தோனியின் சிக்ஸூடன் பெங்களூருவை வீழ்த்தியது சென்னை!

பெங்களூருக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச தீர்மானித்தது. குயின்டான் டி காக் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் அதிரடியில் பெங்களூரு அணி, 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் வாட்ஸ்சன் 7 ரன்களில் ஆட்டமிழக்க, அம்பதி ராயுடு அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தார்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க நான்காவது விக்கெட்டுக்கு அம்பதி ராயுடுவுடன் தோனி ஜோடி சேர்ந்தார். இருவரும் எதிரணியின் பந்துகளை சிதறடித்தனர். சென்னை அணி 175 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ராயுடு 82 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். அடுத்ததாக ட்வைன் ப்ராவோ களமிறங்கினார். அதிரடியாக ஆடிய தோனி இறுதி ஓவரின் 4-வது பந்தில், அவரது வழக்கமான ஸ்டைலில் சிக்ஸர் அடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

இறுதியில் தோனி, 34 பந்துகளில் 70 ரன்களும் ப்ரோவா 14 ரன்களும் எடுத்தனர். சென்னை அணி 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆறு போட்டிகள் விளையாடியுள்ள சென்னை அணி, 5 போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!