற்றி பெற வைத்தார். 

கம்பீர் ஒரு பக்கம் கன்னத்தில் கை வைத்து அமர, ரிக்கி பான்டிங்கும் சோகமாக அமர்ந்திருந்தார். பஞ்சாப் மீண்டும் முதலிடத்துக்கு வந்த குஷியில் ஆர்ப்பரித்தது. 

கடைசி பந்தில் சிக்ஸ் அடித்திருந்தால், டெல்லி வென்றிருக்கும் என்பது வெறும் சப்பைக்கட்டு தான். எளிதாக வென்றிருக்க வேண்டிய ஒரு போட்டியை கடைசி பந்து வரை இழுத்துக்கொண்டு போய் , தன் கழுத்தை தானே அறுத்துக்கொண்டது டெல்லி. ஃபார்மில் இருந்த ஸ்ரேயாஸ் முக்கியமான நான்கு ஓவர்களில் சிங்கிள்ஸ் தட்டிவிட்டு காலம் தாழ்த்தியது,அந்த 4 ரன்களை அடிக்க கம்பீர் 13 பந்துகளை வீணடித்தது, ஃபீல்டிங் சொதப்பல்கள் என டெல்லி இந்தப் போட்டியிலும் திருத்திக்கொள்ள வேண்டியது ஏராளம். 


முதல் இடத்தில் இருந்தாலும், கெயில் இல்லாத பஞ்சாப் தட்டுத் தடுமாறித்தான் டெல்லியைக் கூட வெல்ல வேண்டிய நிலையில் இருக்கிறது என்பதும் இங்கு கவனிக்கப்படவேண்டிய விஷயம்.     


டிரெண்டிங் @ விகடன்