இம்ரான் கானின் 3 வது மனைவி பிரிவுக்கு காரணமான வளர்ப்பு நாய்!

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தனது வீட்டில் வளர்த்து வந்த நாய்களால் அவரின் மூன்றாவது மனைவி பிரிந்து சென்றுள்ளார்.

இம்ரான் கான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான். இவர் தலைமையில் கடந்த 1992-ம் ஆண்டு பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையை வென்றது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், இவர் ஆன்மிகம் மற்றும் அரசியலில் ஈடுபட்டிருந்தார். பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் என்ற கட்சியைத் தொடங்கி, அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கிறார். 

இவர் 1995-ல் இங்கிலாந்தைச் சேர்ந்த தன் காதலியான ஜெமிலா கோல்ட்ஸ்மித்தை மணந்தார். 9 ஆண்டுகளுக்குப் பின் ஜெமிலாவை விவாகரத்து செய்தார். பின்னர் 2015-ம் ஆண்டில், டிவி தொகுப்பாளரான ரேஹாம் கானை மணந்தார். 10 மாதங்களிலேயே இந்தத் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. 

அதன் பின் தனிமையிலேயே இருந்து வந்த இம்ரான் கான் ஆன்மிக வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள முயன்றபோது பழக்கமான புஷ்ரா மனேகா என்ற பெண்ணைக் காதலித்து வந்தார். அதன் பின் கடந்த பிப்ரவரி மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. புஷ்ரா மனேகா விவாகரத்து பெற்றவர். அவருக்கு ஏற்கெனவே ஒரு மகன் உள்ளார்.  திருமணமாவதற்கு முன்னரே இம்ரான் கான் மனேகாவுக்கு சில நிபந்தனைகளை விதித்திருந்தார். மனேகாவின் உறவினர்கள் யாரும் இம்ரானின் வீட்டில் அதிக நாள்கள் தங்கியிருக்க கூடாது என கூறியிருந்தார். 

இருவரின் திருமணத்துக்குப் பின் மனேகாவின் முதல் மகன் இம்ரான் கானின் வீட்டிலே இருந்துள்ளார். இது அவருக்குப் பிடிக்கவில்லை. இதனால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே நடந்த பிரச்னையில் மனேகா, இம்ரான் கான் வீட்டைவிட்டு தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார் எனக் கூறப்படுகிறது.

மேலும், மனேகா முழுவதும் ஆன்மிகத்திலேயே இருந்து வந்ததால் திருமணத்துக்குப் பின் இம்ரான் கான் வீட்டில் இருந்த நாய்களைக் கண்டு எரிச்சல் அடைந்தார். அதனால் இம்ரானின் நாய்கள் வேறு இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தன. தற்போது அந்த நாய்கள் மீண்டும் இம்ரான் கான் வீட்டில் வலம் வருகின்றன. எனவே, நாயால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக மற்றொரு செய்தியும் அந்நாட்டு ஊடகங்களில் உலா வருகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!