கேப்டன் பதவியிலிருந்து கம்பீர் விலகல்; நெருக்கடியில் ரோகித், கோலி!

ஐ.பி.எல் தொடரில் டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் கேப்டனாகச் செயல்பட்டு வந்த கௌதம் கம்பீர், அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். 

கவுதம் கம்பீர்

நடப்பு ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணியால் வாங்கப்பட்ட கௌதம் கம்பீர், அந்த அணிக்கு கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். இவர், கொல்கத்தா அணிக்காகக் கேப்டனாகச் செயல்பட்டு இரண்டு முறை அந்த அணி, கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். கம்பீர் வந்ததால் டெல்லி அணி புது உற்சாகத்துடன் களமிறங்கியது. ஆனால், இந்தத் தொடரில், டெல்லி அணி தொடர் தோல்விகளால் தற்போது கடைசி இடத்தில் உள்ளது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி அவற்றில் 5 போட்டிகளில் தோல்வியடைந்தது.  

இந்நிலையில் இன்று கம்பீர், ரிக்கி பாண்டிங் இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது கம்பீர், "டெல்லி அணி தற்போது உள்ள நிலைக்கு நான் முழுப் பொறுப்பை ஏற்கிறேன். இதனால் கேப்டன் பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன். இது எனது தனிப்பட்ட முடிவு. இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், அணியை வழிநடத்துவார். டெல்லி அணி தோல்விகளிலிருந்து மீண்டு வரும் என முழுமையாக நம்புகிறேன். இது முழுக்க முழுக்க எனது தனிப்பட்ட முடிவுதான். அணி நிர்வாகம் எனக்கு எந்த அழுத்தமும் தரவில்லை. இந்த முடிவுக்கு இதுதான் சரியான நேரம்” என்றார். 

23 வயதான இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் டெல்லி அணியை வழிநடத்த உள்ளார். கம்பீரின் இந்த அதிரடி முடிவால், தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் பெங்களூர் அணியின் கேப்டன் கோலிக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!